5/31/2013

| |

நாமல் யாழ். விஜயம்


நாடாளுமன்ற உறுப்பினரும் நாளை இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ யூன் மாதம் 2 ஆம் திகதி யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு பாடசாலை மாணவர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் ஏற்பாட்டிலேயே இந்த தெரிவு இடம்பெறவிருக்கின்றது.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 15 வயதுக்கு கீழ்பட்ட உதைப்பந்தாட்ட வீரர்கள் 200 பேருக்கு பயிற்சி அளிக்கவுள்ளது. அவர்களில்; 30 பேரை தெரிவு செய்து தேசிய உதைப்பந்தாட்ட அணியில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த பயிற்சிகள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

| |

கோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்
கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் எட்டு சந்தேக நபர்களில் பொலிஸார் மூவர் உட்பட ஆறுபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காண  அடையாள அணிவகுப்பு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. 
அடையாள அணிவகுப்பு கடந்த 22 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும் அன்றையதினம் இடம்பெறவில்லை.
கொழும்பு,கொம்பனிவீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை எடுத்துசென்றுகொண்டிருந்த போது கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸார் உட்பட எட்டுபேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும்  நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி  ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை நேற்று 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.
வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவநேஷ்வரன் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோதே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் நீதிமன்றத்தில் விபரிக்கையில்,

சம்பத் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு நவம் மாவத்தையூடாக வானில் சென்றுக்கொண்டிருந்தபோது போக்குவரத்து பொலிஸ் சீருடையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் வானத்தை நிறுத்தினார்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்திலிருந்து நால்வர் இறங்கினர் அவர்கள் நால்வரும் என்னையும் எனது வாகனத்தின் சாரதியையும் டிப்பென்டர் வாகனத்திற்குள் பலவந்தமாக தள்ளிஏற்றிக்கொண்டுச் சென்றதுடன் பணத்தை அபகரித்துக்கொண்டு கோட்டை பகுதியிலுள்ள பாலடைந்த இடத்தில் எங்களை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர்.
அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்ததுடன் என்னையும்  தாக்கினார் என்றார்.
சந்தேகநபர்கள் எட்டுபேரையும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட ஒருகோடி ரூபாவிலிருந்து 35 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

| |

ரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு


தனது நாட்டின் உரிமை பிரதேசத்தைப் பேணிக்காக்கும் சீனாவின் மனவுறுதி மாறாது. பிலிப்பைன் எந்த வடிவத்திலும் ரென் ஐ தீவை சட்டவிரோதமாக கைப்பற்றுவதை சீனா ஏற்றுக்கொள்ளாது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹொங் லெய் 30-ஆம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
1999-ஆம் ஆண்டில், பிலிப்பைனின் ஒரு போர் கப்பல், தரை தட்டியது என்ற சாக்கில், சீனாவின் நான் ஷா தீவுக்களைச் சேர்ந்த ரென் ஐ தீவுக்கு அருகில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சீனத் தரப்பு பலமுறை பிலிப்பைனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் போர் கப்பல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது, சீனாவின் உரிமை பிரதேசத்தையும், தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் செயல்கள் பற்றிய அறிக்கையையும் மீறியுள்ளது என்று ஹொங் லெய் கூறினார்.
»»  (மேலும்)

| |

பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு


அமெரிக்க ஆள்ளில்லா விமானம் 29ஆம் நாள் விடியற்காலை பாகிஸ்தானின் வட வஜிரிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தலிபானின் 2வது பெரிய தலைவர் ஹக்மன் தாக்குதலில் உயிரிழந்தார் என்று சில செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் தலிபான் இத்தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஹ்மன், பாகிஸ்தான் தலிபானின் 2வது மிக முக்கிய தலைவர். அவர் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிடுவதில் வல்லவர். 2010ஆம் ஆண்டு அவரைக் கைது செய்ய, அமெரிக்க அரசு 50 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது என்று அமெரிக்க கொலம்பிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

5/24/2013

| |

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு

பிரான்சை தளமாகக்கொண்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த புலம்பெயர் மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறுமைநிலையில் உள்ள பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற பகுதியுமான 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இலவச பாடவகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை இடம்பெற்றன.
நேற்று பி.பகல் 2 மணியளவில் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஆலோசகர் பி.தயாபரன்; தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்தோடு, மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) ஞா.சிறிநேசன் , பட்டிப்பளை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி ந.தயாசீலன், 40 வட்டை விபுலானந்தா வித்தியாலய அதிபர் மற்றும் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் பிரதிஅதிபர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மாவடிமுன்னமாரி பகுதி மக்களும் 40 வட்டை பகுதிமக்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயம், மற்றும் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களை இணைத்து அந்த இலவச பாட வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பணிகளை முன்னெடுக்கவுள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஏனைய நாடுகளில் உள்ள எமது மண்ணின் உள்ளங்களையும் இணையுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
»»  (மேலும்)

| |

முறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அமோக வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனை கிராமத்தின் பொது மக்கள் ஒன்றினைந்து முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு இன்று (19.05.2013) அமோக வரவேற்பளித்தார்கள்.
முறக்கொட்டன்சேனை முத்து மாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜை ஆராதனையில் கலந்து கொண்டதுடன் பின்னர் பிரதான வீதி ஊடாக பொது மக்கள் சூழ அழைத்துச் சென்று மட்/முறக்கொட்டான்சேனை ஸ்ரீ ராம கிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி நிகழ்வு வரை அழைத்துச் சென்றார்கள்.
கிராமத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் குறித்த மகஜரையும் முன்னாள் முதல்வரிடம் முறக்கொட்டான்சேனை பொது மக்கள் சார்பில் கையளிக்கப்பட்டது. உடனடியாக முறக்கொட்டான்சேனை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்ற சில குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ் வரவேற்பு நிகழ்வில் முறக்கொட்டன்சேனை முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மீன்பிடி சங்கத்தின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகத்தினர், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முறக்கொட்டான் சேனை இ.கி.மிசன் வித்pயாலயத்pன் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி.
வித்தியாலயத்தின்; அதிபர் சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இல்லவிளையாட்டு போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் மற்றும் சிறப்பு அதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி குணலிங்கம் மற்றும் கல்குடாவலய கல்வி அதிகாரிகள் பிரதேசத்தின் பொது அமைப்புக்கள் பொது மக்கள் எனப் கலரும் கலந்து கொண்டார்கள்.
 
»»  (மேலும்)

5/21/2013

| |

மட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்!


மட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கலை,கலாசார நிகழ்வுகள்,நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தமிழ் தொலைக்காட்சிகள் இலங்கையில் உள்ளபோதும் மட்டக்களப்பின் நிகழ்வுகள் பெரும்பாலும் இருட்டடிக்கப்பட்டே வந்திருக்கின்றது.
இந்நிலையில் உலகலாவிய ரீதியிலும் வடக்கின் அனைத்துப்பகுதியிலும் தமது சேவையை மேற்கொண்டுவரும் டான் தொலைக்காட்சி சேவை நிலையம் இந்த மட்டுஒளி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.
ஆஸ்க் கேபிள் விசனின் ஒரு அங்கமாகவுள்ள மட்டுஒளியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. ஆஸ்க் கேபிள் விசனின் தலைவர் குகநாதன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்பவிழாவில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ,  மற்றும் படை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆஸ்க் கேபிள் விசனின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன.
ஆஸ்க் கேபிள் விசன் இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஊடக அமைச்சு, தகவல் திணைக்களம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டு கேபிள் மூலமாக இதனை பயன்பெறும் வகையில் ஒழுங்கமைத்துள்ளதாக அதன் ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மக்கள் கடந்த காலங்களில் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த சேவையை இங்கு ஆரம்பித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கேபிள் தொலைக்காட்சி சேவையூடாக இந்த மட்டுஒளியை கண்டுகளிக்கலாம் என தெரிவித்த தலைவர், தற்போது மட்டக்களப்பு நகரம் மற்றும் இருதயபுரம் தொடக்கம் முகத்துவாரம் பகுதியான அனைத்துப்பகுதிகளிலும் மற்றும் கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளிலும் இதன் சேவைகள் வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
தற்போது கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையூடாக இதன் இணைப்பு வேலைகள் இடம்பெற்றுவருகின்றன. களுதாவளை வரையில் இதன் இணைப்பு சேவை கல்லாறில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமைபெறுமிடத்து அப்பகுதியில் உள்ள அனைவரும் கேபிள் சேவை ஊடாக மட்டு.ஒளியை கண்டுகளிக்கலாம் என ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பான சேவைகளை பெறவிரும்புவோர் எமது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த அவர் தங்களது பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுஒளியில் காண விரும்பினால் அலுவலகத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் எமது செய்தியாளர்கள் அந்த நிகழ்வை பதிவுசெய்து ஒளிபரப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

