10/07/2014

| |

50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரசு தீர்மானம்

க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக வேண்டியே ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 35 ஆகும்.
பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தார்.
வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி கடந்த வாரம் கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.
கிராமிய பாடசாலைகளை அடிப்படை யாகக் கொண்டே ஆசிரிய உதவியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் 50 ஆயிரம் பேருக்கும் நான்கு வருடங்களுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தினூடாக கல்வியியலாளர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பட்டத்தினைத் தொடர்ந்து இவர்கள் இயல்பாகவே ஆசிரியர் உதவியாளர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
மேற்படி, நான்கு வருடங்களுக்குள் ஆசிரிய உதவியாளர்கள் நாடு முழுவதுமுள்ள ஆயிரம் மஹிந்தோதய பாடசாலைகளின் ஆய்வுகூடங்களில் பயிற்றுவிக்கப்படுவர்.
இவர்களுக்கு வருடாந்தம் பரீட்சைகள் நடத்தப்படும். ஆசிரிய உதவியாளர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெகு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வியியற் கல்லூரி ஆகியவற்றுக்கு உள்வாங்கப் படாதவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டு பின் நிரந்தர ஆசிரியர்களாக பாடசாலைகளில் நியமிக்கப்படுவர்.
ஆசிரியர் சேவைக்கு இதுவரையில் உள்வாங்கப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கை இதுவாகும். இவர்கள் ஆரம்பத்தில் ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் பின்னர் நிரந்தர பட்டதாரி ஆசிரியர்களுக்கான தரத்தினையும் நியமனத்தையும் பெற்றுக்கொள்வர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைப் போன்று எந்தவொரு நாட்டுத் தலைவரும் கல்விக்காக பாரிய நிதி ஒதுக்கீட்டினை செய்திருக்கவில்லை யெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.