2/26/2014

| |

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு

நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை ஏற்குமாறு விஷ்வநாதன் ருத்ரகுமார் விடுத்த கோரிக்கையை தென் ஆபிரிக்கா நிராகரித்துள்ளதோடு, இலங்கையை பிளவுபடுத்தும் எந்த முயற்சிக்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைக்காது என தென் ஆபிரிக்க தலைவர்கள் தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தனது தென் ஆபிரிக்க விஜயத்தின்போது பல தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்ததாக கூறிய அவர், இலங்கை மக்கள் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவதை காண்பதே தங்களது எதிர்பார்ப்பு என அவர்கள் குறிப்பிட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்காவின் ஆதரவை பெறுவதற்காக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலைமையிலான குழு தென் ஆபிரிக்கா பயணமானது. நாடு திரும்பியுள்ள அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தனது தென்ஆபிரிக்க விஜயம் குறித்து பெந்தர - எல்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.
அன்று ஆயுத பலத்தினால் பெற முயன்ற ஈழத்தை தற்பொழுது தமிழ் டயஸ்போரா உலகம் முழுவதும் சதி செய்து பெற முயல்கின்றனர் என்றும் கூறினார்.
இலங்கை குறித்து தென் ஆபிரிக்காவுக்கு பெரும் கெளரவம் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புலிகளின் பிம்பம் சர்வதேச மட்டத்தில் குழப்பி வருகிறது என்றும் கூறினார்.
எமது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தவும் நாம் அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தியை குழப்பவும், தமக்கு தேவையானவாறு ஆட்டக்கூடிய பொம்மை அரசாங்கமொன்றை உருவாக்கவுமே மேலைத்தேய நாடுகள் முயல்கின்றன. தேசிய நோக்கின் அடிப்படையில் செயற்படுவதாலே சில சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை.
மேலைத்தேய நாடுகளின் முன் தலை சாய்ப்பதற்கு அவர் தயாராக இல்லை. சர்வதேச விசாரணை கோருமளவிற்கு எமது நாட்டில் என்ன தவறு நடந்தது? யுத்தத்தின்போது பயங்கரவாதிகளால் படைவீரர்கள் கொல்லப்படுவர். படை வீரர்களினால் பயங்கரவாதிகள் கொல்லப்படுவர். இதில் எதற்கு விசாரணை நடத்துமாறு கோருகின்றனர். எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவரும் அதே நபர்கள்தான் ஜெனீவாவில் எமக்கு எதிராக விசாரணை நடத்த உள்ளனர். அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது.
பிரபாகரனின் பயங்கரவாத சவாலுக்கு அன்று நாம் ஒன்றிணைந்து ஒரே இனமாக முகம் கொடுத்தோம்.
இந்த சர்வதேச சவாலையும் நாம்ஒரே இனமாக ஒன்றுபட்டு வெற்றி கொள்ள வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாத காரணத்திற்காக மேலைத்தேய சதிகாரர்கள் யுக்ரேனை பழிவாங்குகின்றனர். அந்த நாட்டு எதிர்க் கட்சியை கைக்குள் போட்டுக்கொண்டு மக்களை தூண்டி விடுகின்றனர். இது தான் மனித உரிமை குறித்து எமக்கு கற்பிக்கும் நாடுகளுடைய அரசியல்பாடமாக உள்ளது.
எம்மைப் போன்று சுயமாக எழுந்து நிற்கும் நாட்டையும் அதன் தலைவர்களையும் அழிப்பதற்காக சர்வதேச சக்திகள் நாட்டிற்குள் குழப்பம் செய்கின்றன.
கடந்த தேர்தலைவிட ஒரு வாக்காவது மேலதிகமாக வழங்கி நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும். எம்மை காலால் இடிக்கும் மேலைத்தேய நாடுகளுக்கு இது நல்ல பதிலாக அமையும் என்றார்.