5/20/2013

| |

காற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம்பியன்

மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்டச் சங்கம் மட்டிக்கழி கதிரொளி வளையாட்டுக் கழகத்தின் அனுசணையுடன் 2013.05.18ம்,19ம் திகதிகளில் மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுமைதானத்தில் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் காற்பந்துப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
 இவ் விளையாட்டுப் பொட்டியில் மட்டக்களப்பு சீலாமுனை “யங்ஸ்டார் வளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கதிரொளி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
30 அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப்போட்டியில் நேற்றய தினம் 18ம் திகதி முதலாவது சுற்றுப்போட்டியும், இன்று 19ம் திகதி  முறையே இரண்டாவது சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் சீலாமுனை யங்ஸ்டார் அணி முதல் சுற்றில் சினொளி அணியினையும், இரண்டாம் சுற்றில் கோப்ரா அணியினையும், காலிறுதியில் இக்னேசியஸ் அணியையும், அரையிறுதியில் கோல்ட் பிஸ் அணியையும், இறிதிப் போட்டியில் ரெட்ணம்ஸ் அணியையும் எதிர்கொண்டு அவ்வணிளை வெற்றிபெற்று சம்பியன் அணியாக தெரிவாகியுள்ளது.
இவ் யங்ஸ்டார் அணியினர் கடந்த பெப்ரவரி மாதம் திராய்மடுவில் நடந்த காற்பந்துப் போட்டியிலும் முதலிடத்தை வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

கிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013

கிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ. நிசாம் தலைமையில்  நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின்  14 கல்வி வலயங்களிலுள்ள  பாடசாலைகளைச் சேர்நத சுமார் 550 மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர். 
இப் போட்டி நிகழ்வுகளில் மேலதிக மகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.மனோகரன் உட்பட வலயக் கல்வி;ப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், நடுவர்கள், இணைப்பாளர்கள் என பலர் இப் போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 
இந் நிகழ்வு காரணமாக மூதூர் கல்வி வலயம் பெரு விழாக்கோலம் பூண்டிருந்தமையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது
»»  (மேலும்)

5/19/2013

| |

நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” வை விரட்டியடிக்க வேண்டும் . – பத்தேகம சமித தேரர்

