8/31/2013

| |

காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது


அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.

நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர். 

சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 

பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை. 

நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார். 
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்

சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு....?

இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.

முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.

இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம்.

தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.

இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.

எங்கோ இலங்கை அரசுக்குப் 'பந்தம்' பிடிக்கும் அரசுப்பணியில் இருந்த சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிர்ஷ்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது சுவாமி பிரேமானந்தாவின் அருள்தானோ என்பதும் தெரியவில்லை.

திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை. 

சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது. 

கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை. 

'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.

தந்தை செல்வா கூறியமைபோல தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை. 

ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்....!
ஆருடன்!


நன்றி  இலங்கை நெட்