5/31/2013

| |

கோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்
கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் எட்டு சந்தேக நபர்களில் பொலிஸார் மூவர் உட்பட ஆறுபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காண  அடையாள அணிவகுப்பு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. 
அடையாள அணிவகுப்பு கடந்த 22 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும் அன்றையதினம் இடம்பெறவில்லை.
கொழும்பு,கொம்பனிவீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை எடுத்துசென்றுகொண்டிருந்த போது கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸார் உட்பட எட்டுபேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும்  நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி  ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை நேற்று 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.
வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவநேஷ்வரன் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோதே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் நீதிமன்றத்தில் விபரிக்கையில்,

சம்பத் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு நவம் மாவத்தையூடாக வானில் சென்றுக்கொண்டிருந்தபோது போக்குவரத்து பொலிஸ் சீருடையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் வானத்தை நிறுத்தினார்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்திலிருந்து நால்வர் இறங்கினர் அவர்கள் நால்வரும் என்னையும் எனது வாகனத்தின் சாரதியையும் டிப்பென்டர் வாகனத்திற்குள் பலவந்தமாக தள்ளிஏற்றிக்கொண்டுச் சென்றதுடன் பணத்தை அபகரித்துக்கொண்டு கோட்டை பகுதியிலுள்ள பாலடைந்த இடத்தில் எங்களை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர்.
அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்ததுடன் என்னையும்  தாக்கினார் என்றார்.
சந்தேகநபர்கள் எட்டுபேரையும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட ஒருகோடி ரூபாவிலிருந்து 35 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.