3/15/2014

| |

அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக்கி வன்முறைகளும் 11ஆயிரம் படுகொலைகளும் பதிவு

* ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம்
* ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல்கள் நடத்தி அமெரிக்கா மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தகவல்
அமெரிக்கா பலதரப்பட்ட மனித உரிமைத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதென்றும் கெளடனாமாவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் வருடக்கணக்கில் கைதிகளை தடுப்புக் காவலில் வைத்திருத்தல், ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்துதல், தேசிய பாதுகாப்பு அமைப்பின் மூலம் நாடுகளை வேவுபார்த்தல், நியாயமற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்றுதல், துப்பாக்கிச் சூட்டு வன்முறை சம்பவங்கள் போன்ற மனித உரிமைகள் மீறல்களை அமெரிக்கா செய்துவந்துள்ளதாக அமெரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றுடன் இன ரீதியில் சமத்துவம் இன்மையினால் மக்களை துன்புறுத்தல் போன்ற குற்றங்களைப் புரிந்திருக்கிற தென்றும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் உச்சி மாநாட்டின் போது அமெரிக்காவுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஜெனீவாவுக்கான அமெரிக்க தூதுக்குழுவினரை இரண்டு நாட்கள் கேள்வி கேட்கும் பணியை மேற்கொண்ட 18 நிபுணர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க தூதுக்குழுவினர் பதிலளிக்க முடியாது தலைகுனிந்து இருந்ததாக இந்த விசாரணையை நேரில் பார்த்தவர்கள் அறிவிக்கிறார்கள்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு செயற்பாடுகள் எட்வட் ஸ்னோடம் என்ற அமெரிக்க அதிகாரி வெளியிட்ட உண்மைத் தகவல்களினால் அமெரிக்க அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றிய புதிய தகவல்கள் இப்போது எழுந்துள்ளன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்பற்றிய 6,300 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இவை வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா 5 வருடங்களுக்கு ஒரு தடவை தனது மனித உரிமை மீறல்கள் பற்றிய கொள்கைகளை மாற்றுகின்ற போதிலும் வருடத்திற்கு வருடம் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது பற்றி இந்த அதிகாரிகள் ஜெனீவாவில் சுட்டிக்காட்டினார்கள்.
அமெரிக்காவின் இந்த மனித உரிமை மீறல்களினால் முழு அமெரிக்காவே இன்று வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தார்கள். அமெரிக்காவின் ஆளில் லா விமானங்கள் அல்கைதா சந்தேக நபர்களை தாக்கி படுகொலை செய்வதுடன், அங்கு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்றாவது நாடான அல்ஜீரியா போன்றவற்றுக்கு எடுத்துச் சென்று அங்கு படுமோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் இந்த நிபுணர்கள் ஜெனீவாவில் அமெரிக்க நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தினார்கள்.
9/11 கோபுரத் தாக்குதல்களை அடுத்தே அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்தது என்றும் குற்றம் சாட்டப் பட்டது. அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் துப்பாக்கியைப் பயன்படுத்தி 4 லட்சத்து 70 ஆயிரம் குற்றங்கள் புரியப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 11 ஆயிரம் படுகொலைகளும் இடம்பெறுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இந்த வன்முறைகளைத் தடுப்பதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த நிபுணர்கள் அமெரிக்க அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.