9/21/2013

| |

* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாவதுடன் மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் இம்முறை தேர்தல்கள் கடமைகளில் 40,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறை மரத்திலான வாக்குப்பெட்டிக ளுக்குப் பதிலாக சில பகுதிகளில் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் உபயோகப் படுத்தப்படவுள்ளன. இதற்கென வெளிநாட்டிலிருந்து 250 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 145 வாக்கு எண்ணும் நிலையங்களும், குருணாகல் மாவட்டத்தில் 389 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணத்தில் உள்ள இரண்டு மாகாணத்திலும் 1,754,218 வாக்காளர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.
இவர்களில் புத்தளம் மாவட்டத்தில் 5,26,408 வாக்காளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 1,227,810 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 34 அங்கத்தவர்களும் புத்தளம் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 14 தொகுதிகளும், புத்தளம் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களே வாக்களிக்கவுள்ளனர்.

வட மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்முறை 53683 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் இம்முறை 55 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இம்மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகளையும், இரண்டு சுயேச்சைக்குழுக் களையும் சேர்ந்த 104 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இந்த தேர்தலில் 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதா கவும் அந்த அதிகாரி கூறினார்.

மத்திய மாகாண சபைக்கு 58 உறுப்பினர்களின் தெரிவிற்காக 1517 பேர் போட்யிடுகின்றனர். மூன்று மாவட்டங்களான நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் 44, 24 சுயேச்சை கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மக்களின் தொகை 18,89557 ஆகும். வாக்களிப்பு நிலையங்கள் 1571 இல் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 507,693 ஆகும். அவர்களுக்காக வாக்களிப்பு நிலையங்கள் 423 ஏற்படுத்தப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 16 உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்காக 14 அரசியல் கட்சிகளும் 9 சுயேச்சைக்குழுக்களும் இறங்கியுள்ளன. இவற்றில் இருந்து 437 பேர் போட்டியிடுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் சுதந்திர ஐக்கிய முன்னணி 146418 வாக்குகள் பெற்று 9 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 128289 வாக்குகள் பெற்று 7 உறுப்பினர்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் 423 வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் மொத்தமாக 71 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 75737 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 11221 பேர் இடம்பெயர்ந்த வாக்காளர்கள்.
இதேவேளை இடம்பெயர்ந்த வாக்காளர்களின் நலன் கருதி புத்தளம் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் ரிசாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலும், அதேபோன்று அனுராதபுரம் மாமினியாறு வித்தியாலயத்திலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன