3/02/2014

| |

கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்

sivayogam-2
ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் என அறியப்பட்ட சிவயோகம் அறக்கட்டளையும், அதன் ஸ்தாபகர் நாகரட்ணம் சீவரட்ணமும் தவறான காரணங்களுக்காக எப்போதுமே பேசப்படுபவர்களாக உள்ளனர். நிர்வாகச் சீர்கேடு, நிதிமோசடி, பாலியல் துஸ்பிரயோம் என்பன சிவயோகம் – சீவரட்ணம் இணைப்பின் குறியீடாகி விட்டது.
ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தோற்றமும்- வழக்கும்
1987இல் நைஜீரியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த சீவரட்ணம் ஆரம்பத்தில் ஆச்சுவே முருகன் ஆலயத்துடன் இணைந்து இருந்தார். ஆச்சுவே ஆலயத்தில் இருந்து வெளியேற்றப்பட, ‘நான் ஒரு ஆலயத்தை உருவாக்குகிறேன்’ என்ற சபதத்துடன் வந்தார். 1996இல் ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயத்தை ஆரம்பித்தார். அதன் அறக்கட்டளை உறுப்பினர்களாக என். சீவரட்ணம், அவருடைய சகோதரர் நாகரட்ணம் கருணாநிதி, சீவரட்ணத்தின் நண்பர் சிங்கம் ஆகிய மூவரும் இருந்தனர்.
2003 முதல் 2008 வரை இடம்பெற்ற ஆயலயத்துக்கு கீழே இருந்த பகுதியின் வாயில் தொடர்பான வழக்கில் சிவயோகத்தின் பிரதம அறக்கட்டளையினரான சிவரட்ணம், அவருடைய சகோதரர் கருணாநிதி ஆகியோருக்கு எதிராக தீர்ப்பு வந்ததுடன், 300,000 பவுண்கட்ட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி தனது சொத்துக்களை மகளுடைய பெயருக்கு ஏற்கனவே மாற்றிய போதும் சட்டம் அவர்களை விரட்டியது. இறுதியில் மகளின் வீடு பறிபோகும் நிலையில் வீட்டை வைத்து மீள வங்கிக் கடனைப் பெற்று அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தினர்.
சீவரட்ணம் தன்னுடைய அபராதத்தை செலுத்த முடியாத நிலையில் திவாலாகி விட்டதாக அறிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற வழக்கின் செலவு பொதுப் பணத்தில் இருந்தே செலுத்தப்பட்டது.
சிவயோகம் ஆலயத்தின் வருமானம், நன்கொடைகள் பெருகியது. ரூற்றிங்கில் இருந்து ஆலயம் வெளியேற்றப்படுவதற்கு முன் 2012 மார்ச்சில் முடிவடைந்த நிதி ஆண்டில் ஆலயத்தின் கணக்கியல் பதிவில் காட்டப்பட்ட வருமானம் அண்ணளவாக ஒரு மில்லியன் 895,000 பவுண்களுக்கு உயர்ந்தது.
நிதி நிர்வாக விடயங்களில் சீவரட்ணத்தின் கட்டுப்பாடு
2007இல் சீவரட்ணத்தின் நிதிக் கையாள்கை, நிர்வாகச் சீர்கேடு மற்றும் காரணங்களுக்காக பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணையகம் அவரை சிவயோகம் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றியது. இருந்தாலும் தனது பிள்ளைகளதும் சகாக்களதும் துணையுடன் சீவரட்ணம் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்.
ஆலயத்தின் நிதி விடயங்களிலும் நிர்வாக விடயங்களிலும் அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தது.
சிவயோகத்தின் நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் சண்முகராஜாவோடு தொடர்புகொண்ட போது அவர் எமது எந்தக் கேள்விக்குமே பதிலளிக்க தயாராக இல்லை. இது தொடர்பாக சீவரட்ணத்தையே தொடர்புகொள்ளுமாறு கூறினார். ‘நீங்கள் தானே சிவயோகத்தின் தலைவர்’ என்று குறுக்கிடவும், தான் தற்போது வேலையில் இருப்பதாகவும் சீவரட்ணத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.
