9/27/2014

| |

பர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவுன்ஸில்

பௌத்த பயங்கரவாதத்தின் முகமாக விராத்துவை டைம்ஸ் சஞ்சிகை வர்ணித்திருந்ததுபர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பிக்குவாகப் பார்க்கப்படும் அஸின் விராத்து அவர்களை இலங்கையின் பொதுபல சேனா அமைப்பு தமது மாநாடு ஒன்றுக்காக அழைத்துள்ளமைக்கு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அந்த பிக்குவை முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறுகின்ற இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் தற்காலிக தலைவரான ஹில்மி அஹ்மட் அவர்கள், அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவால் செப்டம்பர் 28ஆம் திகதி கொழும்பு சுகததாஸ அரங்கில் நடத்தப்படும் மாநாடு ஒன்றுக்காக அஸின் விராத்து அழைக்கப்பட்டுள்ளார்.
பர்மாவில் முஸ்லிம்களுக்கு விரோதமாக வெறுப்பைக் கக்கும் பிரச்சாரத்தை செய்யும் விராத்து அவர்கள், இலங்கையிலும் அப்படி பேசினால், அது ஏற்கனவே வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேலும் ஒரு வன்செயலை தூண்டிவிடக் கூடும் என்று முஸ்லிம்கவுன்ஸில் கூறுகிறது.
ஆகவே அவரது வருகையை தடை செய்ய வேண்டும் என்று கோரி தாம் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் பதில் தலைவரான ஹில்மி அஹ்மட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவரை ஒரு சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவாக வர்ணிக்கிறார் பிபிசியின் பர்மிய சேவையின் மூத்த தயாரிப்பாளரான சோ வின்.
சர்ச்சைக்குரிய மதகுரு
பௌத்த பயங்கரவாதத்தின் முகமாக விராத்துவை டைம்ஸ் சஞ்சிகை வர்ணித்திருந்தது
''அஸின் விராத்து ஒரு பெரிய தேசியவாத மதகுருவாக பார்க்கப்படுகின்றார். முஸ்லிம்களுக்கு எதிரான அவரது சில கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை என்பதால், அவரை ஒரு தீவிரவாதப் போக்குடைய பிக்குவாக சிலர் கூறுகிறார்கள்'' என்றார் பிபிசி பர்மிய சேவையின் சோ வின்.
''ஆனால், சில முஸ்லிம்கள் பர்மாவின் பௌத்த பெண்களை சில முஸ்லிம்கள் கட்டாயமாக மதம் மாற்ற விளைவதாகக் கூறும் விராத்து, அதனாலேயே அந்த நடவடிக்கைகளை தான் எதிர்ப்ப்பதாகவும், ஆனால், தான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல என்றும் கூறுகின்றார்'' என்றும் சோ வின் குறிப்பிட்டார்.
''முஸ்லிம்களை அவமானப்படுத்தும் வகையில் விராத்து சில கருத்துக்களை தனது பேஸ்புக் தளத்தில் அவ்வப்போது பதிவதால், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் ஒருவராக சிலர் அவரைப் பார்க்கிறார்கள். இவருக்கு எதிராக பர்மிய அரசாங்கத்தினால் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத காரணத்தினால், அவருக்கு அரசாங்கத்தில் இருக்கும் சில தலைவர்களின் ஆதரவு இருப்பதாகவும் சிலர் பார்க்கிறார்கள்'' என்றும் சோ வின் கூறுகிறார்.
பொதுபல சேனா
கலபொட அத்தே ஞானசார தேரர்
கலபொட அத்தே ஞானசார தேரர்
இதற்கிடையே முஸ்லிம் கவுன்ஸிலின் அச்சம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை பொதுபல சேனா அமைப்பின் தலைவரான கலபொட அத்தே ஞானசார தேரர், ஒரு பௌத்த நாட்டுக்கு ஒரு பௌத்த மதத் தலைவர் வரமுடியாவிட்டால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார். தாம் பல நாடுகளில் இருந்து பௌத்த தலைவர்களை தமது மாநாட்டுக்கு அழைத்துள்ளதாகவும், ஆனால் எவரையும் தனிப்பட்ட வகையில் தாம் அழைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். இருந்த போதிலும், விராத்து அவர்கள் இலங்கைக்கு வரும் பட்சத்தில் அவரை தாம் வரவேற்போம் என்றும் அவர் கூறுகிறார்.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதியும், குடிவரவு விவகாரங்களை கவனிக்கும் பாதுகாப்புச் செயலரும் கொழும்பில் இல்லாத காரணத்தால் இந்த விடயத்தின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாம் தடுமாறுவதாக முஸ்லிம் கவுன்ஸில் கூறியுள்ளது.
இதற்கிடையில் பர்மாவில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி பௌத்த மதகுருவான அஸின் விராத்து அவர்கள் ஏற்கனவே இலங்கை செல்வதற்காக தனது நாட்டில் இருந்து புறப்பட்டு விட்டதாக கூறப்படுகின்றது.