9/18/2013

| |

கிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மாகாண சபையை எப்படி இயக்கப் போகின்றது?

நடராசா தமிழ் அழகன்

 
லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்
நேர்கண்டவர் : ஆர்.கே.மேனன்
கேள்வி: வெற்றிலைச்சின்னத்தில் பல கட்சிகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. லங்கா சமசமாஜக் கட்சியின் இடதுசாரி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் நீங்கள் போட்டியிடுவதற்கான காரணங்கள் என்ன?
பதில்: இன்று வடமாகாணத்தில் இருமுனைத் தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஒரு முனையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மறுமுனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமாகும். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் பலம்பொருந்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் வெற்றிலையில்தான் போட்டியிடுகின்றார்கள். அது ஏன் என்று அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், நாம் வெற்றிலையில் போட்டியிடக் காரணம் 1977ஆம் ஆண்டு எனது தந்தையார் லங்கா சமசமாஜக் கட்சியில் கோப்பாய்த் தொகுதியில் தொகுதி வாரியாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைத் தட்டிக் கொண்டார்.
1978ஆம் ஆண்டு கிளம்பிய இளைஞர் தீவிரவாதப் போக்குகளால் லங்கா சமசமாஜக் கட்சி வடபகுதியில் இல்லாது போனது. 2009 யுத்தம் முடிந்த பின்பே மீண்டும் வரமுடிந்தது. இந்தப் போராட்டம் அர்த்தமற்றது. இதன் மூலம் எதையும் எமது இனம் பெற்றெடுக்க முடியாது என்பதில் எமது கட்சி அன்றும் இன்றும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன். எமது சமூகத்தை மேன்மையுற வைப்பதற்கும் இத்தேர்தல் மூலம் அதிகாரங்களை வலுப்படுத்தவும் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதை ஒவ்வொரு தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசை எதிர்த்து, குறிப்பாக மத்திய அரசை எதிர்த்து மாகாண சபையில் எதையும் சாதிக்க முடியாது. இதனால்தான் நாம் வெற்றிலையில் போட்டியிடுகின்றோம்.

கேள்வி: தமிழ்த் தேசியம் எனும் பெயரில் மக்களை உசுப்பேத்தி இனவாத சிங்கள குழுக்களை அரசியல் அழுத்தங்களிற்கு உட்படுத்தி, தமிழர்களிற்கு வரவிருக்கும் அதிகாரங்களைத் துண்டாடுகின்ற ஓர் அரிவரி அரசியல்தான் தற்போது அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து யாது? யாரை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள்?

பதில்: நடந்து முடிந்த அனுபவங்களையும், அழிவுகளையும் கருத்திற் கொண்டு எவர் மக்களின் எதிர்கால விடிவிற்காக முற்போக்கான சிந்தனைகளை மையமாக வைத்து சுயலாப அரசியலிற்கப்பால் தொழிற்படுகின்றார்களோ அவர்கள் எவராயிருப்பினும் நாம் ஆதரிக்கத் தயாராக உள்ளோம். குறிப்பாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்து தமிழ் வடபகுதி மக்களிற்கு பாரிய அபிவிருத்திகளை செய்தமையை எவரும் மறுக்க முடியாது.
அரச நிதியாக இருப்பினும் வடபகுதி குறிப்பாக தமிழ் மக்களிற்கு இந்நிதி கௌரவ அமைச்சரவர்கள் இல்லாவிட்டால் என்றுமே கிடைத்திருக்காது. இவ்வாறான செயற்பாடுகளை எவர் செய்தாலும் நாம் அவர்களிற்கு தோள்கொடுக்கத் தயார். அடுத்து இது நாடாளுமன்றத் தேர்தலல்ல. வடமாகாண சபைத் தேர்தல். இதில் மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இதன் மூலம் வடமாகாண சபை கூட்டமைப்பின் கையில் போகுமாக இருந்தால் எந்தப் பயனும் தமிழ் மக்களிற்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெளிவாக நான் சொல்ல விரும்புகின்றேன்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இங்கு வாழும் மக்களிற்கான ஓர் தேர்தல் விஞ்ஞாபனமல்ல. அது ஓர் புலம்பெயர் தமிழர்களிற்கான விஞ்ஞாபனம். புலம் பெயர் தமிழர்களிடமிருந்து நிதிகளைப் பெறுவதற்கான விஞ்ஞாபனம். அவர்களிடமிருந்து நிதி பெற்று அபிவிருத்திகளை செய்வார்களாம். அதை எப்படி செய்வார்கள் என்பதை சற்று விள்ளமாகக் கூறினால் நன்றாக இருக்கும்.
நாம் தமிழர் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தமிழர். இந்த உயர்குடிகள் என கூறப்படும் இவர்களிடம் இந்த பொலிஸ் அதிகாரங்கள் போகும் பட்சத்தில் என்ன நடக்குமென எமக்குத் தெரியும். அவர்கள் கேட்கின்றவை எல்லாம் அவர்களுக்காகவே தவிர எமக்கல்ல.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. இருவர் இருப்பினும் அவர்கள் வௌ;வேறு குலங்களில் இல்லை. ஓரே சமூகத்தவர்களே. இது தொடர்பாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்: எனது தந்தையார் கூறுவார் தமிழன் தமிழீழம் கேட்கின்றான், தமிழனை ஒடுக்குவதற்கு தற்போது நான் கூறுகின்றேன். தமிழ்க் கூட்டமைப்பு தனியரசு கோருகின்றது. தமிழரை ஒடுக்குவதற்கு சிங்களவனை ஆள்வதற்கல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை ஆள்வதற்குத்தான். இதை எமது வடபகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 50 வீதத்திற்கு மேற்பட்டோர் ஒடுக்கப்பட்ட இனங்களே வடபகுதியில் உள்ளன. இவர்களின் வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலில் அரங்கேறி இவர்களை ஒடுக்கித் துன்பப்படுத்ததும் நிலை கூட்டமைப்பினை அரங்கேற்றினால் நிச்சயம் நிகழும்.

