8/29/2013

| |

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தை பொலிஸாரால் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் குமாரு சர்வானந்த் மீது நேற்று இரவு சாவகச்சேரியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா தெரிவித்தார்.

இதேவேளை இராமநாதன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்திருந்ததுடன், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை வேட்பாளர்களான மு.றெமீடியஸ், எஸ்.சர்வானந்த், எஸ்.அகிலதாஸ், எஸ்.பொன்னம்பலம் ஆகியோர் இராமநாதன் கைது செய்யப்படாவிடில் தேர்தலிலிருந்து விலகப்போவதாக இன்று மாலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.