3/24/2015

| |

ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்-ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அமைச்சுக்கள் மற்றும் பதவிகளைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் ஜனாதி பதியும், பிரதமரும் மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுத்துள் ளனர் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவை பதவியேற்றமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் மக்கள் நிராகரிக்கவில்லை. அவருடைய நிர்வாகம் மற்றும் அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைவரையுமே நிராகரித்தனர்.
இவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியிருப்பது மக்களின் ஆணையை முழுமையாக மீறும் செயற்பாடு என்பதுடன், வாக்களித்த மக்களைக் காட்டிக்கொடுக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் சிறைக்குச் செல்வதற்குக் காரணமாகவிருந்த, உயர்கல்வியை தனியாருக்கு விற்க முயற்சித்த எஸ்.பி.திசாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, பவித்திரா வன்னியாராச்சி, எஸ்.பி.நாவின்ன, டிலான் பெரேரா போன்றவர்கள் கடந்த தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள். இவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கே மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்செயல் ஊழல்மோசடி விசாரணைகளை கைவிட்டு, குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இடமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சுக்கள் உடைக்கப்பட்டு பலருக்கு வழங்கப்பட்டது. அதைப்போலவே இந்த அரசாங்கமும் அமைச்சுக்களைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளது.
தேசிய அரசுக்கு மக்கள் ஆணை இல்லை
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் சரி ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. ஆளும் கட்சியாக சுதந் திரக் கட்சி இருப்பதற்கும், எதிர்க்கட்சியாக ஐ.தே.க இருப்பதற்குமே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணை வழங்கப்பட்டது.
அதேபோல, ஜனாதிபதித் தேர்தலின் போது குறுகிய காலத்தில் பொதுத் தேர்தலொன்றை நடத்தி அதன் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கே மக்கள் ஆணை வழங்கினர். தேர்தலை நடத்துவதற்கு முன்னர் பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கம் அமைப்பதற்கு மக்கள் வாக்களித் திருக்கவில்லை. மக்களின் ஆணையை மீறும் வகையிலான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டவேண்டும்.
30 நாட்கள் பொறுத்திருக்க முடியாதவர்கள்
100 நாள் வேலைத்திட்டத்தில் இன்னமும் 30 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இந்த முப்பது நாட்களுக்கு தமது சொந்த வாகனங்களுக்கு பெற்றோல் அடிக்க முடியாத, வாகனத்தை சொந்தமாக செலுத்த முடியாத, சொந்த வீட்டில் இருக்க முடியாத, சலுகைகள் இல்லாமல் வாழ முடியாத நிலையிலேயே அமைச்சுப் பொறுப்புக்களை சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அரசாங்கம் நாடகம் ஆடுவதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தேசிய அரசாங்கத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.
ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்
அதேநேரம், 100 நாள் வேலைத்திட்டத்தில் உறுதி வழங்கியதற்கமைய ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணையை அரசாங்கம் மீற முடியாது. தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் அமைப்பதற்கும், புதிய பாராளுமன்றத்துக்கும் மக்களின் ஆணையைக் கோரவேண்டும் என்றார்.