8/16/2013

| |

4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அமைப்பு முடிவு

* தேர்தல் தினத்தன்று 150 கண்காணிப்புக் குழுக்களை ஈடுபடுத்தவும் ஏற்பாடு
* இது வரை 56 முறைப்பாடுகள் பதிவு
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக் கான தேர்தல் கண் காணிப்புப் பணிகளில் 4500 தேர்தல் கண் காணிப்பாளர்களை ஈடுபடுத்தவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் தெரிவித்துள்ளது.
தேர்தல் தினத்தன்று 150 ரோந்து கண்காணிப்புக் குழுக்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாக பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தினகரனுக்குத் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறவிருக்கும் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளிலும் எமது அமைப்பின் இணைப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 56 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றி ருப்பதாகவும், தேர்தல் பிரசாரங்களுக்கு அரச உடமைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகளே இவற்றில் அதிகம் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் அரச கட்டடமொன்று தேர்தல் பிரசார த்துக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அம்பகமுவ பகுதியில் வேட்பாளர் ஒருவரின் பிரசாரத்துக்காக தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து தலா 4000 ரூபா அறவிடப்பட்டதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று ள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் நுவரெலியா மாவட்டத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரைச் சந்தித்து நீதியான, சுதந்திரமான தேர்தலை நடத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்டுக்களை அகற்றுவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம் என்றார்.