12/26/2013

| |

நேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்கம்

நேபாள பாராளுமன்றத்தில் இடம் பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டதையடுத்து அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
நேபாள நாடாளுமன்றத்திற்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கடுத்து மார்க்சிஸ்ட லெனினிஸ்ட் கட்சி 91 இடங்களிலும் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி, பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால் புதிய அரசு அமைவதிலும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை நேபாள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், மாதேசி மக்கள் உரிமை அமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர்.
இதில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்துவது, 6 மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட 4 முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டது.