1/09/2014

| |

ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளியில் 'அம்மன்' சிலை

ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் அமைக்கவிருப்பதாக இங்குள்ள காங் எம்.எல்.ஏ., ஒருவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார். தெலுங்கானா அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவரது சொந்த செலவில் தெலுங்குத்தாய் போன்று அம்மன் உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

9 ஏக்கர் நிலத்தில் இந்த கோயில் : 
இது குறித்து காங்., எம்.எல்.ஏ., டாக்டர் சங்கர் ராவ் கூறுகையில்: தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சோனியா நிறைவேற்றினார். இதனால் இவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில் அமைக்க முடிவு செய்துள்ளேன். இந்த கோயில், பெங்களூரூ- ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள எனது மகளுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும். இதற்கு சோனியா காந்தி சாந்தி வதன் என்று பெயரிடப்படும். தெலுங்கானா மக்கள் இங்கு சென்று நன்றி செலுத்த இந்த கோயில் ஏதுவாக இருக்கும் என்றார். 

இந்த சிலை 500 கிலோ எடை கொண்ட வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் முகஸ்துதிக்காக செய்யப்படவில்லை. நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. , 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு நான் முழு விசுவாசியாவேன். இவ்வாறு அவர் கூறினார்.