6/05/2013

| |

பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை

பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஒரு இலட்சம்பேரிடம்; கையொப்பங்களை பெற்று ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அனுப்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்காக செல்லும் பணிப்பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை அங்கு எதிர்கொள்கின்றனர்.
மூதூர் றிசானா நபீக், ஜோர்தானில் சுட்டுகொலை செய்யப்பட்ட வாழைச்சேனையை சேர்ந்த பெண் மற்றும் இதேபோன்று பல்வேறு  பிரச்சினைகளை எதிர்கொண்டு நாடு திரும்பிய பெண்களின் நிலைமைகளை சுட்டிக்காட்டியும் வெளிநாட்டில் பணிப் பெண்களாக தொழில்புரிபவர்கள்; அங்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் உடனடியாக இலங்கையிலிருந்து பெண்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி இந்த கையெழுத்து வேட்டை நடத்தப்படவுள்ளது' என்றார். 
'இதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில்; இருந்தும் ஒரு இலட்சம் பேரின் கையொப்பங்களை பெற்று இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் உட்பட நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களுக்கு அனுப்பவுள்ளோம்'  என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து அவர்களுக்கு இலங்கையிலேயே தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மகஜரில் கோரவுள்ளதாக கமலதாஸ் குறிப்பிட்டார்.