உண்டியல் பணத்தில் பங்கு
ஆலயத்தில் இருக்கும் உண்டியல்களை சீவரட்ணம் மட்டுமே எண்ணி வந்துள்ளார். ஆலயத்தில் 12 உண்டியல்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் இரு சாவிகள் இருக்கும். ஒன்று தனாதிகாரியிடமும் மற்றையது செயலாளரிடமும் இருக்க வேண்டும் என்பது சிவயோகம் அறக்கட்டளையின் ஒழுங்கு விதி. ஆனால் 2011 சரவணமுத்து குமரேசன் தனாதிகாரியாக இருந்த காலப்பகுதியில் அவரிடம் சாவிகள் கையளிக்கப்படவில்லை என சரவணமுத்து குமரேசன் தேசம் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
உண்டியல் பணத்தில் முதலாவது 1000 பவுண்கள் அவருடைய மகன் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்பி நிமலனுக்கு வழங்கப்பட்டு வந்ததாக, (முன்னர் 500 பவுண்களே வழங்கப்பட்டதாகவும் 2008 முதல் நிமலனுக்கு வழங்கும் தொகை 1000 பவுணாக்கப்பட்டது) ஆலய கணக்குப் பதிவுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சதீஸ் ஐயா தேசம் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
‘அவன் (நிமலன்) இயக்கத்துக்கு வேலை செய்கிறவன் அவனுக்கு கூடவே கொடுக்க வேணும்’ என்று சீவரட்ணம் கூறியதாக சதீஸ் ஐயா கூறினார்.
ஆலய உண்டியல் பணத்தில் 1000 பவுண்களை சீவரத்தினம் தனக்கு எடுத்து வந்ததாகவும் 2008இல் நிமலனுக்கு வழங்கும் தொகையைக் கூட்டியதால் தனக்கு 600 பவுண்களை சீவரட்ணம் எடுத்து வந்ததாகவும் சதீஸ் ஐயா தெரிவிததார்.
செப்ரம்பர் 01 -2012 இல் இடம்பெற்ற சந்திப்பில் தான் 600 பவுண்களை சம்பளமாகவும் நாதஸ்வர மிருந்தக கலைஞர்கள் மூலம் வரும் வருமானத்தையும் பெற்று வந்தை அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆலயக் குருக்கள், பணியாளர் முன்நிலையில் சீவரட்ணம் ஏற்றுக்கொண்டதாக குமரேசன் தெரிவித்தார்.
இந்த உண்டியல் பணத்தில் 500 பவுண்கள் தமிழகத்தில் உள்ள தமிழ் தலைவர் பழ நெடுமாறனுக்கு மாதந்தம் அனுப்பப்பட்டு வந்துள்ளது. இப்பணத்தையும் சதீஸ் ஐயாவே அனுப்பி வந்துள்ளார்.
2009 இல் முடிவடைந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட கேர்ணல் ரமேஸ் இன் மனைவி வக்சலா தற்போது தென் ஆபிரிக்காவில் உள்ளார். அவருக்கு 2010 முதல் 400 பவுண்கள் அனுப்பப்பட்டு வருகின்றது. இப்பணத்தினையும் சதீஸ் ஐயாவே அனுப்பி வந்துள்ளார். முன்னாள் போராளியின் மனைவிக்கு உதவும் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே எடுத்திருந்தது. ஆனால் நிமலன் அப்பொறுப்பை ஆலயத்தின் மீது சுமத்தி விட்டார்.
வடை – முறுக்கு விற்ற பணம்
ஆலயத்தில் முறுக்கு விற்கும் பணம் வெறொரு வங்கியில் சங்கர் ஐயா என்ற சங்கர் சுவாமிநாதன் என்பவரின் வங்கிக்கணக்கில் வைப்பிடப்படுகிறது. வெம்பிளியில் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கு போட்டியாக சிவன் கோயில் கட்ட வாங்கிய இடத்தில் உள்ள இந்து கலாச்சார மையத்தில் சங்கர் ஐயா பணியாற்றுகிறார்.
