6/25/2013

| |

துரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம்


-அதிரதன்
 
கிழக்குப் பல்கலைக்கழகமாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாக பல கல்விமான்கள் இருந்துள்ளார்கள். தற்போதைய நிலையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள் முக்கியமானவையாகவும், முன்னேற்றமானவையாகவும் பார்க்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும், தற்போதைய பல்கலைக்கழ அபிவிருத்திகள் தொடர்பிலும் இந்தக்கட்டுரையில் ஆராயலாம்.
 
மட்டக்களப்பு மாத்திரமல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களுமே கல்வி மற்றும் பொருளாதாரம் என அனைத்து விடயங்களிலும் கடந்த 30 வருடங்களாக அழிவுகளையும், பின்னடைவுகளையும் இன்னல்களையும் சந்தித்திருக்கின்றன.
 
இக்காலத்தில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போனதும், கொல்லப்பட்டதும், நாட்டை விட்டு ஓடியதும் என பல்வேறு விவகாரங்களும் நடந்து முடிந்திருக்கின்றன. ஏதோ கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கில் அமைதி நிலை ஏற்பட்டு நிம்மதிப் பெருமூச்சொன்று விடப்பட்டு மக்கள் நிமிர்ந்திருக்கிறார்கள். 
 
இந்த நிலையில் கூட தமிழ் மக்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். இதில் முயற்சிகளை மேற்கொண்ட பல்கலைக்கழகம் என்ற வகையில், கிழக்குப் பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருந்தது என்றுகூடச் சொல்லலாம்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தருக்கு இருந்த வெற்றிடம் பதில் உபவேந்தரால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும், கடந்த 14 மாதங்களுக்கு முன்னர்தான் கனடாவில் வசித்து வந்த கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா உப வேந்தராக நியமிக்கப்பட்டார். 
 
இவர் நியமிக்கப்பட்ட பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகமானது பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுவருகிறது. கடந்த வருடங்களை விடவும் இந்த வருடத்தில் ஒரு தொகை மாணவர்கள் அதிகமாகவும் உள்வாங்கப்பட்டனர். மேலதிகமாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கென விடுதிகளை அமைக்கும் பணிகள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கென புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விடுதிப் பிரச்சினைகள் மற்றும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்ற குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்தவதற்கான வேலைகளை பல்கலைக்கழக நிருவாகம் மேற்கொண்டு வருகிறது. நடைபெற்று வரும் அபிவிருத்திகள் குறித்து கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கென (Faculty of Health care sciences) மாணவர் விடுதிகள் இல்லை. தற்பொழுதுதான் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது. 
 
அதனால் நாங்கள் மட்டக்களப்பு நகரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகளாக பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம். வந்தாறுமூலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை விடவும் இவர்களுக்கு நல்லவகையான விடுதி ஏற்பாடுகளே செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இந்த வருடத்தில் கடந்த வருடத்தினை விடவும் அதிகமாக 80 மாணவர்கள் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். விடுதி வசதி தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த வருடம் சேர்க்கப்பட்ட மேலதிக மாணவர்களுக்காக அரசாங்கத்தால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 4 பில்லியனில் 300 மில்லியன் ரூபா எமது பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 80 மாணவிகள் தங்கக் கூடிய செமி பேர்மனற் கட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும். அதன் பின்னர் விடுதிகளுக்காக பயன்படுத்தப்படும் வாடகை வீடுகள் ஆண்கள் விடுதிகளாகப் பயன்படுத்தப்படும். இதன் பின்னர் 2 - 3 வருடங்களுக்கு மாணவர் விடுதிப் பிரச்சினைகள் இருக்காது, அந்த இடைவெளிக்குள் பிள்ளையாரடியில் மாணவர் விடுதி வேலைகள் நிறைவடைந்துவிடும். 
 
