11/29/2014

| |

யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்கள் மேம்பாட்டுப்பணியில் ஒரு வீதத்தையேனும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளமுடியவில்லை

ஒரு அமைச்சராலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்கள் மேம்பாட்டுப்பணியில் ஒரு வீதத்தையேனும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் பல அமைச்சர்கள் உட்பட 30 மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளமுடியவில்லை என ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று இராமநாதபுரத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் மேடைகளில் ஆக்ரோசமாக பேசவும் பாராளுமன்றத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றுவதற்கும் மட்டுமே முடியும் அவர்களால் மக்களின் மேம்பாட்டுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை அப்பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும் எதையுமே; செய்ய முடியாது. ஏனெனில் அதற்கான முயற்சியும் ஊக்கமும் செய்ய வேண்டும் என்ற மன உணர்வும் அவர்களிடம் இல்லை. இன்று வட்டக்கச்சியில் மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து பொது நூலகம் ஒன்றை அமைத்து வருகின்றார்கள் அந்த செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் வட்டக்கச்சியை வசிப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரால் இப்பிரதேச மக்களுக்கு எதையுமே செய்யமுடியவில்லை. அந்த அளவுக்குத்தான் மக்கள் மீதான பற்றும் தேசப்பற்றும் அவரிடம் உள்ளது எனக் குறிப்பிட்ட வை.தவநாதன் அவர்கள்,
யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சரும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மேற்கொண்டு வரும் மக்களுக்கான வேலைத்திட்டங்களில் ஒரு விகிதத்தையேனும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் முப்பது மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் செய்யமுடியவில்லை.
இந்நிலையில் மிகத்தந்திரோபாயமான அரசியல் முன்னெடுப்புக்களுக்கூடாகவே எமது பிரதேசங்களுக்கான அபிவிருத்தி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதற்காக அரசாங்கம் இலகுவாக பணத்தை தந்து விடுவதில்லை எம்மிடமுள்ள மிகக்குறைந்த பட்ச அரசியல் பலத்தைப் பிரயோகித்தே நாம் இப்பகுதிக்கான நிதியீட்டங்களை பெற்று வருகின்றோம். அதனூடாகவே எமது பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வட்டக்கச்சி இராமநாதபுரம் போன்ற பகுதிகளில்கூட மீள்குடியேற்றத்திற்கு பின் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன வீதிகள் புனரமைப்பு பாலங்கள் மதகுகள் கட்டுமானம் மற்றும் பொதுநோக்குமண்டபங்கள் அமைத்தல் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கான்பதற்கான செயற்திட்டங்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்காகன வாழ்வாதார உதவிகள் பாடசாலைகளுக்கான கட்டடவளங்கள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப பௌதீகவளங்கள் உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இவற்றோடு இப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் மேற்கொள்ளப்பட்டுள்து தொடர்ந்தும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கான விசேட நிதியதுக்கீட்டிலிருந்தும் எனது மாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் இப்பகுதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இன்று வட்டக்கச்சி இராமநாதபுரம் கிராமத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களால் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இராமநாதபுரம் வெற்றிப்பாதை சனசமூக நிலையத்திற்கான கட்டட கட்டுமாணப்பணியை காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைத்த அவர் காலை 10.30 மணிக்கு இராமநாதபுரம் கலைச்சுடர் சனசமூக நிலைய வளாகத்தில் பொதுக்கிணறு ஒன்றினை அமைப்பதற்கான பணியையும் ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து வை. தவநாதன் அவர்களின் மாகாணசபை உறுப்பினருக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் இராமநாதபுரம் குளக்கட்டுப் பாதையை புனரமைப்பதற்காண பணியையும் அவர் ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வுகளில் இராமநாதபுரம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் வன்னியர்சிங்கம் வெற்றிப்பாதை சனசமூக நிலையத்தலைவர் சீலன் அதன் பொருளாளர் கருணாநிதி உபசெயலாளர் தங்கேஸ்வரி மற்றும் கலைச்சுடர் சனசமூகநிலைய செயலாளர் கோமதி அதன் உபதலைவர் கதிர்காமநாதன் அதன் பொருளாளர் சுபாஸ்கரன் மற்றும் இராமநாதபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி சறோஜாதேவி கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் சின்னத்தம்பி ஆகியோரும் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மக்களும் கலந்துகொண்டனர்.