7/29/2013

| |

தனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈரோஸ்

'வடமாகாண சபைத் தேர்தலில் ஈரோஸ் தனித்து போட்டியிட்டாலும் ஆளும் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கே ஆதரவு தெரிவிக்கும். எமது கட்சியின் ஆதரவு என்றுமே ஆழும் அரசாங்கத்திற்குத்தான்' என ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார். 'தமிழ் தேசிய கூட்டமைப்பு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் ஆசனங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்காக செய்ததென்ன? வடக்கி;ல் அவர்களுக்கு மாகாண சபை ஆட்சி செல்லுமானால் இதேநிலைதான் உருவாகும்' என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு ஈரோஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 'வடக்கிலே அழிந்து போன பூமி மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக அரசாங்கம் பல கோடி ரூபாய்களை செலவிட்டுவருகின்றது. இந்தப்பணிகள் தொடர்நது வடபகுதி அபிவிருத்தியின் உச்சத்தைத்தொட வேண்டுமானால் வடக்கில் மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றவேண்டும். இல்லாவிட்டால் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி சபை பிரதேசங்களை போலதான் வடக்கும் மாறும்' என தெரிவித்தார்.