9/05/2013

| |

படுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக திறப்பு

மட்டக்களப்பு நகரையும் படுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படும் மாவட்டத்தின் தென்புறத்தே உள்ள பரந்த பிரதேசங்களையும் இணைக்கும் பாலங்களின் நிர்மாண பணிகள் யாவும் பூர்த்தியடைந்து அவை மக்களின் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 378 மில்லியன் ரூபாய்கள் செலவில் இந்த பாலங்களை நிர்மாணிக்கும் பணிகள் இரண்டு வருடங்களுக்குள் நிறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு வலையிறவு, வவுணதீவு, ஆயித்தியமலை, முள்ளாமுனை மற்றும் தொப்பிகல (குடுமி மலை) ஆகிய இடங்களில் உள்ள பாலங்களே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

விவசாயப் பிரதேசமான படுவான் கரையை இணைக்கும் இந்த பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்தில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு இநத பாலங்கள் ஒரு வரப்பிரசாதமாகும்.ஆயித்தியமலை முள்ளாமுனை வவுணதீவுக்கூடான மூன்று பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டு அவை மக்களின் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளதால் மக்கள் செங்கலடி ஊடாக சுமார் 40 கிலோமீற்றர் சுற்றி வளைத்து மட்டக்களப்பு நகருக்கு வரவேண்டியிருந்த சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொப்பிகல (குடுமி மலை) கிரான் ஊடான போக்குவரத்தும் தொப்பிகல பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சீரடைந்துள்ளது. ஏற்கெனவே பல மணிநேரங்களை விரயம் செய்து தொப்பிகல பிரதேசத்து மக்கள் பயணத்திற்காக சிரமப்பட வேண்டியிருந்தது.