images(ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாண சபை உறுப்பினர் – பத்தேகம சமித தேரருடன் “ஜனரல” பத்திரிகை நடத்திய நேர்காணல்) - தமிழில் ஏ எம். எம் முஸம்மில்- 
ஜனரல :- தேரரே, நாட்டில் தற்போது மேலோங்கியிருக்கும் இனவாதம், மதவாதம் பற்றி உங்கள் கருத்து என்ன ?
சமித தேரர் :- இது மிகவும் பிழையானதொரு நிலைமை என்பதே எனது கருத்தாகும். இந் நிலைமை நாட்டிட்குகந்ததல்ல. இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும் .ஆகவே ஒரு இனம் இன்னொரு இனத்தை பார்த்து கர்ஜிக்க முடியாது. தற்போது நடந்துகொண்டிருப்பது பிழையானதொரு முன்னுதாரணமாகும்.
ஜனரல :- பல்லின சமூகமொன்றில் பிரதான சமூகம் என்று கருதப்படக்கூடிய ஒரு சமூகத்திற்கு முக்கியத்துவமளிக்கபட வேண்டும் அல்லது அவர்களுக்கு கூடுதல் இடமளிக்கப்படவேண்டும் என்றதொரு நிலைபாடுள்ளதா ?
சமித தேரர் :- எந்தவொரு சமூகத்திலும் அப்படியிருக்க கூடாது. மனிதர்கள் எவ்விடத்திலும் சமமானவர்களே. அந்த சம உரிமை எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டியதே. பிரச்சினைகளிருந்தால் பேசித் தீர்கப்படவேண்டும் .
ஜனரல :- நீங்கள் இவ்வாறு கூறினாலும் சிலர் சந்தி சந்தியாக கூட்டங்களை நடாத்திக்கொண்டு இனத்தை பற்றியும் மதத்தை பற்றியும் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துக் கூறுகிறார்களே …
சமித தேரர் :- நான் நினைக்கின்றேன் நீங்கள் “ பொது பல சேனா “வை பற்றி கூறுகின்றீர்கள்
ஜனரல :- ஆம் ,அவர்களை பற்றியும் கதைப்போம் .
சமித தேரர் :- “ பொது பல சேனா ” என்பவர்கள் இந்த சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதே வேலை இந் நாட்டிற்கு புதிதாக குடிபெயர்ந்துள்ளதொரு அமைப்பாகும், அவர்களின் நடவடிக்கைகள் “அல் கைதா” வினரை ஒத்ததாக உள்ளது . இது பௌத்த சம்பிரதாயம் அல்ல. ஆகவே சம்பிரதாயதிற்கு முரணாக வன்செயலை தூண்டி தீவிரமாக செயற்படகூடிய இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
ஜனரல :- நீங்கள் இவர்களை அல் கைதாவினர் போல் செயற்படுவதாக குறிப்பிட்டாலும் , இவ்வமைப்பிலும் முன்னணியில் செயற்படுபவர்கள் பிக்குகள் சிலரல்லவா…?
சமித தேரர் :- ஆம் தெளிவாகவே இவர்கள் சம்பிரதாயதிற்கு முரணான கலகக்காரர்கள் தான் .
ஜனரல :- அப்படியென்றால் “ பொது பல சேனா ” வினர் கலகக்காரர்கள் .?
சமித தேரர் :- ஆம் தெளிவாகவே
ஜனரல :- ஆனாலும் இச்சமூகம் இவர்களை புறக்கணிக்கவோ ஏற்றுக்கொள்ளாமலோ இல்லையே ….
சமித தேரர் :- இல்லை , இந்நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அந்தஸ்துள்ளவர்கள் இவர்களை புறக்கணித்தே உள்ளார்கள் . மல்வத்து மகாநாயக்க தேரர்கள் , கெலனி விகாரையின் நாயக்க தேரர் ,இத்தே பான நாயக்க தேரர் போன்ற இந்த நாட்டின் முக்கிய தேரர்கள் இவர்களை புறக்கணித்துள்ளார்கள். பௌத்த சமூகத்திலுள்ள உண்மையான பௌத்தர்கள் இது போன்றவர்களை சுற்றி அணிதிரள மாட்டார்கள் . இனவாதிகள் சிலபேர்தான் இவற்றை செய்கிறார்கள் .இவற்றை  கவர்பவர்களும் இனவாதிகள் தான் . இது போன்ற இனவாத செயற்பாடுகள் கொஞ்ச காலத்திற்கே தாக்கு பிடிக்கும் .
ஜனரல :- எவ்வாறாயினும் , பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், இந் நாட்டில் அடிப்படைவாதம் செயற்படுவதாகவும் கூறுகின்றார்கள் . அப்படியான அச்சுறுத்தலோ அடிப்படைவாதமோ இந் நாட்டில் செயட்பாட்டிலுள்ளதா ?
சமித தேரர் :- கடந்த காலநெடுகிலும் இவ்வாறான கதைகளை கூறினார்கள். தமிழ் அடிப்படை வாதமொன்றை பற்றி ஆரம்பத்தில் கூறினார்கள், அதன்பிறகு கிறிஸ்தவ அடிபடைவாதமொன்று உள்ளதாக கூறிக்கொண்டு ஹெல உறுமய போன்றவர்கள் தோற்றமெடுத்தார்கள், சோம தேரரை கொன்றதாக கூறினார்கள் , கத்தோலிக்க மயமாக்கள் செயற்திட்டமொன்று செயற்படுவதாகவும், பௌத்த  மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதென்றும்   அதற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்றும் பல கதைகளை கூறிக்கொண்டு தான் இவர்கள் வருவார்கள் , அதன் பின் பாராளுமன்றதிட்கு போவார்கள். அப்படி
கூறிக் கொண்டு சோம தேரரின் மரணத்திற்கு மேலால் பாராளுமன்றம் சென்றவர்கள் , பாராளுமன்றம் சென்ற பின் ஆகக் குறைந்தது சோம தேரர் மரணித்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்று கூட தேடி பார்கவில்லை . இவர்கள் பாராளுமன்றம் சென்ற பிறகு எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் . அதன் பிறகு மக்களை அச்சுறுத்தி தமக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும் ஒரு போக்கையும் அண்மையில் நாங்கள் கண்டோம். நாட்டு மக்களை அச்சமூட்டி , பயமுறுத்தி தமக்கு தேவையான கலகமொன்றை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகுமென்றே நான் திடமாக நம்புகின்றேன் .
ஜனரல :- இனவாத , மதவாத செயற்பாடுகளும் இவர்களின் அரசியல் சம்பிரதாயத்தின் ஓர் அங்கமென்றா நீங்கள் கூற வருகின்றீர்கள் .
சமித தேரர் :- அவ்வாறான அறிகுறிகளே தென்படுகின்றன .
ஜனரல :- இது போன்ற பிரவேசங்கள் சக்திவாய்ந்ததாக காணப்படுவதாக எந்த அடிப்படையை வைத்து  கூறுகின்றீர்கள் .
சமித தேரர் :- இரண்டு காரணங்கள் உள்ளன . ஒன்று தான் பாதுகாப்புச் செயலாளரின் நேரடி ஆதரவு இவர்களுக்குண்டு என்பதை ஆதாரத்துடன் நாம் கண்ணுற்றோம் . ஆகவே இந்த இனவாத கும்பல் அந்த நிழலில் இருந்து கொண்டே இவ் அநியாயங்களை செய்வதாகவே நாங்கள் காணுகின்றோம். ஏனென்றால் இந் நாட்டு மக்கள் உண்மையாகவே முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் உள்ளன . இந் நாட்களில் மக்கள் முகம்கொடுத்துள்ள வாழ்க்கை செலவு போன்ற உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக வேண்டி,  இது போன்ற தேவைக்கு உதவாத வேலைகளின் மூலம் மக்களின் எண்ணங்களை திசை திருப்பலாம் என்று அரசாங்கம் எண்ணுவதாகவே எனக்கு நினைக்க தோன்றுகின்றது . அநேகமாக அரசாங்கங்களின் சுபாவமும் இதுதான் . ஆனால் இது மிகவும் கெட்ட முன்னுதாரணமாகும். மிகவும்
தெளிவான விடயம் என்னவென்றால் நாங்கள் நாளுக்கு நாள் அராஜகத்தை எதிர் நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம்.
ஜனரல :- இன்னொரு புறத்தால் இஸ்லாத்திற்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் தற்போது பௌத்த விகாரைகளுக்குள்ளும் பரவியுள்ளது.?
சமித தேரர் :- இதுவும் இப்போதுள்ள மோசமான ஊழல்மிகுந்த சமூக அமைப்பில் காணப்படும் பாரதூரமான நோயறிகுறி ஒன்றேயாகும் . இறுதியில் இந்த நிலை மக்கள் மத்தியில் பாரியதொரு பதட்ட நிலையை தோற்றுவிக்கும் . விசேடமாக பௌத்த தர்மம் சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு மதமாகவே உலகத்தால் அறியப்பட்டுள்ளது . ஆனால் தற்போது நடைபெறும்  விடயங்களால் பௌத்த மதத்தின் அடிப்படை அடையாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது , இந்த தீவிரவாத செயற்பாடுகளை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் . அதே போல் மிகவும் அவதானத்துடனேயே இப்பிரச்சினைகளை நாம் அணுக வேண்டியுள்ளது.
ஜனரல :- “ மிகவும் அவதானத்துடனேயே இப்பிரச்சினைகளை நாம் அணுக வேண்டியுள்ளது ” என்பதன் கருத்து இரண்டு பக்கங்களையும் அல்லது இரு பிரிவினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதா.?
சமித தேரர் :- இந்த தருணத்தில், எந்தவொரு சமயத்திற்கோ , இனத்திற்கோ எதிராக அவதூறுகளை கூறவோ அவர்களின் சமய கிரியைகளை கொச்சை படுத்தவோ வேண்டாம் என்று பணிப்புரைகளை வழங்கவும் , தடைகளை ஏற்படுத்தவும்    அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு அல்லது கடப்பாடுள்ளது. இந் நாட்டின் யாப்பின் மூலம் இது வலியுறுத்தப் பட்டுள்ளது. மறுபுறத்தில் எல்லா சமயத்தவர்களும் இன்னொருவருக்கோ அல்லது  சமயத்திற்கோ இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவேண்டும் . பிரச்சினைகள் கருத்து முரண்பாடுகள் தோன்றும் பொது அவற்றை பேசித்தீர்த்து கொள்ள வேண்டும் .
ஜனரல :- ஆனாலும் சந்திக்கு சந்தி நடைபெறும் மக்களை ஆத்திரமூட்டுகின்ற செயற்பாடுகளை தடுக்க வேண்டிய சவால்களை ஏற்க இதுவரை  எவரும் முன்வர வில்லை. நாளுக்கு நாள் இவர்களை உற்சாகமூட்டும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன .?
சமித தேரர் :- நடைபெறும் இவ்விடயங்களுடன் எவ்வகையிலும் எனக்கு உடன்பட முடியாது. இவை துடைத்து எறியப்பட வேண்டும் . அப்படியல்லாமல் சுமுகமானதொரு நிலைமையை தோற்றுவிக்க முடியாது,
 ஜனரல :- இனவாதமோ  ,  மதவாதமோ  அல்லது ஏதாவதொரு அடிப்படைவாதமோ , ஒரு அரசியல் “ப்ராஜெக்ட்” ஆக இருக்க முடியாதா ?  
சமித தேரர் :- எது எவ்வாறு இருப்பினும் நடக்கும் இச்செயற்பாடுகள் அரச அனுசரணையுடன் நடப்பதாகவே தெரிகிறது, அரசாங்கத்தின் அனுசரணையின்றி இவ்வளவு தூரம் இவற்றை இவர்களால் செய்ய முடியாது, ஏனென்றால் இவர்கள் விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் பங்களிப்பை நாங்கள் நேரடியாகவே கண்டுள்ளோம். நிச்சயமாக அது செய்யக்கூடியதொரு செயற்பாடல்ல. ஆனாலும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது .
ஜனரல :-  அதாவது அரசியல் இலாபத்திற்காக ??
சமித தேரர் :- ஆம் இருக்கலாம் .
ஜனரல :- அப்படியென்றால் இந்த  பிக்குகள் செய்வது அரசாங்கத்திற்கு தேவையானதை , பதட்ட நிலைமையை அல்லது கலகத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை அரசாங்கதிட்கே தற்போது ஏற்பட்டுள்ளது ?  
சமித தேரர் :- எல்லோரும் இவ்வணியில் சேர மாட்டார்கள் இனவாதிகள் தான் இவர்களுடன் இணைந்து அனாவசிய செயற்பாடடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் . நுணுக்கமாக இவற்றை விளங்க வேண்டும் .
ஜனரல :- இவ்வாறு தான் ஒரு பௌத்தன் கூட இல்லாத பிரதேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவுகின்றார்கள் . சமய விரோதிகள்  என்று கூறிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து மிரட்டுகின்றார்கள் . சமய நெறிகளின் படி உண்ணுவது குடிப்பது கூட இப்போது பிரச்சினையாக்கப்பட்டுள்ளது , இது பற்றி என்ன கூறுகின்றீர்கள் .
சமித தேரர் :- பௌத்த மதம் ஒரு ஆக்கிரம போக்கை கொண்டதொரு மதமல்ல. வரலாற்று நெடுகிலும் நாங்கள் பாவித்த ஒரே ஆயுதம்தான் “அறிவு”.எனும் ஆயுதம். மடமை,மூட நம்பிக்கைகளை தகர்தெரிவதே எங்கள் நோக்கமாக இருந்தது. எந்த சந்தர்பத்திலும் ஆக்ரம போக்கில் பௌத்த மதம் செயற் பட்டதில்லை.
இன்னுமொருவிடயத்தை சுட்டிக்காட்ட நினைக்கின்றேன் . பௌத்த சின்னங்களை தனிப்பட்ட குறிக்கோள்களுக்காக சிலர் உபயோகிக்கின்றனர் . இவ்வாறான வேலைகள் யார் செத்தாலும் தவறானதாகும் . இது மனித உரிமைகளுகெதிரான செயற்பாடுகளாகும்.  பௌத்த தர்மத்திற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிகின்றேன் , பௌத்தபிக்கு சமூகத்திலிருந்து இவற்றை துடைத்தெரிய வேண்டும் . இவற்றை வளரவிடகூடாது . பௌத்தம் சம்பந்தமான சம்பூர்ண அறிவு இவர்களுக்கு கிடையாது . பொய்யான வாதங்களை முன்னிறுத்தி இச் சமூதாயத்தை சீரழிக்க வேண்டாம் என்று இவர்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்
ஜனரல :- என்றாலும் தேரரே ! நீங்களும் அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துபவர்கள், அரசாங்கத்தை பிரதிநிதிதுவபடுதும் அநேகமான இடதுசாரி கருத்துடையவர்களின் கூற்று,” நாங்கள் அரசாங்கதிற்குள்ளிருந்து கொண்டு இச்செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம்” என்பதாகும். ஆனாலும் இக்கூற்றுக்கள் வெறும் சொற்களாக மட்டுமே நாம் காணுகின்றோம் .  
சமித தேரர் :- ஆம், இலங்கை சம சமாஜ கட்சியையே  நான் பிரதி நிதிதுவப்படுதுகின்றேன் , கட்சியின் கருத்தையே நான் இப்போது முன்வைக்கின்றேன் . எங்களின் அரசியல் உயர் பீடம் அதற்கான அனுமதியையும் பொறுப்பையும்  எனக்கு தந்துள்ளது . அதையே நான் இப்போது செய்கின்றேன்.
ஜனரல :- நான் உங்களிடம் கேட்பது உங்களின் தனிப்பட்ட பொறுப்பை பற்றி  அல்ல . உங்களின் கூட்டன சமூகப் பொறுப்பை பற்றி .
சமித தேரர் :- நாங்கள் இருப்பது ஒரு கூட்டாட்சியில், ஒரு கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும் போது சிலவிடயங்களை பிரதிநிதிதுவப்படுத்த முடியாத நிலைமைகள் சில  வேளைகளில் ஏற்படுவதை நான் ஏற்றுகொள்கிறேன் . சிலவிடயங்களில் எதிர் காலத்தில் இதைவிட சிந்தித்து தவறுகளை சரி செய்து கொண்டு செயற்படவேண்டிய தேவையுள்ள அதே வேளை ,நாசத்தை உண்டு பண்ணக கூடிய விடயங்களுக்கு எதிராகவும் செயற்பட வேண்டும் என்பதையும் நான் இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன் .
ஜனரல :- நீங்கள் கூறுவது போல் உங்களால் , “ சிலவிடயங்களை பிரதிநிதிதுவப்படுத்த முடியாத நிலைமைகள் சில  வேளைகளில் ஏற்படுவதால்” நாட்டில் தற்போது செயற்படுத்தபடும் “நாசத்தை உண்டு பண்ண கூடிய விடயங்களுக்கு” ஒரு அங்கீகாரம் கிடைகின்றதல்லவா ?
சமித தேரர் :- இக்காரணி  பொதுவாகத்தான் தாக்கம் செலுத்துகின்றது. 18 வது யாப்பு திருத்ததிற்கு நாங்கள் சார்பாகவே வாக்களித்தோம், ஆனால் கட்சிக்குள் அதற்கு பாரிய எதிர்புள்ளது. அதேபோல் தான் பிரதம நீதியரசரின் பிரச்சினையின் போது எங்களின் ஒரு உறுப்பினர் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தார், அதே வேளை எங்களின் அமைச்சர் எதிராக வாக்களித்திருந்தார் . கூட்டாச்சியிளிருக்கும் போது இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும், வரையறைகளுக்கு கட்டுபடவேண்டியதுமான   சந்தர்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றது . விஷேடமாக பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூட கதைக்க மாட்டார்கள் .மௌனம் காப்பார்கள் . இது மஹா நாயக்க தேரர்கள் மாத்திரம் கதைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று அநேகமானவர்கள் நினைகின்றார்கள் . எல்லோரும் ஓரணியில்  சேர்ந்து எதிர்ப்பைகாட்டி ,ஆர்பாட்ட ஊர்வலங்களை நடத்தி இந்நடவடிக்கைகளை நாம் கட்டுபடுத்த வேண்டும் .
ஜனரல :- இந்த விடயத்தில் பிக்குகள் சமூகத்திற்கும் பாரியதொரு பொறுப்புள்ளதல்லவா ?
சமித தேரர் :-  ஆம் அதனால் தான் நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் , மஹா நாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
ஜனரல :- ஆனால் இது தனித்திருந்து எதிப்பு தெரிவிப்பது போல் தெரிய வில்லையா ?
சமித தேரர் :-  நான் முக்கியமான பல தேரர்களுடன் இதுவிடயமாக கதைத்துள்ளேன், கண்ணியமிக்க தேரர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்காக வெட்கப்படுகிறார்கள் , பேய் பிசாசுகளைபோல் நடந்துகொள்ளும் போது எவரும் பயபடுவார்கள் . நான் அப்படி கூறுவதால் இங்கு நடப்பவைகளை நியாயப்படுத்த வரவில்லை . அதே வேளை நான் இவர்களுக்கு எந்த வகையிலும் பயப்பட மாட்டேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், தைரியமாக முன் வந்து இவர்களின் செயற்பாடுகளை அடக்கிவிடவேண்டும் . என்னால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான் .
ஜனரல :- தேரரே , உண்மையில் இது சிங்களவர்களின் நாடுதானா ? இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமான நாடா ?
சமித தேரர் :- இங்கிலாந்து  ஆங்கிலேயருக்கு சொந்தமான நாடு என்று சொல்வார்கள். ஆனால் லண்டன் நகருக்கு சென்று பாருங்கள்,  எத்தனை வகையான மொழிகளை பேசுபவர்களும், எத்தனை வகையான இனங்களை சேர்ந்த மக்களும் அங்கே வாழுகின்றார்கள் என்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும் .  ஆனால் மூன்றே மூன்று இன மக்களே இங்கு வாழுகின்றார்கள் , அவர்கள் இரண்டு மொழிகளையே பேசுகின்றார்கள் .
இன்று ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடு என்று உலகில் எந்த நாடுமே இல்லை . மேன்மையாக வேண்டியதும் மேன்மையாக கருதப்படவேண்டியது மனிதர்கலல்லாமல் மதமோ இனமோ அல்ல .
 -ஜனரல- ஆஷிகா பிராக்மன  *நன்றி காத்தான்குடி .கொம் 
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போடி அவர்கள் காலமானார்

மட்டக்களப்பு கன்னங்குடாவைச்சேர்ந்த நூறு வயதைத் தாண்டிய முதுபெரும் அண்ணாவியார் திரு.கணபதிப்பிள்ளை நோஞ்சிப்போடி அவர்கள் 18.05.2013 ஆந் திகதி சனிக்கிமை காலமாகினார். அன்னாரின் பூதவுடல் தற்போது  வவுணதீவு பிரதேசத்திலுள்ள இலுப்படிச்சேனை குருந்தையடி கிராமத்திலுள்ள அன்னாரது இருப்பிடத்தில் அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவியார் க.நோஞ்சிப்போடி அவர்கள் 1913.02.01 ஆந் திகதி கன்னங்குடாவில் பிறந்துள்ளார். கூத்துப் பாரம்பரியம் மிக்க கிராமத்தில் வாழ்ந்த இவர் தனது 17 ஆவது வயதில் அண்ணாவியாராகத் தகுதிபெற்றுள்ளார். தற்போது மட்டக்களப்பில் வாழ்ந்தகொண்டிருக்கும் அண்ணாவிமார்களுள் நூறு வயதைக் கடந்த வயதில் மூத்தவராகவும் வாழ்ந்தவர்.
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் வடமோடி, தென்மோடி கூத்துப் பாரம்பரியங்கள் செழுமையாக வளர்ந்து இன்று வரை இக்கூத்துப் பாரம்பரியம் மிகவும் வீரியத்துடன் திகழ்வதற்கு பங்களிப்பு வழங்கிய முதன்மைக் கூத்தராக இவர் விளங்கியுள்ளார்.
இவ்வாறு மட்டக்களப்பு பாரம்பரிய கூத்துக்களிலும் பாரம்பரிய உள்ளுர் அறிவு முறைகளிலும் மிகவும் புலமைபெற்றுத் திகழ்ந்த முதுபெரும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை நோஞ்சிப்போடியாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புக்களுள் ஒன்றாகும்
»»  (மேலும்)

