5/01/2013

| |

சபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்தியோரை மன்னிக்கட்டும்.தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான எஸ்.சபாலிங்கம் அவர்களின் பிரான்சில்  விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 ஆவது நினைவு தினம் இன்று புகலிடத் தோழர்களால்  நினைவுகூரப்படுகின்றது. இவர் பிரபல அரசியல் விமர்சகரும்  புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமாவார்.  
பாரிஸில் உள்ள  அவரது இல்லத்தில் வைத்து  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் “கட்டிடக்காட்டுக்குள்” என்கின்ற கவிஞர் செல்வம் அவர்களின் கவிதைத்தொகுதிஇ “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” எனும் கவிஞர் சேரனின் கவிதைத்தொகுப்பு போன்ற புகலிட எழுத்தாளர்களின் பல நூல்களை ஆசியா பதிப்பகம் மூலம்  வெளியிட்டு வந்தவர். புதிய நூல் வெளியீடுகளை மட்டும் அல்ல தமிழ் சமூகத்தின் அரும்பெரும் பொக்கிசங்களான பழம்பெரும் நூல்களை மீளப் பதிப்பித்து பாதுகாக்க வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்ட அவர் யாழ்ப்பாண வைபவமாலையின் மீள் பதிப்பினையும் கூட செய்திருந்தார்.

தமிழ் இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால முக்கியஸ்தருமான திரு.சி.புஸ்பராசா அவர்களால் பின்னாளில் வெளியிடப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை ஆசியா பதிப்பகத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலேயே அந்நூல் வெளிவருவதன் ஊடாக பிரபாகரன் மீது கட்டியமைக்கப்பட்டிருந்த புனிதங்கள் எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படும்இ பிரபாகரனது கொலைமுகம் அம்பலமாகும் என்று பயந்த விடுதலைப்புலிகளால் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டது.

இவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார். அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவியும்  கவிஞரும் கவிதைக்காக சர்வதேச விருதைப் பெற்றவருமான செல்வி விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் செய்யப்பட்டது தொடர்பாகவும் மற்றும்  விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த காரணத்தால் விடுதலைப்புலிகள் இவர் மீது சீற்றம் கொண்டிருந்தனர் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
 இம்முறை லண்டனில் இடம்பெற்ற 40வது இலக்கியசந்திப்பினை நடத்தியோர் சபாலிங்கத்தை கொன்று வீசிவிட்டு அவர்மீது சேறுபூசிய புலிகளை மேடையேற்றி மகிழ்ந்திருக்கின்றனர் என்பதுவன்மையான கண்டனத்துக்குரியது. புலி சாத்திரி இலக்கிய சந்திப்பு மேடையில் வைத்து சபாலிங்கத்தின் மீது தான் பரப்பிய பொய் சேறடிப்புகளுக்கு மன்னிப்பு கேட்டிருந்தால் அதை இலக்கிய சந்திப்பின் வெற்றி என லாம்.ஆனால் மாறாக புலிகளின் குற்றபத்திரிகைகளை மேலும் அழுத்தமாக பதிவுசெய்து சென்றிருக்கிறார். சபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்தியோரையும் அதன் ஆலோசகர்களாய் செயடற்பட்டவர்களையும் மன்னிக்கட்டும்.


எம்.ஆர்.ஸ்டாலின்