ஏப்ரல் 01- 2011 – மார்ச் 31- 2012 வரை முறுக்கு விற்ற பணம் 1822 பவுண்கள் கணக்கியல் பதிவுக்கு வரவில்லை. வடை விற்ற பணம் 5500 பவுண்கள் கணக்கியல் பதிவுக்கு வரவில்லை.
sivayogamஅம்பாளின் சேலைகள் இரட்டை விற்பனை வருமானம்?
2011 – 2012 காலகட்டத்தில் ஆலயத்திற்கு வாங்கப்பட்ட சேலைகளுக்கு செலுத்தப்பட்ட 4000 பவுண் கணக்கியல் பதிவில் உள்ளது. ஆனால,; சேலை விற்ற தொகை 33,000 பவுண்கள் கணக்கியல் பதிவுகளில் இல்லை. அன்பாளுக்கு அணிவிக்க ஆலயத்தில் சேலைகள் விற்கப்படுகின்றன. அச்சேலைகள் அம்பாளுக்கு கட்டப்பட்ட பின் மீண்டும் அடியவர்களுக்கு கூடிய விலைக்கு விற்பனைக்கு விடப்படுகின்றது. இவ்வருமானம் கணக்குப் பதிவுகளில் இடம்பெறவில்லை.
இதே போல் மேளம், நாதஸ்வரம் இசைக் கலைஞர்கள் வடகைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் கிடைக்கின்ற லாபமும் கணக்கியல் பதிவுகளில் இல்லை. இவ்வேறே பல்வேறு நிதி வருமானங்கள் கணக்கியல் பதிவுகளில் இடம்பெற்றிருக்கவில்லை.
குடும்பத்தின் பெயரில் நன்கொடை
ஆனால் அம்பிகை சீவரட்ணம், நிமலன் சீவரட்ணம், சீவரட்ணத்தின் மற்றுமொரு மகள் சக்தியின் கணவர் வண்ணமயிலோன், இவர்களுடைய பிள்ளைகளின் பெயரில் பெரும்தொகைப் பணம் நன்கொடையாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு கோயில் கட்ட முடியாமல் போகும் பட்சத்தில் அப்பணம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது. சீவரட்ணம் பொதுமக்களின் பணத்தினை எடுத்து தனது பிள்ளைகளின் நன்கொடையாகப் பதிவு செய்துவிட்டு கோயில் கட்ட முடியாமல் போனால் அப்பணம் நன்கொடை கொடுத்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்று உறுதியும் வழங்கி உள்ளார்.
காணியும் பொய்யும் புரட்டும்
மைத்துனர் ஆர் .ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை பறிமுதல் செய்யும் முயற்சி தோற்றுப் போனதால் வெம்பிளியில் ஒரு சிவாலயததை அமைக்க காணி வாங்கினார் சீவரட்ணம். காணிகளின் விலை லண்டனில் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீவரட்ணம் வாங்கிய காணியின் விலை தற்போது 500,000 பவுணிற்கும் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக்காணியை சீவரட்ணம் 1.1 மில்லியன் பவுண்களுக்கு வாங்கியுள்ளார். பொதுமக்களின் பணம் என்பதால் சீவரட்ணம், டொக்டர் அழகராஜா போன்றவர்கள் அதனை மிக மோசமான முறையில் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு இடம் பார்க்கும் ஓட்டங்களில் பல்லாயிரம் பவுண்கள் நட்டம் ஏற்பட்டது. பொது மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாது என்றிருந்த இரசாயன மாசடைந்த இடத்துக்கு பரிசோதணைக்கும் கட்டிட திட்ட அனுமதிக்கும் பல்லாயிரம் பவுண்கள் செலவிடப்பட்டது.
மற்றுமொரு இடத்தில் காணி உரிமையாளர்கள் மற்றுமொரு தரப்பிற்கு காணியை விற்கும் முடிவை எடுத்த பின், அக்காணியில் ஆலயத்தை கட்ட கட்டிடத் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதிலும் பல ஆயிரம் பவுண்கள் வீணானது.
