9/02/2013

| |

கொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகள்

நிரந்தர சமாதானத்துக்கு நல்லிணக்கமும் அவசியம்
யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைகளைப் பாராட்டுவதாக தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை புலிகள் போன்ற கொடிய அமைப்பை பாராட்டிப் பேசுவதற்கு எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை பயணத்தை முடித்த பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்துவெளியிட்ட அவர்; போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு அபிவிருத்திப் பணியைப் போல் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சிறந்த பேச்சாற்றல், சகிப்புத்தன்மையுள்ள அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகள் இளைஞர் பாராளுமன்றத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது. இளைஞர் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து அவைகள் நடவடிக்கைகளை நேரில் கண்டுகொண்ட போது இதை நான் உணர்ந்துகொண்டேன்.
இந்த இளைஞர் பாராளுமன்றம் மாதத்திற்கு ஒரு தடவை கூடி 13ஆவது திருத்தச் சட்ட மூலம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைகளை ஆராய்வதை அவதானித்து நான் புளகாங்கிதம் அடைந்தேன்.  இந்த மாணவர்கள் காலப்போக்கில் பிரதான அரசியலில் இணைந்து கொள்ளும் போது இந்த அழகிய தேசத்தில் சகிப்புத்தன்மையுடன் கூடிவாழும் நற்பண்பை ஏற்படுத்தக்கூடிய புதிய யுகம் உருவாகும். இவர்கள் என்னை அன்புடன் வரவேற்றமை குறித்து நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் நடைமுறைப்படுத்த உத்தேசித்திருக்கும் மும்மொழித்திட்டத்தை நான் அவரை சந்தித்த போது எனக்கு விளக்கிக் கூறினார். இதனை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இத்தகைய முயற்சிகள் மக்களிடையே ஐக்கியத்தையும், நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது 7 நாள் விஜயத்தின் இறுதி நாளன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது தன்னை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசாங்கத்திற்கு முதலில் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அரசாங்கம் நான் விரும்பிய இடமெல்லாம் செல்லலாம். நான் விரும்பியவர்களை சந்தித்து பேசலாம் என்று பூரண சுதந்திரத்தையும், அங்கீகாரத்தையும் வழங்கியது. என்றாலும் எனது இலங்கை விஜயத்தின் போது சிறிது சஞ்சலப்பட வேண்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நான் இந்த விஜயத்தின் போது கண்ட, கேட்டறிந்த, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பேன். ஆயினும் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் எழுத்து மூலமான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன் என்று கூறினார்.
நவநீதம்பிள்ளை அம்மையாரின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;
இலங்கையின் மனித உரிமை தொடர்புடைய விடயங்களை நாம் இரண்டு பகுதிகளாக பிரித்து பார்க்க வேண்டும். யுத்தம் நடந்த 27 வருட காலத்தை ஒரு பகுதியாகவும் அதற்கு பின்னர் முழு நாட்டிலும் இடம்பெற்ற விடயங்களை இன்னொரு பக்கமாகவும் பார்க்க வேண்டும்.
நான் இந்தியத் தமிழர் பாரம்பரியத்தை சேர்ந்தவள் என்ற அடிப்படையில் பலவருடங்களாக இங்குள்ள ஊடகங்களும், அமைச்சர்களும் வேறு பிரசாரங்களில் ஈடுபடுவோரும் என்னை எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் ஒரு கையாள் என்ற பாணியில் வர்ணிக்கின்றார்கள். நான் ஐ.நாவில் உள்ள தமிழ் புலிகளின் சம்பளத்தைப் பெறுகிறேன் என்றும் கூறுகிறார்கள். இந்தக்கூற்றுக்கள் தவறானவை மட்டுமல்ல, என்மீதான அபாண்டமான பழியை சுமத்துபவை நான் தென்னாபிரிக்க பிரஜை. இதுகுறித்து நான் பெருமைப்படுகிறேன். அடுத்தபடியாக இன்னுமொரு விடயத்தை கூற விரும்புகிறேன். எல்.ரி.ரி.ஈ. ஒரு கொலைகார அமைப்பாகும்.
நான் இதற்கு முன்னர் 1999ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. தற்கொலை குண்டுதாரியினால் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமாதான விரும்பியுமான நீலன் திருச்செல்வத்தை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்தேன். இத்தகைய கொடுமையான அமைப்பை போற்றிப் பேசுவதற்கு இடமில்லை. முல்லைத்தீவு கடலேரி பிரதேசத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்டதாக கூறப்படும் அழிவுகளை நான் நேரடியாக பார்த்தேன். மக்களிடையே உண்மையான நல்லிணக்கப்பாடு ஏற்படாவிட்டால் அவர்களின் இந்த வேதனை வடுக்கல் மாறாது.
2009ல் எல்.ரி.ரி.ஈ. யுத்தம் முடிவ டைந்த பின்னர் மக்களை மீள் குடியேற் றுதல், புனர்நிர்மாணம் , புனர்வாழ்வு நடவடிக்கைகள் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கின்றன. என்பதை எனது விஜயத்தின் போது அவதானித்தேன். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பு, அரசசார்பற்ற அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்றுள்ளன. பெரும்பாலான தரைக்கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுள்ளன. உள்ளூரில் இடம்பெயர்ந்த 400,000 இற்கும் அதிகமானோரில் பெரும் பாலானோர் இப்போது தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளார்கள். இவை அரசாங்கத்தின் பிரதான சாதனைகளாகும்.
அரசாங்கத்தின் இந்த சாதனைகள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படாததும் எனக்கு தெரியும். எனினும் வெறுமனே புனரமைப்பு பணிகளை செய்வதன் மூலம் நல்லிணக்கப்பாட்டையும் கெளரவத்தையும் அல்லது நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது. உண்மை, நீதி ஆகியவற்றுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு முழுமையான நடைமுறை எடுக்கப்படுவது அவசியமாகும்.
ஆரம்பம் முதல் யுத்தத்தின் பின்னர் இலங்கை உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கப்பாட்டையும் அடைய முடியும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். இவ்வறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல்களை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டுமென்று நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்.