1/20/2014

| |

பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதைசெலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர்.
வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை முன்பக்கமாக குவித்துகொண்டிருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  கைகளை வயிற்றுக்கு முன்பாக குவித்துவைத்துகொண்டு நின்றதுடன் அவருடைய பாதணிகள் இரண்டும் கழற்றப்பட்டிருந்தன.

முன்வரிசை கதிரையில் முதலமைச்சர் அமர்ந்திருந்தமையினால் அவர் தனது பாதணிகளை கதிரைக்கு முன்பாக கழற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறுதான் அவர் அமர்ந்திருந்தாலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அவர் எழுந்துநின்றமையினால் அவை கதிரையின் அடியில் அல்லது அவருடைய கால்களுக்கு பின்னாலே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.