கொலியர்ஸ் வூட் பகுதியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதியில் ஒரு இடம் பார்க்கப்பட்டது. அங்கு அவர்கள் நூறுக்கும் குறைவானவர்களே ஒரே நேரத்தில் கூடியிருக்க முடியும் என்று அறிவுறுத்தியும் கட்டிடத் திட்ட அனுமதிக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. உள்ளுர் மக்களும் அதனை எதிர்த்திருந்தனர்.
சாத்தியமற்றது எனத் தெரிந்து இருந்தும் கோயில் கட்டப் போகிறோம் காணி வாங்குகிறோம் என்று மக்களுக்கு வீணாண நம்பிக்கைகளை ஏற்படுத்தி மக்களிடம் இருந்து பணத்தைக் கறந்து அதனை உதாசீனப்படுத்துகின்றார் சீவரட்ணம்.
சிவயோகம் லிமிடட்
இதைவிட சிவயோகம் என்ற அறக்கட்டளைக்கு சமாந்தரமாக சிவயோகம் லிமிடட் என்ற தனியார் கொம்பனி 2008இல் யூலையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் சீவரட்ணம் குடும்பத்தினரே உள்ளனர். இந்நிறுவனத்தில் 20,000 பவுண்கள் இருந்தது. ஆனால் 100,000 பணத்தை ஆலயத்துக்கு கடனாகப் பெற சிவயோகம் அறக்கட்டளையில் இருந்த சீவரட்ணம் குடும்பத்தனர் முனைந்தனர். அப்போது சிவயோகம் அறக்கட்டளையின் தனாதிகாரியாக இருந்த குமரேசன் அவசர கூட்டம் ஒன்றை செப்ரம்பர் 7- 2012இல் கூட்டி, சிவயோகம் லிமிடட் என்ற தனியார் நிறுவனம் பற்றி கேள்வி எழுப்பினார். அடுத்த 24 மணி நேரத்தில் செப்ரம்பர் 09- 2012இல் அவர் அறக்கட்டளையில் இருந்து நீக்கப்பட்டார்.
சீவரட்ணம் எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் எப்போதும் வைத்திருப்பார், ‘சில பிழைகள் செய்தனான். தூர நோக்கத்துடன் செய்தனான்’ என்று சொல்வார் என்கிறார் குமரேசன்.
மன்மதராஜா சீவரட்ணம்
சீவரட்ணத்தின் செயற்பாடுகள் நிர்வாகச் சீர்கேடு நிதிமோசடி என்பவற்றுடன் நிற்கவில்லை. இவர் பாலியல் துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு உள்ளார். ஆலயத்தில் பணியாற்றிய 20 வயதேயான நாதஸ்வரக் கலைஞரைக் கொண்டு தனக்கு மசாஜ் செய்து விடுவதற்கு எண்ணெய் பூசுவதற்கு எல்லாம் பயன்படுத்தி உள்ளார். அந்த இளைஞன் பின்னர் இவர் தன்னை பாலியல் ரீதியில் தூஸ்பிரயோகம் செய்ததாக சட்டத்தரணி ஒருவரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். ஆனால் அந்த இளைஞனுக்கு விசா பிரச்சினை ஏற்படவே சீவரட்ணம் தான் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து அந்த இளைஞனின் குற்றச்சாட்டுகளை மீளப் பெறச்செய்து, தான் ஒரு நல்ல மனிதன் என்றும் சொல்ல வைத்தார். அதற்கு ஒரு துண்டுப் பிரசுரமும் வெளியிட்டார்.
சீவரட்ணததுக்கு மன்மதக்குஞ்சு என்ற பட்டமும் உள்ளது. தன்னுடைய மன்மத லீலையில் குறுக்கிட்டதற்காக ஈஸ்ற்ஹாம் நாகநாதக் குருக்களின் சகோதரனுக்கு எதிராக நீதிமன்றில் சாட்சியம் அளித்து அவருக்கு தண்டனையை உறுதிப்படுத்தினார்.