5/15/2013

| |

மண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர் தேவை மகளீர் அபிவிருத்தி அமைப்புக்கள் கோரிக்கை

80% தமிழர்களை கொண்ட மண்முனைப்பற்று பிரதேசத்திற்க்கு அரசின் தமிழ் அரசியல் தலைமயான சி.சந்திரகாந்தன் பிரதி அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாவுடன் இணை அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என மண்முனைப்பற்று மகளீர் அபிவிருத்திச் சங்கங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்க்கு மனு அனுப்பியுள்ளனர். இம்மனுவின் பிரதிகள் பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்ஷவிற்க்கு பொது நிருவாக சேவைகள் அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவாது :
அதிமேதகு ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.
ஐயா!
திறமையான பக்கச்சார்பற்ற பிரதேச செயலாளர் திருமதி.வாசுகி அருள்ராசா அவர்களை இடமாற்ற வேண்டாம்
எமது மண்முனைப்பற்றுப் பிரதேசம் 80மூ தமிழர்களையும் 20மூ முஸ்லிம்களையும் கொண்டது ஆகும். எமது பிரதேசத்திற்கு அபிவிருத்திக்குழுத் தலைவராக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களை நியமித்துள்ளதன் காரணத்தால் நாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.
 மண்முனைப்பற்றுப் பிரதேச அரச தயார் காணிகள் காத்தான்குடி முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுவது.
 மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் காத்தான்குடி நகர சபையின் அதிகரித்த தலையீடு.
 எமது ஆரையம்பதி எல்லைகளை காத்தான்குடிக்கு சார்பாக மாற்ற முற்படுவது.
 தங்களின் மேலான ‘மஹிந்த’ சிந்தனையின் கீழான வேலைத்திட்டங்கள் ஒரு பக்கச்சார்பான நிதி ஒதுக்கீடு உதாரணமாக:-
தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 76 மில்லியன் ரூபாய்களில் 03 முஸ்லிம் கிராம சேவைகர் பிரிவுகளுக்கு 40 மில்லியன் ரூபாய்களும் ஏனைய 24 தமிழ் கிராம சேவகர் பிரிவுகளுக்கு 36 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனால்  மக்கள் தங்களின் ஆளும் அரசுக்கே வசைபாடுகின்றனர்.
 இதற்கு மேலாக மிகத் திறமையான பக்கச்சார்பற்ற பிரதேச செயலாளர் திருமதி.வாசுகி அருள்ராசா அவர்களை எந்தவித குற்றச்சாட்டுமின்றி தமது மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்திற்காக இடமாற்றம் செய்ய முனைவது எமது பிரதேசத்திற்கு சுமார் 01 வருடங்களுக்கு முன்னர் பிரதேச செயலாளராக பொறுப்பெடுத்து மிக மிக நேர்மையாக மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் வலுவாக்கத்திற்காகவும் பாடுபடும் இவரை இடமாற்றாது உண்மை நிலையினை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
 மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களால் எமது பகுதி சீர்கெடாமல் பாதுகாப்பதற்கு 20மூ முஸ்லிம்கள் உள்ளதால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுடன் இணைப்பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக 80மூ தமிழர்களின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களையும் நியமிக்குமிடத்து இரு இனங்களையும் சமமாக தங்களின் மஹிந்த சிந்தனைக்கு அமைய அபிவிருத்தி செய்ய முடியும் என பணிவுடன் தெரிவித்துக்கொள்வதுடன் தயவு செய்து இதனை நடைமுறைப்படுத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
- நன்றி​-
மேலதிக நடவடிக்கைகளுக்காக
கொளரவ பசில் ராஜபக்ஷ, பொருளாதா அபிவிருத்தி அமைச்சர்.
கௌரவ.றுனுது.செனவிரத்ன, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்.
கௌரவ.கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
»»  (மேலும்)

| |

மட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம்.

மட்டு மாநகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானை தெரிவு படுத்தி அது தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் அபிப்பிராயங்களை பங்குதாரர்களிடம் கேட்டறியும் விசேட கலந்துரையாடல் நேற்று(14.05.2013) மட்டு மாநகர சபை மண்டபத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
2030ம் ஆண்டளவில் முழுஅளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி திட்டமானது மட்டு மாநகரில் அமையப்பெறவேண்டிய சகல நிருவாக மற்றும் முக்கிய கட்டிடங்கள் ,விளையாட்டு திடல்கள்,வர்த்தக கட்டிங்கள், நூலகம், அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா,கலாசார கலைநிகழ்வுகளை மேற்கொள்வதற்கான திறந்த வெளி அரங்கு. இலகு போக்குவரத்து, வாவியை அழகுபடுத்தல், மட்டு நகரிலுள்ள டச்கோட்டையை அழகுபடுத்தல், மட்டக்களப்பிற்கே உரித்தான முக்கிய கலைஅம்சங்களை பாதுகப்பதற்கா அமைவிடம், பாடசாலை விளையாட்டு மைதானம், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குகளை மேற்கொளவதற்கான ஏற்பாடுகள்,வைத்தியசாலை, சிறைச்சாலை உள்டங்கலாக பல முக்கிய விடங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மட்டு மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்தகின்ற முக்கிய பங்கு தாரர்களிடம் அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறியும் முகமாக மேற்படி இக் கலந்துரைடால் சுமார் 4 மணிநேரம் இடம் பெற்றது. குறித்த மாஸ்டர் பிளானை நகர அபிவிருத்தி அதிகார சபையும் மொறட்டுவ பல்கலை கழகமும் இணைந்து நடாத்தி இருந்தமை குறிப்;பிடத்தக்கது.
இக் கலந்துரையடாலில் முன்னாள் முதலமைச்சரும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி ஆணையாளர், மட்டு மாகர ஆணையாளர் சிவநாதன், வர்த்தக சங்க தலைவர்,மற்றும் கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசியர் மற்றும் விரிவுரையாளர்கள் மட்டக்களப்பு நகரின் முக்கியஸ்த்தர்கள் எனக் கலந்து கொண்டு தங்களது உயர்வான கருத்துக்களை முன்வைத்தார்கள்.
 
