6/28/2013

| |

எகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்

நாட்டை சீர்குலைத்துவிடுமென ஜனாதிபதி எச்சரிக்கை: பிரதான நகரங்களில் இராணுவம் குவிப்பு
உள்நாட்டில் தொடரும் பதற்றம் நாட்டை முழுமையாக செயலிழக்கச் செய்துவிடும் என எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி எச்சரித்துள்ளார்
ஜனநாயக முறையில் தெரிவான முர்சி தனது முதல் ஆண்டு நிறைவையொட்டி கடந்த புதன்கிழமை இரவு தொலைக்காட்சி ஊடே உரையாற்றினார். அதில் ஒருசில தவறுகளை இழைத்த தாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தன் மீதான எதிர்ப்பு செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சி என முர்சி எச்சரித்தார்.
எதிர்ப்பாளர்கள் முர்சியை பதவிவிலகக் கோரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி பிரதான நகரங்கள் எங்கும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
முர்சி உரையாற்றும் முன்னரும் புதன்கிழமை வடக்கு நகரான மன்சூராவில் மோதல் வெடித்துள்ளது. ஜனாதிபதி ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 170 பேர் காயமடைந்தனர்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முர்சி எகிப்தில் முதல் முறையாக நடந்த சுயாதீனமான தேர்தலில் வென்று கடந்த 2012 ஜூன் 30ஆம் திகதி ஜனாதிபதியாக தேர்வானார். ஜனாதிபதி பதவியில் அவரது முதல் ஆண்டு, அரசியல் பதற்றம், பொருளாதார நெருக்கடி ஆகிய விவகாரங்களில் கழிந்தது. இந்நிலையில் தனது இரண்டு மணி நேர தொலைக்காட்சி உரையில் முர்சி தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். அத்துடன் தவறுகள் குறித்து ஒப்புதல் அளித்த முர்சி அதிரடி சீர்திருத்தங்களுக்கும் வாக்குறுதி அளித்தார்.
“நான் ஒரு சில விடயங்களில் சரியாக செயற்பட்டேன். மற்றும் சில விடயங்களில் தவறும் செய்தேன்” என்று கூறிய அவர், ‘புரட்சியின் இலக்கை எட்ட அதிரடி நடவடிக்கைகள் தேவை என்பதை கடந்த ஓர் ஆண்டு பதவிக்காலத்தில் புரிந்துகொண்டேன்” என்றார். அரசை மாற்ற நினைப்பவர்கள் தேர்தலில் குதித்து அந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என சவால் விடுத்த முர்சி, எதிர்ப்பாளர்களுக்கு பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தார். முர்சியின் உரையை ஒட்டி அரச எதிர்ப்பாளர்கள் தலைநகரில் உள்ள தஹ்ரீர் சதுக்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னால் ஒன்றுதிரண்டனர். எனினும் நாட்டை கட்டுப்படுத்த முடியாத மோதலுக்குள் இட்டுச்செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ தலைமை ஏற்கனவே எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் முர்சி ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்தப்பட விருக்கும் ஆர்ப்பாட்ட இடத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ரபால் அல் அதவியா பள்ளி வாசல் வீதியில் ஆயுதம் தரித்த டிரக் வண்டிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையை பாதுகாக்க துருப்புகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு பாரிய வாகன நெரிசலும் காணப்படுகிறது. எதிர்வரும் ஆர்ப்பாட்டங்களை ஒட்டி கெய்ரோ குடியிருப்பாளர்கள் தற்போதே உணவுகளை சேமித்துவைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி முர்சி பதவி விலகக் கோரும் விஞ்ஞாபனத்தில் 13 மில்லியன் கையொப்பம் பெறப்பட்டிருப்பதாகவும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அரச எதிர்ப்பாளர்கள் கோரிவருகின்றனர்.
எனினும் உள்நாட்டில் தொடரும் வன்முறை மற்றும் பதற்ற சூழல் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலா பயணத்துறையையே பாரிய அளவில் பாதிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
எகிப்தில் இளைஞர்களில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு வெளிநாட்டு நாணய இருப்பும் வீழ்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.