3/10/2015

| |

நந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி?

முதல்வரின் பூனை விளையாட்டில் சீவன் போகும் எலிகளாக பரிதவிக்கும் உறவுகள்!


C.V. Wigneswaranசில காரியங்களை செய்வதற்கு, சாதிப்பதற்கு பொறுமை மட்டுமல்ல மௌனமும் பயன்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார், மௌனம் கலக நாஸ்த்தி என்பது எம் முதல்வருக்கு நாம் கூறித் தெரிய வேண்டியதில்லை.

அனால் அண்மைக்காலமாக பொறுப்பான பதவியில் இருக்கும் அவர் பேச்சுக்கள் எதிர்ப்பினை வளர்ப்பதாகவும் பலனற்றுப் போகக்கூடிய தாகவுமே காணப்படுகின்றன. மாகாண சபை தேர்தலுக்கு முன்பே 13 ல் என்ன இருக்கிறது எந்த எல்லை வரை தன்னால் போக முடியம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
ஆனால் தேர்தல் மேடைகளில் அவர் பேசிய பொறுப்பற்ற வாய்ச்சவடால்பேச்சு உதயன் பத்திரிக்கை தலைப்பு செய்தியானது. உதயன் அமைந்தது தமிழர் அரசு என்று தலைப்பிட அன்றைய பதிப்பு அனைத்து பேப்பரும் விற்றுத் தீர்ந்தது.
சத்திய பிரமாணம் எடுக்க மகிந்த விடம் போனபோது ஆளுனரை மாற்றுவது பிரதம செயலாளரை மாற்றுவது என்று இராமாயண கைகேகிபோல இரண்டு வரம் வாங்கிவந்தார். காரியம் கை கூடும் வரை மௌனம் காக்காது கூட்டத்தில் நின்று கூவிப் பிதற்றினார். சம்பிக்க, விமல் வீரவன்ச வீறுகொண்டு எழ காரியம் கெட்டது. மகிந்தர் வரத்தை வாபஸ் பெற்றார். பிரதம செயலாளருக்கு தடை என பறை அடித்தார். பின் நீதிமன்றில் அவரே வாபஸ் பெற்றார் கௌரவ முன்னாள் உயர்நீதிமன்ற நீதி அரசர் அவர்கள்.
பொறுமை இழந்து 13ல் ஒன்றும் இல்லை ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் பறிக்கிறார்கள் என்று அப்போது தான் தெரிந்தது போல் மாகாண சபையில் ஹன்சாட்டில் பதிவிட்டார். மக்கள் சபையில் வாக்கு வேட்டைக்காக வீராப்பு பேசி கைதட்டல் வாங்கிய எங்கள் வராது வந்த மாமணி அவர்கள் . கைகேகி வரம் வாங்கியது தசரதனிடம். நீங்கள் வாங்கியது மகிந்தவிடம். இரண்டு பேருமே வரங்களை பழிவாங்கவே பயன்படுத்தினீர்கள். இராமன் காடு செல்ல வேண்டுமென்ற வரத்தால் தன் பூவையும் பொட்டையும் இழந்து கைம்பெண் ஆனாள் கைகேகி . பரதன் நாடாளவேண்டும் வேண்டும் என்றாள் ஆனால் அவன் கடைசி வரை இராமனின் செருப்பைத்தான் இராமன் திரும்பி வரும் வரை அரசாளச் செய்தான்.
நீங்கள் ஆளுனரை மாற்ற கேட்ட வரம் நிறைவேறாததால் வாக்களித்த மக்கள் முன் சிறுமைப்பட்டீர்கள், பிரதம செயலாளருக்கு நீங்கள் போட்ட தடையால் நீதிமன்றில்கூனிக்குறுகி போனீர்கள் மண்பிமிகு முதல்வர் அவர்களே.
மகிந்தரின் சாத்திரம் பிளைத்ததால் இன்று அவை இரண்டும் தாமாகவே நடந்தேறியது. காலம் தன் கடமையை சரியான நேரத்தில் செய்தது. பொறுமை, மௌனம் பலவீனம் அல்ல அது காலத்தின் தேவை கருதி செய்வது.
