7/03/2013

| |

சிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்டதை இன்றும் மறக்க முடியவில்லை; அதாஉல்லா

DSC_0193அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுரட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள்  மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து நானத்தான் பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்தை  திறந்து வைத்தார்.
“நானத்தான் பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா;
இன்று நானத்தான் பிரதேசத்திற்கு முக்கியமான ஒரு நாளாகும். நானும் இன்றுதான் இப்பிரதேசத்திற்கு வந்திருக்கின்றேன். மன்னார் மாவட்டத்தில் இன்று பல அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம்.
இப்பிரதேசம் மிகவும் எழில்மிக்க ஒரு பிரதேசமாகும். பார்ப்பதற்குக் கூட சந்தோசமாகவும் உள்ளது. இப்பிரதேசத்தை பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று எல்லா சமூகத்தினரும் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றனர்.
கடந்த யுத்த காலங்களில் மக்கள் சந்தோசமாக இவ்வாறு வாழவில்லை. மக்கள் தெளிவாக இருந்தாலும் சிலர் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். மக்களுக்கு இனவாதத்தைப் பாய்ச்சினார்கள்.
எந்தளவுக்கு என்றால் யுத்த காலத்தின் போது நான் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது குடிநீர் வினியோகம் வழங்க யாழ்ப்பாணம் சென்றிருந்த போது சிங்கள குடிநீர் வேண்டாம் என்று மக்கள் கோசமிட்டதை இன்று கூட எனது மனதில் இருந்து அகழவில்லை. அந்தளவிற்கு மக்களின் மனதை அவர்கள் மாற்றியிருந்தார்கள்.
குறிப்பாக அவர்களுக்கு அடங்காத கல்விமான்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் பொதுமக்களையும் நாள்தோறும் கொன்றுகுவித்தார்கள். இன்னும் பல சொல்லொன்னா அநியாயங்களையும் செய்தார்கள். எந்த மதத்திலும் கொலை செய்யச் சொல்லவில்லை. இருந்தாலும் தர்மத்தை மீறி செய்தார்கள். இறுதியில் என்ன நடந்தது?
இறை தண்டனை. சண்டியன் வாழ்வு சந்தியில். எல்லா செயல்களுக்கும் இறைவன் தீர்ப்பளிப்பான். அதுதான் நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையாகும். இன்று நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றோம். நாடு பூராக நிறைய அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.
அதில் ஓர் அங்கமாக உள்ளுராட்சித் துறையில் வட்டாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். வட்டாரத்தில் உள்ளவருக்கு நாம் வாக்களிக்கும் போது நமக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயிக்கப்படும். அவர் மிகவும் வலுவானவராக இருப்பார். அவருக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்படும். வாக்களித்த மக்களுக்கு நிறைய வேலைகளைச் அவர் செய்வார்.
இவற்றையெல்லாம் நாட்டின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டே செய்கின்றோம். இன்று நானத்தான் பிரதேச சபைக் கட்டிடம் கூட திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் நான் அறிந்தேன் நானத்தான் பிரதேச சபை தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் பிரதேச சபை என்று. அப்படி நாம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் போது யாருடையது, எந்த இனம், எந்த கட்சி என்று பார்ப்பதில்லை. அபிவிருத்திகள் எனும் போது பொதுவாகவே  நடைபெறுகின்றன.
நானத்தான் பிரதேச சபையின் தலைவர் என்னிடம் நிறைய கோரிக்கைகளை முன்வைத்திருகின்றார். வாழ்கின்ற மக்களுக்காக விரைவில் அதனை செய்து தருவதாக நான் உறுதியளித்திருக்கின்றேன்.
மேலும் இந்தப் பிரதேசத்தில் ஒரு திறமையான அமைச்சர் இருக்கிறார. றிசாட் பதியுத்தீன் இப்பிராந்தியத்திற்கு நிறைய சேவைகளை செய்து கொண்டு வருகின்றார். மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பணி செய்கின்றார். நானத்தான் பிரதேச சபை அமைச்சர் றிசாட் பதியுத்தீனை தனது அபிவிருத்திக்காக நிறைய பாவிக்கவேண்டும். மக்களுக்காக சேவை செய்ய அவர் தயாராக இருக்கின்றார்” எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.