10/03/2013

| |

தமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு தோல்வி! அடுத்த ஷோ நாளை!! -

இலங்கை வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க தயாராக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்ட நேற்றைய பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எடுக்கப்படாமல், முடிவடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்வு செய்து ஆட்சியில் அமர்த்துவது என இலங்கை வடக்குப் பகுதி தமிழ் மக்கள் முடிவு செய்து, வாக்களித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்போ, தமது அமைச்சர்களாக யாரை தேர்வு செய்வது என முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது! ‘இறுதி’ vs ‘இறுதியோ இறுதி’ புதிய ஆட்சியில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்று முடிவு எடுக்கவே, இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறித்துவிட்டு கலைந்தார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள். ‘இறுதி’ முடிவு எடுக்க அடுத்த ஆலோசனைக் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுமாம். அதற்கு அடுத்த ஆலோசனைக் கூட்டம் ‘இறுதியோ இறுதி’ முடிவு எடுக்க எப்போது கூடும்? என்று வெள்ளிக்கிழமை சொல்வார்களோ, என்னவோ! மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள 30 உறுப்பினர்களில், பதவி கிடைக்கப் போவது, 5 பேருக்கு மட்டுமே (முதல்வர், 4 அமைச்சர்கள்). கூட்டமைப்பில் மொத்தமாக உள்ள (ஜெயித்த) கட்சிகள், நான்கு. சின்ன வயதில் எதுவோ(?) அப்பங்களை பிரித்த கதையாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை, 5 அப்பங்களை 4 கட்சிகளுக்கு பிரிக்க வேண்டும். சிரமமான காரியம்தான். காரணம், பதவி பெற்று மக்களுக்கு சேவை செய்ய 5-க்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். தலைவர் உச்சத்தில்! மற்றையவர்கள் அச்சத்தில்!! தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், தமிழரசு கட்சியை சேர்ந்தவர். முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனை பரிந்துரைத்ததும் இந்தக் கட்சிதான். இதனால், கைவசமுள்ள 5 பதவிகளில் 1 ஏற்கனவே இந்தக் கட்சியிடம் உள்ளது. மீதியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளில், 2 பதவிகளை கேட்கிறார், தலைவர்! மீதியாகவுள்ள 4 பதவிகளையும் தமக்கே எடுத்துக் கொள்ளாமல், 2 பதவிகளை 3 கட்சிகளுக்கு விட்டுத்தர சம்மதித்த இவரது பெருந்தன்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டால் தானே, இலங்கை அரசிடம் உள்ள அதிகாரங்களை தமிழர்களுக்கு விட்டுத்தர சிங்கள அரசை இவரால் சம்மதிக்க வைக்க முடியும்? “இரண்டை, மூன்றால் எப்படி வகுப்பது?” என்று கேட்கிறார்கள், மற்றையவர்கள். “அது என்ன பிரம்ம வித்தையா?” என்று கேட்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், “3 கட்சிகளில் 2 கட்சிகள் அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள 1 கட்சி, சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளட்டும். ப்ராப்ளம் சால்வ்ட்” என்கிறார். நல்லவேளையாக 1 கட்சிக்கு அமைச்சர் பதவி, 1 கட்சிக்கு சபாநாயகர் பதவி.. மீதமுள்ள கட்சிக்கு மாகாணசபையில் “பியூன்” வேலை தருகிறோம் என்று தலைவர் சொல்லவில்லை… இங்கே அடிக்காதிங்க.. தலைவரே.. அங்கே அடியுங்க! “ஏங்க.. முதல்வர் உங்க ஆள். 1 அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு, மற்றைய மூன்று கட்சிகளுக்கும் தலா 1 அமைச்சர் பதவிகளை பிரித்துக் கொடுக்கலாமே” என்று கேட்டால், தமிழர் தலைவர் அடிக்க வருகிறாராம். சிங்கள அரசிடம் குவிந்து கிடப்பதாக கூறப்படும் அதிகாரத்தை, தமிழர்களுக்கும் நியாய அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப் போகிறாராம், இந்த தலைவர். ஆனால், தமிழர்களை கொண்ட ஒரே கூட்டணிக்குள் உள்ள தமிழ் கட்சிகளுக்கு, நியாய அடிப்படையில் அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கவே இவர் இந்தத் திணறு திணறுகிறாரே.. அப்புறம் எப்படி..? இதுவரை அனுபவித்தே இராத அமைச்சர் அதிகாரங்களை, சொந்தக் கூட்டணிக்குள் பிரித்துக் கொள்ளவே இவர்களுக்கு பல சுற்று பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டால்.. சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து அதிகாரங்களை அனுபவித்த சிங்களவரிடம் இருந்து அதை பிரித்து எடுக்க, எத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமோ… விடிந்த மாதிரி தான்!!! thaks athirady .com