2009இல் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த தமிழீழ விடுதலைப் புலிப் பெண் சீவரட்ணத்திடம் சிறிது காலம் வேலை செய்தார். அவர் சீவரட்ணம் பற்றி குறிப்பிடுகையில் ‘சீவரட்ணம் மிக மோசமான ஒரு மனிதன்’ எனக் குறிப்பிட்டார்.
sivayogam4ஆலய குருக்கள் பணியாளர்களின் வேலை நீக்கம்
சீவரட்ணம் ஆலயத்தின் குருக்களை, பணியாளர்களை அடிமைகளாகவே நடத்தி உள்ளார். இந்தியா, இலங்கையில் இருந்து குறைந்த சம்பளத்துக்கு அழைத்து வரப்படும் குருக்கள், பணியாளர்கள் சமய விதிப்படி தாங்கள் விரும்பிய உணவை உண்ணவோ, பசியாற உண்ணவோ அனுமதிக்கப்படவில்லை. அவரகளுக்கு அளவுச ;சாப்பாடே வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சம்பளத்தில் இருந்து ஆலய கட்டுமானத்துக்கு கட்டாய நிதி வாங்கப்பட்டு உள்ளது. சில இளம் குருக்களை தனக்கு மசாஜ் செய்ய, உடலுக்கு எண்ணை பூசி மசாஜ் செய்ய பணித்துள்ளார். (பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதைத் தவிர்ததுள்ளோம்)
பாதிக்கப்பட்ட குருக்கள் பணியாளர்கள் இக்குற்றச்சாட்டுகளை அறக்கட்டளையினருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து திட்டமிட்ட முறையில் இவர்கள் செப்ரம்பர் 09- 2012இல் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
இக்குற்றச்சாட்டுகைள அறக்கட்டளையின் கவனத்துக்கு கொண்டு வந்த தனாதிகாரியான குமரேசனும் அறக்கட்டளையில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆன்மீகத் தலைவர் ‘சக்தி ஆன்மீகச் சுடரொளி’
ஆன்மீகத் தலைவர் ‘சக்தி ஆன்மீகச் சுடரொளி’ நாகேந்திரம் சீவரட்ணம் என்ற பட்டம், சிவயோகம் அறக்கட்டளை பிரித்தானிய பொது அமைப்புகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கியல் பதிவு ஆவணத்தில் உள்ளது. அது எதற்காக யாரால் வழங்கப்பட்டது என்ற விபரம் இல்லை.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சீவரட்ணத்துடன் தொடர்பு கொண்ட போது, இக்குற்றச்சாட்டுகள் பற்றி ‘சுருக்கமாகச் சொல்வதென்றால் இது வேஸ்ற் ஓவ் ரைம், செயரிற்றி கொமிஸனே எனக்கு மன்னிப்புத் தெரிவித்து எனக்கு நட்டஈடும் தந்துள்ளது’ என்றார்.
‘அது விசாரணையை மேற்கொண்ட முறையில் இருந்த தவறுக்காகவே ஒழிய சிவயோகம் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அல்லவே’ என்று குறுக்கிட்ட போது, ‘உங்களுக்கு எல்லாம் வடிவா தெரிந்திருக்கு அப்ப நீங்கள் டொக்குயுமென்ற்ஸை எடுத்துக் கொண்டுவந்தால் நாங்கள் டிஸ்கஸ் பண்ணலாம்’ என்றார். சீவரட்ணம் குறிப்பிடுகின்ற முக்கிய ஆவணங்கள் வெளியே உள்ளது. நான் என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்றும், என் முன் சில குற்றசாட்டுகளே வைக்கப்பட்டுள்ளது என்ற போது, ‘சொன்னா அவையை கடற்கரையில போய் நின்று கத்தச் சொல்லுங்கோ’ என்றார்.