அது தவிர வந்தாறுமூலையிலுள் பிரதான பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. வந்தாறுமூலை யுத்தகாலத்தில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட அபிவிருத்திகள் கிடைக்கப் பெறாத ஒரு ஐசலேற்றட் (Isoletted) பிரதேசம் என்ற வகையில் அங்கு பெரிய வீடுகளை வாடகைக்குப் பெறுவதிலும் சிரமம் காணப்படுகிறது. அங்குள்ள விடுதியில் 750 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதியில் 1200 மாணவர்கள் தங்கியுள்ளனர். அது தவிரவும் வீடுகளும் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன.
 
இங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சரவை விடுதிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 150 தொடக்கம் 200 மாணவர்கள் தங்கியிருக்கக் கூடிய இரண்டு செமி பேர்மனற் விடுதிகள் 69 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளன. அதே நேரம் கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்திற்கு 31 மில்லியனும், திருமலைக்கு 15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிரவும், 70 மில்லியன் ரூபாவுக்கும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 
 
அத்துடன் மாவர்களுக்கான உள்ளக விளையாட்டரங்கம், விரிவுரை மண்டபங்கள், பரீட்சை மண்டபங்கள் ஆகியன இன்னும் இரண்டு 3 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளன.
 
35 வருடங்களாக யுத்தப் பாதிப்புகளுக்குள் இருந்து வந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு அரசாங்கம் தாராளமான நிதி ஒதுக்கீடுகளை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தந்து வருகிறது. அந்த வகையில் நிறைவு பெற்ற என்னுடைய 14 மாத பதவிக்காலத்தில் இந்த நிதிகள் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளை துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. 
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும், உயர் கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் ஆகியோருக்கும் நன்றிகளை இந்தவேளையில் தெரிவித்தே ஆக வேண்டும். 
 
அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்களாக மக்களுடைய மனங்களிலுள்ள யுத்தக் கொடுமைகளால் உருவான மனக் கசப்புகளே இருக்கின்றன. ஆனாலும் தற்போது தமிழ் - சிங்கள மாணவர்களிடையே இன உறவு மேம்பட்டு பிரச்சினைகள் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. 
 
கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைகளாக பிள்ளையாரடியில் 360 மில்லியன் செலவில், மாணவர் விடுதி சுற்றுமதில் நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கென 199 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர்களுக்கான விரிவுரை, கிளினிக், மற்றும் ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய பிரிவு ஒன்று (Profesorial Unit) அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் அந்த வேலைகள் ஆரம்பிக்கப்படும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கென தனயான தொகுதியாக இது இருக்கும்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 7ஆவது உப வேந்தராகப் பொறுப்பேற்ற கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் 14 மாத பதவிக்காலத்தில் இதுவரை 250 மில்லியன் செலவிலான உயிரியல் பீடத்துக்கான கட்டடம் அமைக்கப்பட்டு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
150 மில்லியன் செலவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம்புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக சுற்றுமதில், நல்லையா மண்டபம், வெள்ளப் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில் வடிகாலமைப்பு, பழைய கட்டடங்கள் புனரமைப்பு என்பன நடைபெற்றுள்ளன.
 
அவை தவிரவும், நூலகக் கட்டடத் தொகுதி, கலைப்பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டடம் என்பன 500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கடந்த காலத்தில் இருந்து வந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதிலுள்ள தாமதங்கள் நீக்கப்பட்டு பரீட்சை முடிவடைந்து 6 வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிடும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
3 தசாப்தங்களுக்கும் மேலாக இன்னல்களையும் நெருக்குதல்களையும், சந்தித்துக் கொண்டிருந்த ஒரு பல்கலைக்கழகத்தினை குறுகிய காலத்துக்குள் மீண்டும் தூக்கி நிமிர்த்துவது சாதாரணமான விடயமல்ல. அந்த வேலையை கொஞ்சம் கொஞ்சமாகச் செய்துவரும் நிர்வாகத்துக்கு தோள் கொடுக்க வேண்டியது பாகுபாடுகள் இன்றி ஒட்டு மொத்த தமிழச் சமூகத்தின் கடமையாகவே பார்க்கப்படுகிறது.