»»  (மேலும்)

| |

கல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

முதல்வரின் ஆட்சி காலத்தில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு  இருந்த ஆசிரியர் பற்ற குறைகளை கூடிய கவனம் எடுத்து நிரப்பியதன் பயனுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
கல்குடா கல்வி வலயத்தில்  பால்சேனை அ.த.க பாடசாலை மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படுகின்ற ஒரு பாடசாலையாகும். இங்கு தரம் 1 தொடக்கம் தரம் 13 கலைப்பிரிவு வரை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். கற்பிக்கும் ஆசிரியர்களில் 80 வீதமானவர்கள் அண்ணளவாக 50-80 KM தூரத்திலிருந்து வருகை தந்து கற்பிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த க.பொ.த.(சா.த) இல் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்தரத்திற்கு முழுமையான தகுதி பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி கணிதம், விஞ்ஞானம், தமிழ், சமயம், விவசாயம் போன்ற பாடங்களில் 100 வீ த சித்தியை அடைந்துள்ளனர். இந் நிகழ்வை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபர்  பொன்.இராமச்சந்திரன் தலைமையில் கடந்த 9.05.2013 அன்று எமது பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களையும் சித்திக்கு உதவிய ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு கௌரவ அதிதியாக அப்பிரதேச செயளாலர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, சிறப்பு அதிதிகளாக கோரளைப்பற்று வடக்கு வாகரை கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எஸ்.பரமேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர்கள், இப்பிரதேச இராணுவப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அண்மைப் பாடசாலை அதிபர்கள், கிரமசேவகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊர் பெரியவர்கள் போன்ற பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது மட்டுமன்றி இப்பாடசாலை தமிழ் தினம், விளையாட்டுப் போட்டி போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் ஆட்சி காலத்தில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு  இருந்த ஆசிரியர் பற்ற குறைகளை கூடிய கவனம் எடுத்து நிரப்பியதன் பயனுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
»»  (மேலும்)

5/12/2013

| |

வடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ்

SLMC logoவடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக் கட்சியின் செயலாளர் ஹசன் அலி \தெரிவித்துள்ளதாக உடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாகவும் அந்தத் திருத்தச் சட்டத்தின்படி 17ஈவது திருத்தத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படவுள்ளதாகவும் குறித்த அதிகாரங்கள் நீக்கப்படுவது நியாயமற்ற செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இது தொடர்பில் அரசாங்கத்துடன் தமது கட்சி பேச்சு நடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது..
»»  (மேலும்)

| |

தேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா

தேத்தாதீவு     உதயம்   விளையாட்டு  கழக  விளையாட்டு  விழா  இன்று  இடம்பெற்ற்து .கிராமத்தில் கல்வியல்  சாதனை படைத்தோரும்    விழாவில்   கௌரவிக்கப்பட்டனர் . அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் அவர்களும்,  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ச.இன்பராசன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துசிறப்பித்தனர்.
»»  (மேலும்)

| |

கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை

பல்கலைக்கழகங்களுக்கிடையில் இலங்கையில் நடைபெற்றுவரும் விளையாட்டுப்போட்டியில் மல்யுத்த அணியினர் இரண்டாவது இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் 11வது விளையாட்டுப்போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக மல்யுத்த அணியினர் 2 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளிப்பதக்கம், 3 வெங்கலப்பதக்கங்கள் அடங்கலாக 6 பதக்கங்களுடன் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையில் 2வது இடத்தை பெற்றுள்ளனர்.
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் 11வது விளையாட்டுப்போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக கராதே பெண்கள் அணியினர் தனி சண்டையில்   2 தங்கப்பதக்கங்கள்,2 வெங்கலப்பதக்கங்களுடன் தனி காட்டாவில் 1 வெங்கலப்பதக்கத்தையும், குழு காட்டாவில் 1 வெங்கலப்பதக்கத்தையும்,  பெற்றுள்ளனர்.
»»  (மேலும்)

5/09/2013

| |

மக்கள் போராட்டம் வென்றது

வெருகல், முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்திலிருந்து நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியைகள் இருவரும் இடமாற்றத்திற்கு எதிரான ஊர் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தையடுத்து மீண்டும் இன்று புதன்கிழமை அதே பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அண்மையில், பட்டதாரிகள் நியமனத்தின் கீழ் வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் இருவரும் கடந்த திங்கட்கிழமை, வலயக் கல்வி அதிகாரியினால் அங்குள்ள வேறொரு பாடசாலைக்குத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்தில் ஏற்கெனவே 12 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற நிலைமையிலேயே கடமையில் இருந்த ஆசிரியர்களில் இருவர் வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இதனைக் கண்டித்து நேற்று; செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பெற்றோரால் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்த வலயக் கல்வி அதிகாரி, ஆசிரியைகள் இருவருக்கும் தன்னால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்துச் செய்து மீண்டும் பழைய பாடசாலைக்கே அனுப்பி வைப்பதாக பெற்றோரிடம் எழுத்து மூலம் உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியைகள் இருவரும் நேற்று புதன்கிழமை காலை துவாரகா வித்தியாலயத்திற்கு வந்து கடமையேற்றதாக  பாடசாலை அதிபர் ரீ. சொக்கலிங்கம் தெரிவித்தார்.
»»  (மேலும்)

5/08/2013

| |

கண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம் -முன்னாள் முதல்வர் நடவடிக்கை

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமம் வருடாவருடம் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்தில் மழை காலம் மற்றும் வெள்ள காலங்களில் கிராமங்களில் தேங்கி கிடக்கின்ற  நீர் வடிந்தோடுவதற்கான இயற்கையான வடிகான்கள் இருந்தும் அது செயலற்றதன் விளைவாக அவ் வெள்ள நீர் வடிந்தோடாமல் கிராமத்திலே தேங்கி கிடப்பதனால் அக் கிராம மக்கள் பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
இது குறித்து;; மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அக் கிராம மக்களோடு நேரடியாக கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை ஏற்று அதனடிப்படையில் உடனடியாக வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிகான் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் தலைமையில் கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது. அக்கிராம மக்களின் விருப்பத்திற்கு அமையவே குறித்த வடிகான் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இக் கூட்டத்திற்கு கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள்.
முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களது எற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இத் திட்டத்திற்கு தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 650 மீற்றர் குறித்த வடிகான் அமைக்கப்படும். இதனை வாழைச்சேனை பிரதேச சபை மேற்பார்வை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

5/06/2013

| |

கோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் பின்வரும் அறிக்கையினை எழுத்து மூலம் வெளியிட்டுள்ளது.

