11/26/2014

| |

கிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்து இயங்க தீர்மானம்

கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள்,  தனிக்குழுவாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் கொழும்பில் திங்கட்கிழமை  (24)  இரவு நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார். 

கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளனர்.

இதில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில், கிழக்கு மாகாணசபையில் இக்குழு தனித்து இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்படும் பிரேரணைகள் மற்றும் வேலைத்திட்டங்களை பொறுத்து, தமது கட்சியைச் சேர்ந்த மூன்று மாகாணசபை உறுப்பினர்களும் அவ்வப்போது முடிவெடுத்து, அதற்கேற்ப செயற்படுவதற்கு மேற்படி கூட்டத்தில் அவர்களுக்கு அங்கிகாரமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மேற்படி மூன்று உறுப்பினர்களும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளராக எம்.எஸ்.சுபைர் மற்றும் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.