10/06/2014

| |

'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான் வழிநடத்தியுள்ளேன்.


உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் தமிழ்ப் பெண்களே  என்பதுடன்,  இதை வரலாற்றில் இன்று 
காணக்கூடியதாகவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 46 மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு ஒந்தாச்சிமடம் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (04) தலா 100,000 ரூபாய் படி நிதியுதவி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை  நான் வழிநடத்தியுள்ளேன். பெண்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள், உணர்வு, சோர்வு, திடகாத்திரம், செயற்பாடுகள்  அனைத்தையும் நான் நன்கு அறிவேன். உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் எமது தமிழ்ப் பெண்களே.   இது வரலாற்றில் இன்று காணக்கூடியதாகவுள்ளது.  இந்த நிலையில், பெண்களின் கௌரவத்தை என்றும் நாம் பேணவேண்டும். 

சோர்வு, பாதிப்புக்கள், குடும்பச்சுமைகள், வறுமை, குழந்தைகளின் பாரங்கள், இழப்புக்கள் எது வந்தாலும், சோர்ந்து போகாமல் திடகாத்திரமாக இருந்து எமது பெண்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது அனைத்து உதவிகளும் என்றென்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 

எமது தமிழ்ப் பெண்கள் விழிப்படைய வேண்டும்.  அப்போதே மாற்றங்கள் வெளிவரும். ஆனால், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட பெண்கள் அவற்றைச் செயல் வடிவத்தில் காட்டுகின்றனர்.  

பெண்களின் சாதனைகள் உலகத்தில் போற்றப்பட வேண்டியவை. இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த பெண்மணியே உலகத்தில் முதல் பிரதம மந்தரியாக இருந்தார். இதுபோல் பெண்கள் உலகத்தில் பல சாதனைகள் படைத்துள்ளனர். இவை வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இஸ்ரேல் என்ற நாடு இருப்பதற்கு காரணமும் ஒரு பெண்மணியே. 

அன்னை திரேசாவும் உலகிலுள்ள அநாதைச் சிறுவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குமாக குரல் கொடுத்த பெண்மணியாக திகழ்ந்தார். அந்த வகையில், பல பெண்கள் உலகில் சாதனை புரிந்து இரும்புப் பெண்மணிகளாக இருந்த வரலாறுகள் உள்ளன. 

பெண்கள் பாரிய சக்தியாகும் இந்தச் சக்தியை திறம்பட கட்டியெழுப்பினாலேயே, சமூகத்தில் மாற்றங்களும் ஒழுக்கங்களும் மேலோங்கும். எமது பகுதியில் சிறுவர்; துஷ்பிரயோகங்கள், இளவயது திருமணங்கள் போன்ற பல பிரச்சினைகளை  காணக்கூடியதாகவுள்ளது. இவற்றுக்கு எமது பெண்கள் உறுதியாக இருந்தால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இவற்றுக்கு பெண்கள் சக்தியை அணிதிரட்டி எடுக்க வேண்டும். 
எல்லாவற்றுக்கும் முதன்மையானவள் பெண்ணே என்பதை எமது பெண்கள் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.  சோர்வடையக் கூடாது. 
துரிதமாகச் செயற்பட்டால் கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற  அபிவிருத்திகளும் வந்து குவியும். 

மட்டக்களப்பு பெண்கள் அதிகம் கவனமெடுத்து செயற்படுவீர்களேயானால், பல திறமைமிக்க தலைவர்களை உருவாக்கலாம். முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடைய கிராமத்துக்கென தலைவர்களை உருவாக்கி விடுவர். அங்கே அமைச்சர்கள் அதிகம் இருப்பர். இந்த வெற்றிடத்தை எமது பெண்கள் அணிதிரண்டு செயற்படுத்த வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்டத்தை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையும் திடகாத்திரமும் கொண்டது பட்டிருப்புத்தொகுதியே. எனவே பட்டிருப்புத்தொகுதி மக்கள் விழிப்படைய வேண்டும். அதற்காக வேண்டி நான் பட்டிருப்புத்தொகுதியில் அதிக அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். 
எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் துறைநீலாவணையிலிருந்து கிரான்குளம் வரைக்கும் மற்றும் படுவான்கரைப் பிரதேசத்துக்குமான குடிநீர் வழங்கும் திட்டம் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு பாரிய பல அபிவிருத்திகளை மேற்கொண்டாலும், மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். இதுவே எமக்குத் தேவை அனைத்து துறைகளும் வளர்ந்தாலே எமது சமூகம் வளர்ச்சியடையும். 

மட்டக்களப்பிலிருக்கின்ற இருக்கின்ற கல்குடாத்தொகுதி, மட்டக்களப்புத்தொகுதி, பட்டிருப்புத்தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் மூன்று அமைச்சர்களை உருவாக்க வேண்டும். எந்த அரசாங்கம் வருகின்றதோ, அந்த அரசாங்கத்தில் எமது அமைச்சர்கள் இருக்க வேண்டும்.
கடந்த யுத்த காலத்தில் எமது மக்கள் அனைவரையும் விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிந்தவர்களே இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து மக்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இனிமேலும், தொடர்ந்து ஏமாறும் மக்களாக இருக்கக்கூடாது' என்றார்.