அனுபவமிக்க,திறமையான, செயல்திறன் கூடிய எமது புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் கல்குடா கல்வி வலயம் தற்போது துடிப்புடன் இயங்கிவருவது குறித்து கல்குடா வலய கல்விச் சமூகமும் பொதுமக்களும் மகிழ்ச்சி கொண்டுள்ள அதேவேளை, எமது பிரதேசத்தின் கல்வியை சீரழிக்கும் முயற்சியில் திட்டமிட்டு செயற்படுகின்ற ஒரு சிலரின் செயற்பாடுகள் தொடர்பாக எமது பிரதேச சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டும் என கோறளைப்பற்றுக் கோட்ட அதிபர்கள் சங்கம் வேண்டிநிற்கின்றது.
எமது வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக அண்மையழல் இணையத்தளமொன்றில் வெளியான செய்தி கல்குடா கல்வி சமூகத்தையே அவமானப்படுத்தும் செயலாகும். உயரிய பதவியில் உள்ள ஒரு மனிதரை அவமதிப்பதும் தவறான செய்திகளை வெளியிடுவதும் அவர் சார்ந்த சமூகத்தையே புண்படுத்தும் செயற்பாடாகும்.
ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் எனப்படுபவர் அவர் சார்ந்த பிரதேசகல்விச் சமூகத்தின் நேரடிப் பிரதிநிதியும் அச் சமூகத்தின் தலைவருமாவார். அந்தக்கல்விச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு அவரைச் சார்ந்ததாகவே  இருக்கும். அதற்காக பொருத்தமான முடிவுகளை எடுக்கவேன்டிய தேவையும் இருக்கும்.
சகல துறைகளிலும் பின்தள்ளப்பட்டுள்ள எமது கல்விவலயத்தை முன்கொண்டு செல்லவேன்டிய பாரிய பொறுப்பு தற்போதய வலயக்கல்விப் பணிப்பாளருக்கு உள்ளது. பல சவால்களுக்கு மத்தியில் பணிப்பாளர் அவர்கள் பல ஆக்கபூர்வமான கல்விசார்ந்த நடவடிக்ைககளை முன்னெடுக்கும்போது, பலர் அதனை வரவேற்று ஒத்துழைப்பு நல்கும் அதேவேளை , ஒருசிலர் தமது சுயநலன் கருதி அனாகரிகமான முறையில் செயற்படுவதையும் சிறுபிள்ளைத் தனமான தவறான முறையில் உண்மையற்ற செய்திகளை வெளியிட்டு சுயஇன்பம் காணும் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
எமது தற்போதய வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களின் தலைமையின் கீழ் கல்குடா கல்வி வலயம் ஔிமயமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நல்ல பல செயற்பாடுகள் பணிப்பாளர் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
1. பல வருடங்களாக கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களில் மன அழுத்தத்துடன் கடமையாற்றுகின்ற அதிபா், ஆசிரியா்களுக்கு உரிய முறையில், இடமாற்றம்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் ஒரேபாடசாலையில் பல வருடங்கள் கடமையாற்றுகின்ற ஆசிரியா்களை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை. இதன் உண்மைத்தன்மையை சம்மந்தப்பட்டவா்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
2.பாடசாலைகளின் கட்டமைப்பைச் சீா்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை.
3. குறுகிய காலத்தினுள் வலயக்கல்வி அலுவலகத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றியுள்ளமை.
4. அதிபா் , ஆசிரியா்கள் , பெற்றோர் போன்றோர் தன்னைச் சந்திப்பதை இலகுபடுத்தியுள்ளமை.
5. பாடசாலையின் பௌதிக மற்றும் மனிதவளங்களைப் பெற்றுக் கொள்வதில் அக்கறையுடன் செயற்படுகின்றமை.
6. எப்போதும் மாணவா் நலன் சார்புடைய நல்ல முடிவுகளை எடுக்கின்ற பண்பினைக் கொண்டுள்ளமை.
7. மாணவா்களின் கல்வி தொடா்பாக பயனுள்ள திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றமை.
8.  அதிபா்கள்  , ஆசிரியா்கள் சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்ய அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளமை.
9. ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய , போதுமானளவு ஆசிரியா்களை நியமனம் செய்ய , உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை.
10. ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அதிபா் , ஆசிரியா் கூட்டங்களை நடத்துகின்றமை.
தவறான அறிக்கைகளை வெளியிடுவா்கள் மேலுள்ள நல்ல பல திட்டங்கள் தொடா்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
அண்மைக்காலமாக எமது வலயக்கல்விப்பணிப்பாளா் மீது  குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, உண்மைக்குப் புறம்பான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு, எமது பிரதேசத்தின் கல்வியைச் சீரழிக்க நினைப்பவர்களும், அவா்களது செயற்பாடுகளும் இனங்காணப்பட வேண்டும். இதற்காக சகல அதிபா்களும் ஆசிரியர்களும் பாடசாலைச் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
எனவே வலயக்கல்விப்பணிப்பாளரும் அவா்சார்ந்த அதிகாரிகளும் திட்டமிட்டு செயற்படுகின்ற ஒருசில விஷமிகளின் செயற்பாடுகளினால் மனஞ்சலிக்காமல், கல்குடா  கல்வி வலயம் கல்வியில் பல சாதனைகள் படைக்க ஆக்கபூா்வமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்குப் பக்கபலமாக கோறளைப்பற்றுக் கோட்ட அதிபா்களும் ஆசிரியா்களும் பாடசாலை சார்ந்த சமூகமும் உங்களோடு ஒன்றுபட்டு நிற்கும் என கோறளைப்பற்று அதிபா்கள் சங்கம் உறுதி கூறுகின்றது.
" நல்ல எண்ணங்கள் எப்பொழுதும் செயலுருப் பெறும் "
அதிபா்கள் சங்கம்
கோறளைப்பற்றுக் கோட்டம்
»»  (மேலும்)

| |

வலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களும் யோகேஸ்வரனின் திருகுதாளமும்.நன்றி **இலங்கை நெட் 

கடந்த சில நாட்களாக ஊடகம் ஒன்று கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ் கிருஸ்னராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் என்ற பெயரால் விடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிடுகின்றது. 
ஆனால் கிழக்கில் இவ்வாறானதோர் அமைப்பு செயற்பாட்டில் இல்லை என்பது தெரியவருகின்றது. அவ்வாறு இருக்குமானல் அதன் செயற்பாடுகள், நிர்வாகம் , உறுப்பினர்களை தொடர்பு கொள்ளக்கூடிய முகவரி என்பவற்றை அறிந்து கொள்ள இலங்கைநெட் ஆர்வமாக உள்ளது. 

குறித்த பிரச்சாரத்தின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது. 

வலயக்கல்விப்பணிப்பாளரா திரு கிருஸ்னராஜா கடமையேற்று குறுகிய காலத்தினுள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கல்விக் கூடங்களை தங்கள் பிரச்சார கூடமாக பயன்படுத்துவதனை தொடர்ந்து அனுமதிப்பதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டதுடன் , அதன் காழ்ப்புணர்ச்சியே அவர் மீது எல்லைகளற்ற நியாயப்படுத்த முடியாத குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு காரணியாக அமைந்துள்ளது என வலயத்திலுள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் வினவியதில் அறிந்து கொள்ளமுடிகின்றது. 

குறிப்பாக பாடசாலை விளையாட்டு , கலைநிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு தமது அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டதானால் கடந்த 3 தசாப்தங்களில் இடம்பெற்றவை தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்க முடியாது என்ற வைகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. 

அரசியல்வாதிகள் சில கொப்பி பென்சில்களை பாடசாலைக்கு எடுத்துச் சென்று அவற்றை மாணவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்து, அங்கு புகைப்படங்கள் எடுத்து ஊடகங்களில் பிரசுரித்து கண்ட அரசியல் லாபங்கள் யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த இழிநிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டுமா? அன்றில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டுமா? என்பதே கேள்வியாகும். 

வலயக்கல்விப் பணிப்பாளர் மீது வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வலய ஆசிரியர்கள் மாவணவர்களிடம் வினவியபோது, வலயக்கல்விப்பணிப்பாளராக திரு. கிருஸ்னராஜா பதவியேற்று 2 மாதங்களே என்றாலும் அவர் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் பல முற்னேற்றங்களை கண்டுள்ளது என்றும் குறிப்பாக ஆசிரியர் நலன் தொடர்பாடல்கள் , வலய கல்வி அலுவலக சீர் முகாமைத்துவம் , பாடசாலை நேரடி விஜயங்கள் , நியாயமான தகுதியான இட மாற்றங்கள், மாணவர்கள் ஒழுக்கம் சம்பந்தமான் சுற்று அறிக்கைகள் போன்ற பல ஆரோக்கியமான விடயங்களில் அவர் கவனம் செலுத்தி வருகின்றார் என்றும் இந்நிலை தொடருமானால் கல்குடா கல்வி வலயம் கால போக்கில் மட்டகளப்பு மாவட்டத்தில் முதல்தர வலயமாக பரிணமிக்கும் என்றும் வலயத்திலுள்ள கல்விசார் சமுதாயம் கூறுகின்றது. 

எது எவ்வாறாயினும் கல்விப்பணிப்பாளரது அதிரடி நடவடிக்கைகளால் சில ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுப்பதற்கு இல்லை. 

