1/06/2014

| |

வட பகுதியில் சூறாவளி அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மணித்தியாலத்திற்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் இலங்கையின் வட கிழக்கு கடலில் நகர்ந்து கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் அனுஷா வர்ணசூரிய நேற்று கூறினார்.
இலங்கையின் வட கிழக்கு கரையோரப் பகுதியில் நாட்டுக்கு மிக அண்மையில் காணப்படும் இத்தாழமுக்கம் நாட்டின் வட பகுதி ஊடாக மன்னார் குடாவை நேற்றிரவு சென்றடைய முடியும் எனவும் அவர் நேற்று மாலையில் தெரிவித்தார்.
நேற்று முன் தினம் வங்காள விரிகுடாவில் உருவான இத்தாழமுக்கம் மணித்தியாலத்திற்கு பத்து கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்தாலும் அத்தாழமுக்கம் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு சுமார் நூறு கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தாழமுக்கம் மணித்தியாலத்திற்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் நாட்டின் வடபகுதியைக் கடந்து செல்லும். இதேவேளை, சில பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றர்கள் வரை மழையும் பெய்யும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, இத் தாழமுக்க நிலை காரணமாக மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடாகத் திருகோணமலை வரையான கடற்பரப்பு கடும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. இத்தாழமுக்கம் காரணமாக கடலலை சில நேரம் மூன்று மீற்றர்கள் உயரத்திற்கு உயர முடியும் எனவும் அவர் கூறினார்.
இதேநேரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சரத் லால் குமார கூறுகையில்:- இலங்கையின் வடக்கு கிழக்குக் கரைக்கு மிக அண்மையில் தாழமுக்கம் காணப்படுவதால் திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பா ணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கரை யோரத்திலிருந்து நூறு மீற்றர் தூரத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்களது படகுகளும், வாகனங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
இத்தாழமுக்க நிலைமை காரணமாக எந்த சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கக் கூடியவகையில் முப்படையினரும், பொலிஸாரும், அரசாங்க உத்தியோகத் தர்களும், சுகாதாரத் துறையினரும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
கடும் காற்று தொடர்பில் நேற்றுக்காலை கிடைத்த எச்சரிக்கையை அடுத்து எந்த ஒரு அனர்த்தத்திற்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு உஷார் நிலையில் இருந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் விடுமுறை தினமாக காணப்பட்ட போதிலும் எச்சரிக்கை அறிவித்தலை அடுத்து கச்சேரி, பிரதேச செயலாளர் அலுவல்கள் உட்பட சகல அரசாங்க நிறுவனங்களும் நேற்றுக் காலை தொடக்கம் இயங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றுக் காலை முதல் சகல அரச அதிகாரிகளும், பாதுகாப்புப்படையினரும் ஒன்றிணைந்த அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
விசேடமாக யாழ்ப்பாணத்தில் கரையோர பிரதேசங்களான பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பகுதிகளிலேயே கூடுதலாக பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் அந்தக் கரையோரங்களில் வாழும் மக்கள் 100 தீற்றர் தூரத்திற்கு அப்பால் நேற்றுக் காலை முதல் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்படுவதால் அநேகமானவர்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியதாகவும் குறிப்பிட்டார்.
சகல தரப்பினர்களையும் பயன்படுத்தி மாவட்ட, பிரதேச கிராமிய விழிப்புக் குழுக்களையும் ஈடுபடுத்தி மக்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டன என்றார்.
சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் மக்களுக்கு தொடர்ச்சியாக இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பல்வேறு வகையான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையினால் பாரிய அளவில் பீதி மக்கள் மத்தியில் ஏற்படவில்லை. என்றாலும் பாதுகாப்பான இடத்திற்கு முன்னெச்சரிக்கையாக அனுப்பப்பட்டனர்.
எனினும் நேற்று நண்பகல் தொடக்கம் பருத்தித்துறை, ஊரணி கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், கடலுக்கு மீன்பிடிப்பதற்கு செல்லவிருந்த மீனவர்களும் தடுத்த நிறுத்தப்பட்டனர் என்றார். என்றாலும் ஊரணி கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீன்பிடி படகு ஒன்று சேதமடைந்துள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார் என்றார்.
தமது எச்சரிக்கை அறிவித்தலுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீன்பிடி படகே இவ்வாறு சேதமடைந் துள்ளது என்றாலும் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
ஓரணி, பொலிகண்டி பகுதியில் இருந்து சென்ற படகே பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடலுக்குச் சென்றதாக வேறு விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார். இதேவேளை, அனர்த்தம், அல்லது பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் அந்த மக்களுக்கு நிவாரணங்களையும் தேவைப்படின் உலர் உணவுகளையும் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டி ருந்ததாக அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகம்
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகம் கூறியதாவது, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சூறாவளி முன்னெச்சரிக்கையினைத் தொடர்ந்து கடலிலிருந்து 100 கிலோ மீற்றருக்குட்பட்ட மக்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் என்ஜின்களையும் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
பொலிஸார், இராணுவம், கடற்படையினர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள், உதவி அரசாங்க அதிபர் அலுவலர் ஆகியன கரையோரங்களின் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனியே மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவிப்பு விடுத்துவருவ தாகவும் அரச அதிபர் கூறினார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் முல்லைத்தீவு கரையோர மக்களுக்கு அடிக்கடி அனர்த்த ஒத்திகை நடத்தப்பட்டிருப்பதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொது இடங்கள் குறித்து மக்கள் அறிந்து வைத்திருப்பதாக கூறிய அவர், இடம்பெயர்வோருக்கு தேவையான உணவுகளை வழங்க அரசாங்க அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி அரச அதிபர்கள் கூறியதாவது:
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுகத்தினால் உருவாகக்கூடிய சூறாவளி திருமலை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை பாரதூரமாக பாதிக்காதென அம்மாவட்டத்திற்குரிய அரசாங்க அதிபர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இருப்பினும் இம்மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கடலோரத்தில் வசிக்கும் மக்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் என்ஜின்களையும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர்களான மேஜர் ஜெனரல் டி.டி.ஆர்.டி. சில்வா, திருமதி சார்ல்ஸ் மற்றும் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தினகரனுக்குத் தெரிவித்தனர்.