சீர்கேடுகளுக்கு துணைபோகும் சைவ முன்னேற்றச் சங்கம்
இவர் செய்த மோசடிகளை நிர்வாகச் சீர்கேடுகளை பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தி இருந்தது. ஆனால், சைவமுன்னேற்றச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் வி. ஆர்.ராமநாதன் சிவயோகம் அறக்கட்டளையின் இந்த ஊழல்களுக்கு வெள்ளையடித்து வந்துள்ளது. சிவயோகம் அறக்கட்டளையின் நிதி ஆலோசகர்களில் வி.ஆர் ராமநாதன் முக்கியமானவர்.
இவர் மட்டுமல்ல ஆலய முறைப்பாடுகளைக் கவனிப்பதற்கு நியமிக்கப்பட்ட கதிரிப்பிள்ளை ஜெகதீஸ்வரம் பிள்ளை (இவர் கலசம் சஞ்சிகையின் ஆசிரியரும் கூட), சதாசிவம் ஆனந்ததியாகர் இருவருமே சைவ முன்னேற்றச் சங்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சிவயோகத்தின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் எதனையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதே பொறுப்பிற்காக நியமிக்கப்பட்ட டொக்டர் ஞானச்செல்வன் சிவயோகத்தின் உண்மை நிலையை அறிந்ததும் தனது பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்.
ஒரு அறக்கட்டளை எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு சிவயோகம் ஒரு எடுத்துக்காட்டு.
சிவயோகம் அறக்கட்டளை – உறுப்பினர்களும் ஆலோசகர்களும்
ஸ்தாபகர்: நாகரட்ணம் சீவரட்ணம்
அறக்கட்டளை தலைவர்: சண்முகராஜா தனராஜா – ஓடிற்றரராக செயற்பட்டவர். சீவரட்ணத்தை முழுமையாக நம்பிய மனிதர். ஒரு கணக்காளரான சீவரட்ணம் எழுதிய கணக்கியல் பதிவுகளை ‘அங்கிள் செய்தால் சரி’ என்று கையெழுத்திட்டு வந்தவர். பின்னர் நம்பிக்கையானவர் என்பதால் தலைவராக்கப்பட்டார். தற்போது அவர் ஓடிற் செய்த கணக்கியல் பதிவுகளே பிரச்சினையாகி உள்ளது.
அறக்கட்டளை செயலாளர் : நிமலன் சீவரட்ணம்- சீவரட்ணத்தின் மகன்
அறக்கட்டளை பொருளாளர் : அம்பிகை சீவரட்ணம்- சீவரட்ணத்தின் மகள்
அறக்கட்டளை உறுப்பினர்: கலாநிதி சரவணமுத்து ஜெயகாந்தன்- சீவரட்ணத்தால் சிற்பவேலைக்காக இலங்கையில் இருந்து அழைக்கப்பட்டு தற்போது லண்டனில் வாழ்பவர். சீவரட்ணத்துக்கு விசுவாசமானவர்.
சிவயோகம் லிமிடட்இயக்குனர்கள்
நாகேந்திரம்சீவரட்ணம் ;(02 ஒக்ரோபர் 2012 முதல்)
சங்கர் சுவாமிநாதன் (31 யூலை 2008 முதல்)
அம்பிகை சீவரட்ணம் (31 யூலை 2008 – 02 ஒக்ரோபர்2012)
சிவயோகம் லிமிடட் இன் பங்குதாரர்கள்
25 வீத பங்கு – அம்பிகை சீவரட்ணம்
25 வீத பங்கு – நிமலன் சீவரட்ணம்
10 வீத பங்கு – சக்தி வண்ணமயிலோன்- சீவரட்ணத்தின் மகள்
10 வீத பங்கு – அப்புத்துரை வண்ண மயிலோன்- சீவரட்ணத்தின் மருமகன்
25 வீத பங்கு – பிரணவன் வண்ணமயிலோன்- சீவரட்ணத்தின் பேரன்
05 வீத பங்கு – சங்கர் சுவாமிநாதன்- சீவரட்ணத்தின் விசுவாசமான தொழிலாளி
நன்றி தேசம் நெட்