தவறுகள் இடம்பெறுகின்றபோது ஊடகங்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பவேண்டும் என சமுதாயம் அதன்மேல் திணித்திருக்கின்ற கடமையை செய்வதாக கூறிக்கொண்டு அரசியல்வாதிகளின் அழுக்குகளை மறைக்கவும், அந்த அரசியல்வாதிகளுக்கு 

துணைபோகதவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தீர்க்கவும் செய்வது கண்டனத்திற்குரியது.
»»  (மேலும்)

| |

இந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு தவங்கிடக்கின்றன

குவன்தனாமோ உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் பிரிட்டன் கைதி விபரிப்பு

உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு குரோதத்துடன் நடத்துவதாக கடிதம்
அமெரிக்காவின் குவன் தனாமோ சிறைச்சாலையில் இருக்கும் ஒரே பிரிட்டன் நாட்டவரான 44 வயதான ஷாகிர் ஆமிர், அங்கு நிகழும் துன்புறுத்தல்கள் குறித்து விபரித்துள்ளார்.
குவன்தனாமோ பே சிறையிலிருக்கும் நூறுக்கும் அதிகமான கைதிகள் கடந்த பெப்ரவரி நடுப்பகுதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆமிரும் இணைத்துள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து பிரிட்டன் சஞ்சிகையான டெய்லி மெயிலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தேன். ஏற்கனவே பல சுகாதார பிரச்சினைகளால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் எனது முழங்காலில் தொடர்ந்தும் வலியை உணர்கிறேன். எனது இடுப்பின் பின்புறமும் தாக்குதலால் இருமுறை காயமடைந்தது. இங்கு இருக்கும் நீர் குழாய்களில் வரும் மஞ்சள் நிற தண்ணீரை குடித்து வருவதால் எனது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரும்பு வலையத்தை நாள்தோரும் அணிவதால் எனது கணுக்கால்கள் வீங்கி இருக்கின்றன. அறையெங்கும் குழாயூடாக வரும் தண்ணீரால் ஈரலிப்பாக இருப்பதால் காலுறையு டனேயே இருக்க வேண்டியுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது தொடக்கம் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கிறது. முன்னர் என்னை மோசமாக கவனித்தார்கள். ஏப்ரல் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின் நான் மேலும் குரோதத்துடன் பார்க்கப்படுகிறேன்.
எனது மருத்துவ பொருட்களை எடுக்க ஆரம்பித்தார்கள். வாத நோய் காரணமாக இரு போர்வைகளை பயன்படுத்தி வந்தேன். அவை இப்போது இல்லை. எனது பல் துலக்கும் கருவி, பாதணி, எனது சட்ட ஆவணங்கள் எல்லாம் போய்விட்டன. இப்போது சுவரில் வரைந்த எனது குழந்தைகளின் படத்தை மாத்திரமே விட்டுவைத்திருக்கிறார்கள்.
இப்போது நான் தனியாக விடப்பட்டிருக்கிறேன். கொன்கிரீட் சுவரில் தூங்குகிறேன். சிறை அறையின் உணவு வழங்கும் சிறு துளையையும் நிரந்தரமாக மூடிவிட்டார்கள்.
நான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இங்கு தரும் உணவுகள் அருவருப்பானவை. ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாக உண்ணாமல் இருந்து அருகில் உணவு பரிமாறுவது மோசமான துன்புறுத்தல்.
ஷாகிர் ஆமிர் கடந்த 11 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் பதியப்படாமல் குவன்தனாமோவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இரு முறை இவரை விடுவிக்க முன்வந்தபோதும் அவருக்கு சவூதிக்கு மாத்திரமே செல்ல முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டதோடு அங்கும் அவர் சிறை வைக்கப்பட வாய்ப்பு இருந்தது. அங்கு அவரது பிரிட்டன் மனைவி ஸின் மற்றும் 5 குழந்தைகளிடம் இருந்தும் பிரித்து வைக்கப்பட நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆமிர் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நான் இங்கு மரணித்து விடுவேனோ என்று சிலவேளைகளில் பயப்படுகிறேன். அப்படி நடக்காது என நான் நம்புகிறேன். நான் ஒரு கொள்கைக்காகத்தான் இருக்கிறேன் என்பதை எனது குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சிறைக் கைதிகளுக்கும் பத்து காவலர்கள் இருக்கிறார்கள். இங்கு தடுத்து வைத்திருக்கும் ஒவ்வொருவருக்காகவும் அவர்கள் ஆண்டு தோறும் தலா ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவு செய்கின்றனர்.
அமெரிக்காவின் ஏனைய சிறைச் சாலைகளை விடவும் இங்கு 40 மடங்கு செலவு மற்றும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எதற்காக? நாம் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு தலைவலிதான் மிச்சம்.
என்னைப் போன்று இங்கு சுமார் 239 பேர் இருக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களுக்கும் பெயர் இல்லை.
அவர்களின் இலக்கங்களை எழுதியே தெரிந்துகொள்கிறேன் என்றும் அவர் விபரித்துள்ளார்.
குவன்தனாமோ சிறைச்சாலையில் உண்ணாவிரதம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மேலதிக மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மேற்படி சிறைச்சாலை நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பாக இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதனை மூடுவதற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கூறினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கியூபாவில் இருக்கும் குவன்தனாமோ பே சிறையில் பல நாடுகளிலும் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
»»  (மேலும்)

| |

வாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சியும் நூல் வெளியீட்டு வைபவமும்

வாழைச்சேனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பாரம்பரிய பொருட் கண்காட்சியும் நூல் வெளியீட்டு வைபவமும் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியான மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவிச் செயலாளர் வீ.வாசுதேவன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வேல்ட் விசன் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் பி.றோகாஸ், எஸ்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன், மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உதவியாளர் எம்.ஏ.சி.எம்.செய்னுலாப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலகப் பிரிவில் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சியுடன், கிராமத்தின் பழைமை வாய்ந்த மகுடிக் கூத்து இருவெட்டு வெளியீட்டுடன், பிரதேச செயலக கலாச்சார பேரவையின் இளம் பரிதி நூல் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்படும் வண்ணத்துப்பூச்சி ஆகிய நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவையை ஆரம்பிப்பு

கிழக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் நவீன மயப்படுத்தப்பட்டுவருகின்றன.கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மட்டக்களப்பில் இருந்து குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இலங்கை போக்குவரத்துசபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு செல்லும் உல்லாச பயணிகளின் நன்மை கருதி இந்த சேவை விஸ்தரிக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு பஸ் நிலையித்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இரண்டு போக்குவரத்து சொகுசு பஸ்கள் சேவையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் போக்குவரத்துறை அமைச்சர் குமாரவெல்கமவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்காக இரண்டு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் சேவை ஆரம்ப நிகழ்வு கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அனுராதபுரம் இலங்கை போக்குவரத்துசபை பிராந்திய முகாமையாளர் மேர்வின் பெர்னாந்து,உதவி செயலாற்று முகாமையாளர் வி.மகேந்திரன்,மட்டக்களப்பு சாலை முகாமையாளர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொழும்பு பஸ் நிலையம் மற்றும் மட்டக்களப்பு பஸ் நிலையம் என்பனவற்றில் இருந்து இந்த பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் கனகசுந்தரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இருந்து செல்லும் பஸ் வெள்ளவத்தை வரை செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் இலகுவில்,சொகுசாக வந்துசெல்லும் வகையில் இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்சேவை இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் காத்தான்குடி பஸ் நிலையத்தில் இருந்தும் தனது சேவையை வழங்கவுள்ளதுடன் தினமும் இரவு ஒன்பது மணிக்கு இந்த ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செயலாற்று முகாமையாளர் தெரிவித்தார்.
ஆசனப்பதிவுகளை காத்தான்குடி,மட்டக்களப்பு பஸ் நிலையங்களில் மேற்கொள்ளலாம் என தெரிவித்த அவர்,ஒரு வாரத்துக்கு முன்னர் தங்களது ஆசனங்களை பதிவுசெய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது ஒரு வழிப்பயண கட்டணமாக 800 ரூபா அறவிடப்படும் எனவும் இருக்கைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே பயணிகள் பயணம்செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)