11/12/2014

| |

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியும்

ஜனாதிபதிக்கு போட்டியிட முடியும்

உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சபையில் அறிவிப்பு
சட்டத்தில்; தடைகள் இல்லை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
இதற்கமைய விரும்பிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என்றும், மூன்றாவது தடவை போட்டியிட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை அறிவித்தார்.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் கீழ் மூன்றாவது தடவையும் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் உச்ச நீதிமன்ற த்தின் வியாக்கியானத்தைக் கோரியிருந்தார். இதனை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிப திக்கு அரசியலமைப்பின் கீழ் எதுவித தடையும் இல்லையென அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல மைப்பின் 33/தி/1/1 சரத்தின் கீழ் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும், ஜனாதிபதி தேர்தலொன்றை கோருவதற்கும், ஜனாதிபதியாக நியமிக்கப்படவும் ஜனாதிபதிக்கு உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா இல்லையா என்ற சந்தேகங்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, தேவையான நேரத்தில் தேர்தலொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்க முடியும். மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது என எதிர்க்கட்சியினர் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இது விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கி யானத்தை கோரியிருந்தார்.
அரசியலமைப்பி ற்குட்பட்ட வகையில் அவருக்கு வழங்க ப்பட்ட அதிகாரங்களுக்கு அமையவே அவர் உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியிருந்தார். இது தொடர்பில், பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தலைமையிலான பத்து நீதியரசர்கள் குழுமம் விரிவாக ஆராய்ந்திருந்தது. ஆராய்வின் பின்னர் தயாரித்த வியாக்கியானம் அடங்கிய அறிக்கை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நேற்று மாலை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் அறிவித்தார். மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி யாகப் போட்டியிட முடியும் என்ற தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். இதன்போது சபையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் மேசையில் தட்டி “ஜெயவேவா” வாழ்த்துக்கள் எனக் கோஷமெழுப்பினர்.