2/14/2014

| |

நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டோம்

கோவிந்தா கோவிந்தா வன்னிப் பள்ளிகளுக்குக் கோவிந்தா...

-வடபுலத்தான்
வன்னியின் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஒரு அருமையான தீர்வைக் கண்டு பிடித்து அறிவித்திருக்கிறது.

என்ன தீர்வு தெரியுமா? vanni school

'கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித்து வெளியேறும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனை அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர். கல்வி அமைச்சின் கோரிக்கையை பயிற்சி ஆசிரியர்கள் சாதமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளனர்'.

இதுதான் அந்தத் தீர்வு.

தயவு இதைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள்.

இந்த ஆசிரியர்கள் தற்போதே பயிற்சியை முடித்திருப்பவர்கள்.

இவர்களுக்கான பரீட்சை இன்னும் நடக்கவில்லை. அந்தப் பரீட்சை நடந்து, அதன் பெறுபேறுகள் காணப்பட்டதன் பின்னரே இவர்களுக்கான சம்பள அதிகரிப்பு செய்யப்படும்.

அதுவரையிலும் இவர்கள் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வோராகவே இருக்கின்றனர்.

அதிலும் இந்த ஆசியரியர்களில் பெரும்பாலானவர்கள் (75 வீதத்திற்கும் அதிகமானவர்கள்) தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி, 2009 இல் நியமனம் பெற்றவர்கள். ஏனையவர்களே வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே பெரும்பாலானவர்களாக இருக்கும் தொண்டர் ஆசிரியர்களும் தற்பொழுது 6000 (ஆறாயிரம்) ரூபாவை மட்டுமே சம்பளமாகப் பெறுகின்றனர்.

கடந்த மாதம் மாகாணசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது 10,000 (பத்தாயிரம்) ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

எனவே ஆறாயிரம் ரூபா சம்பளத்தைப் பெறும் பெரும்பாலான ஆசிரியர்களே தற்போது வன்னிக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இப்படிக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, எப்படி இவர்கள் வன்னிக்குச் செல்ல முடியும்?

இது நீதியானதல்ல.

அடுத்தது, இவர்கள் தற்போதுதான் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

இவர்களையே முழுமையாக வன்னிக்குத் தள்ள முற்படுகிறது வட மாகாணசபையின் கல்வி அமைச்சு.

இவர்களை யாழ்ப்பாணத்துக்கும் பகிர்ந்தளிப்பதைப்பற்றி அது சிந்திக்கவில்லை.

அப்படிப் பகிர்ந்தளித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியர்களில் ஒரு தொகுதியினர் கண்டிப்பாக வன்னிக்குச் செல்லவேண்டியிருக்கும்.

ஆனால், அவர்களோ வன்னிக்குச் செல்லத்தயாரில்லை.

அவர்களை அனுப்புவதற்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கும் அமைச்சருக்கும் திராணியுமில்லை.

காரணம் வேறொன்றும் இல்லை.
Kokkulaayschool
அப்படி வன்னிக்குச் செல்ல வேண்டிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள், கடந்த தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நின்றவர்கள். சிலர் தேர்தற் பரப்புரைகளில் கடுமையாக உழைத்தவர்கள்.

எனவே அவர்களை முறிக்கவோ கட்டுப்படுத்தி கடமையைச் செய்ய வைக்கவோ மாகாணக் கல்வி அமைச்சினால் முடியாது. அப்படி முயற்சித்தாலும் அவர்களுக்காக அவர்களுடைய தயவைப்பெற்று தெரிவாகிய ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் விடமாட்டார்கள். அரசியல் செல்வாக்குடைய அவர்களை எவரும் எதுவும் செய்ய முடியாது.

ஆகவே, அவர்களை அனுசரித்துப் போவதைத் தவிர, மாகாணசபைக்கு வேறு கதியில்லை.

எனவே, வன்னிக்கு தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களை அனுப்ப முடியாத நிலையில், புதிய பயிற்சி ஆசிரியர்களையே மாகாணக் கல்வி அமைச்சு பிடித்திருக்கிறது.

இதன் மூலம் வன்னியில் பெரும் பிரச்சினையாக இருக்கும் ஆசிரிய பற்றாக்குறையைத் தீர்த்து விட்டதாகவும் இருக்கும். அதாவது யாழ்ப்பாண ஆசிரியர்களை நோகாமல் வைத்ததும் ஆகும்.

ஆகவே இதைச் சமாளிப்பதற்காகவே மாகாணசபை இந்தப் புதிய பயிற்சி ஆசிரியர்களின் கழுத்தில் கையை வைத்திருக்கிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டிருப்பது இந்தப் புதிய ஆசிரியர்களே.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தொண்டர் ஆசிரியர்களாக இருந்து 2009 இல் நியமனம் பெற்றவர்கள் அல்லவா. இந்த நியமனத்தை வழங்கியவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும்.

ஆகவே அப்படி நியமனம் பெற்றவர்களை வன்னிக்கு அனுப்பி அரசியல் ரீதியாகப் பழிவாங்கியதுமாகும்.

பாவம் வன்னி மாணவர்களும் வன்னி மக்களும். தங்களுடைய எதிர்காலத்தின் மீது தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர்.

கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, வன்னியில் பணியாற்றியவர் என்பதால் தங்களின் நிலைமையை விளங்கிக் கொள்வார் என்று நம்பியவர்களின் நிலைதான் இன்று கோவிந்தா.

இந்த லட்சணத்தில் கிழக்கும் இணைந்திருந்தால் மட்டக்களப்பு மாணவர்களுக்கு படிப்பு எதற்கு என்று  பள்ளிகளுக்கு  மாகாணசபை மூடுவிழா நடத்தியிருக்கும்.நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டோம்