9/24/2013

| |

டான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்! -யாழ். நிருபர்

வடமாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றியதும் தாம் நடாத்திய முதலாவது கூட்டத்திலேயே தமக்கு எதிரானவர்களை எப்படி அழிப்பது என்பது குறித்தே கூட்டமைப்பின் தலைவர்கள் ஆராய்ந்திருப்பதாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபைக்குத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது முதலாவது கூட்டத்தையும், பத்திரிகையாளர் மாநாட்டையும் 23ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் நடாத்தியிருந்தனர்.இந்த கூட்டத்தில் வைத்து கூட்டமைப்பின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் ஆலோசகருமான என்.கே.சிவாஜிலிங்கம், தேர்தல் காலத்தில் தமக்கு எதிராக செயற்பட்டுவந்த டான் தொலைக்காட்சியை இடிக்கவேண்டிவரும் என்று கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு கூறியதனை அவதானித்த டான் தொலைக்காட்சியின் செய்திப்ப்pரிவு பொறுப்பதிகாரியான தயா மாஸ்டர் அவரிடம் தனது கண்டனத்தை பதிவுசெய்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அதிகாரத்திலிருந்தபோது எப்படி தமக்கு எதிரானவர்களை எதிர்கொண்டார்களோ அதேபாணியிலேயே கூட்டமைப்பினர் செயற்படப்போகின்றார்கள் என்பதையே இந்தச் சம்பவம் புலப்படுத்தியிருக்கின்றது. அதிகாரம் எதுவுமில்லாத மாகாண சபை என்று அவர்களே திரும்பத் திரும்பக் கூறிவந்த நிலையில், அந்த மாகாண சபையின் எந்தவொரு அதிகாரத்திற்கும் உட்படாத ஒரு ஒளிபரப்பு சேவையை இவர்களால் எப்படி இடிக்க முடியுமோ தெரியவில்லை. சில வேளை, புலிகளின் பாணியில் இடிக்க விரும்புகின்றார்களோ தெரியவில்லை.தேர்தல் பரப்புரைக் காலத்தில் டான் தொலைக்காட்சி அரச வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டபோதிலும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க முன்வந்தபோதிலும் சிவாஜிலிங்கம் மாத்திரமே அதனை பயன்படுத்தி அரச வேட்பாளர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் அவர்களுடன் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதில் கூட றெமீடியஸின் வாதத்திற்கு முகம்கொடுக்க முடியாமல் திண்டாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.