கேள்வி: அப்படியால் உங்களுடைய மாகாண சபைத் தேர்தல் வெற்றி மக்களிற்கு குறிப்பாக, நீங்கள் நேசிக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களிற்கு எதைப் பெற்றுத்தருமென நீங்கள் கருதுகின்றீர்கள்? இதுவரை நீங்கள் இவ் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு எதைச் செய்தீர்கள்?
பதில்: நாம் செய்ய வேண்டுமென்று நினைப்பது சமூக அபிவிருத்தியையே. பொருளாதார அபிவிருத்தியைப் பற்றி நான் கதைக்கவில்லை. சமூகம் அபிவிருத்தியடையும்போது இப்பொருளாதார அபிவிருத்தி சுயமாக வந்தடையும். தேசிய அரசுடன் இணைந்து போய்த்தான் எமது சமூக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். இதுவரை நாம் நினைத்தவைபோல இவ் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாதிருந்தமைக்குக் காரணம் விடுதலைப் போராட்டமென்ற பெயரில் நாம் ஓரம் கட்டப்பட்டு இருந்தமையாகும்.
14 பிரதேச சபைகளை அன்று இக்கூட்டமைப்பு எடுத்து எதை சாதித்தது? அரசினால் ஒதுக்கப்பட்டு வந்த நிதிகள்கூட திரும்பிப் போயிருக்கின்றது. ஏனெனில், அந்தந்தக் கால கட்டங்களில் உரிய வேலைகளை இவர்கள் செய்யவில்லை. ஒருசில பிரதேச சபைகளைக் கூட இயக்க முடியாத கூட்டமைப்பு மாகாண சபையை எப்படி இயக்கப்போகின்றது. இவர்களிற்கு எந்தவித அனுபவங்களும் இல்லை. ஆனால், நாங்கள் அதிகாரங்களைப் பெற்றால் பலவற்றைச் சாதிக்க முடியும். ஏனெனில் நாம் அரசாங்கத்துள்தான் உள்ளோம். 13இல் குறிப்பிட்ட அத்தனை அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ள எம்மால் முடியும்.

கேள்வி: உங்களைத் தவிர உங்களது கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிடம் இந்த மாகாண சபை அதிகாரங்கள் சென்றால் தமிழ் மக்களிற்கு ஓர் சாதகமான நிலை உருவாகுமென நீங்கள் நம்புகின்றீர்கள்?
பதில்: பொருத்தமான கேள்விதான். ஆனால், பொறுக்காத கேள்வியிது. மறைந்த மேஜர் துரையப்பாவிற்குப் பின் இன்று அதிக வேலை செய்தவர் எமது டக்ளஸ் தேவானந்தாவே. இதை எந்தத் தமிழ் மகனும் மறுக்க முடியாது. வெறுமனவே வெற்றுக் கோஷங்களால் வீரவசனம் பேசுவோர் மத்தியில் செயலுருவம் கொடுத்த ஒரேயொரு தமிழ் அரசியல்வாதியென்று இவரைத்தான் பார்க்க முடியும். இனிவரும் காலங்களிலும் மத்தியரசுடன் இணைந்து மாகாண சபையை நகர்த்த இவரால்தான் முடியும் என்பதைக் கூறிக்கொள்வதோடு தாழ்த்தப்பட்ட மக்ளிற்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
உங்களுடைய சமூகத்தில் இருந்து உங்களுடைய கிராமத்தில் இருந்து உங்களுடைய தலைவர்கள் இனிவரும் காலங்களில் வேட்பாளராக முன்வரவேண்டும். இன்று கூட்டமைப்பைப் போல கொழும்பு -7இல் இருந்து கறுவாத் தோட்டத்தில் பிறந்த ஆளைக் கொண்டு வந்து எங்களிற்குத் தலைவர் என்று கூற முடியாது. எமது சுய துக்கங்களில் கலந்து கொண்ட ஓர் தலைவர்கள் வேட்பாளர்களாக வேண்டும். விக்னேஸ்வரனின் மூன்றாவது சந்ததி தமிழ் சந்ததியல்ல. ஏனெனில் எனது சிங்களத் தோழரின் மகளைத்தான் அவரது மகன் கட்டியுள்ளார். கொழும்பில் பிறந்தவர் தமிழ் கதைப்பதே இவர்களின் குடும்பங்களில் குறைவு. ஆனால், இன்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளார் எங்கள் மண் எங்கள் உரிமையென்று. ஆகவே, ஒன்றை இறுதியாகக் கூறுகிறேன். மக்கள் எப்போது உணர்வூட்டல்கள், உசுப்பேத்தல்களிற்கப்பால் உங்கள் வாழ்வு, உங்கள் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கின்றீர்களோ அன்றுதான் சுயலாப அரசியல்களிற்கப்பால் சுதந்திர அரசியல் சிந்தனை உருப்பெறும்.