5/06/2013

| |

மட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவையை ஆரம்பிப்பு

கிழக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் நவீன மயப்படுத்தப்பட்டுவருகின்றன.கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மட்டக்களப்பில் இருந்து குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இலங்கை போக்குவரத்துசபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு செல்லும் உல்லாச பயணிகளின் நன்மை கருதி இந்த சேவை விஸ்தரிக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு பஸ் நிலையித்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இரண்டு போக்குவரத்து சொகுசு பஸ்கள் சேவையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் போக்குவரத்துறை அமைச்சர் குமாரவெல்கமவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்காக இரண்டு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் சேவை ஆரம்ப நிகழ்வு கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அனுராதபுரம் இலங்கை போக்குவரத்துசபை பிராந்திய முகாமையாளர் மேர்வின் பெர்னாந்து,உதவி செயலாற்று முகாமையாளர் வி.மகேந்திரன்,மட்டக்களப்பு சாலை முகாமையாளர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொழும்பு பஸ் நிலையம் மற்றும் மட்டக்களப்பு பஸ் நிலையம் என்பனவற்றில் இருந்து இந்த பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் கனகசுந்தரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இருந்து செல்லும் பஸ் வெள்ளவத்தை வரை செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் இலகுவில்,சொகுசாக வந்துசெல்லும் வகையில் இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்சேவை இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் காத்தான்குடி பஸ் நிலையத்தில் இருந்தும் தனது சேவையை வழங்கவுள்ளதுடன் தினமும் இரவு ஒன்பது மணிக்கு இந்த ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செயலாற்று முகாமையாளர் தெரிவித்தார்.
ஆசனப்பதிவுகளை காத்தான்குடி,மட்டக்களப்பு பஸ் நிலையங்களில் மேற்கொள்ளலாம் என தெரிவித்த அவர்,ஒரு வாரத்துக்கு முன்னர் தங்களது ஆசனங்களை பதிவுசெய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது ஒரு வழிப்பயண கட்டணமாக 800 ரூபா அறவிடப்படும் எனவும் இருக்கைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே பயணிகள் பயணம்செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.