துள்ளிய மாட்டின் மீது பொதி சுமை ஏறும் ஐயா. அண்ணல் காந்தியின் சத்திய சோதனை, ஔவையார் ,வள்ளுவர் , சாணக்கியன் , மச்சவலி என்பவற்றை படித்த உங்கள் அக புற கண்களுக்கு தெரியாமல் மறைக்கும் சேறு நிறைந்த சாக்கடை அரசியலை விட்டு வெளியே வாருங்கள்.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் அரசியல் தீர்வை எட்டியிருக்க இருக்க வேண்டும். அப்போது அதை பொறுப்பெடுத்து குறைகளை நிறைவு செய்யாது ஓடி ஒளிந்து விட்டு இன்று துண்டாடப்பட்ட ஒரு சபையில் இனப்பிரச்சனை பற்றி பேசுகிறீர்களே.
இன்று இருப்பது முன்பிருந்ததில் பலதை உருவி எடுத்த பின் மிஞ்சிய நிர்வாக அதிகாரமே. அதை கூட செயல் படுத்தி கிடைத்ததை கொண்டு முதலில் செய்ய கூடியதை செய்து பின் காலமாற்றத்தின் பலன்களை எமக்கு சாதகமாக்கி சாதிப்பதை விடுத்து பகைமை பேணுவதால் என்னபலன்.
பிரதமரை நிந்திப்பதே உங்கள் முதல் பணியா முதல்வரே. அவர் சிங்கநரி என்று நீங்கள் சீறும் பாம்பாக மாறுவதேன். சம்மந்தர் சுமந்திரன் ஒரு அணி , சுரேஸ் அனந்தி சிவாஜி ஒருஅணி , கிழக்கில் பலஅணி இதற்குள் நீங்களும் அணிவகுத்து சண்டைக்கு சங்கூதலாமா ?
நீங்கள் செய்ய வந்தது நிர்வாகம். அதிகாரிகளுடன் கலந்து பேசுதல், திட்டங்களை தீட்டுதல், கிடைத்த நிதியை முழுமையாக செலவிடல், இயன்றவரை அகதிமுகாம் மக்களை சந்தித்து அவர்களுக்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கை பற்றி தெரியப்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஊ ட்டல் இவைதான் உங்கள் பணியாக இருக்கவேண்டும்.
மாறாக நீங்கள் முன்னைய கம்பன் கழக மெம்பர் போலத்தான் செயல் படுகிறீர்கள். இலக்கிய விழா, புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டால் உங்களுக்கு மலை மரியாதை கிடைக்கும்எம் மக்களிற்கு என்னகிடைக்கும்.
சரி நீங்கள் கம்பன் கண்ட சீதை வள்ளுவரின் வாசுகி பாரதியின் கண்ணம்மா கண்ணதாசன் கவிதை வைரமுத்து வரிகள் எண்டு காதினில் தேன் பாயும் பேச்சு பேசுவீர்கள் என்றால் நீங்களோ சிங்கள பேரினவாதம், மகிந்த,ரணில் என்று அரசியல் ஈயத்தை காச்சி எம்காதில் ஊற்றுகி றீர்கள். தேர்தல் காலத்தில் புண்ணான காதுக்கு இன்னம் வைத்தியம் தொடர்கிறது எங்களை செவிடக்காமல் விட மாட்டீர்களா மாண்பிமிகு முதல்வர் ஐயா அவர்களே.
இப்ப ஜேம்ஸ் பொண்ட் 007 வேலையும் தொடங்கி விட்டீர்கள். காணமல் போன தங்கட உறவுகளை தேடிவந்தவர்களிடம் இரகசிய முகாம்களில் அவர்கள் சப்பாத்து துடைத்து கொண்டும் சிற்றூளியம் செய்து கொண்டும் இருப்பதாக உங்களுக்கு இரகசியமாக கிடைத்த தகவலை பரகசியமாக்கி போட்டியள் .
இரகசிய தகவல் பெற்ற நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? உடனே அதனை நீங்கள் கொண்டுவந்த ஜனாதிபதி அவர் நியமித்த பிரதமர் கவனத்துக்கு கொண்டு வந்து எந்த வித சேதாரமும் இல்லாமல் அவர்களை காப்பாற்ற முயன்றிருக்க வேண்டும்.
உண்மைகள் பகிரங்கப்பட்டால் சப்பாத்து துடைப்பித்தவரும் சிற்றூளியம் செய்வித்தவரும் அவர்களை மண்ணுக்குள் போட்டு மறைத் து விடும் அபாயம் உண்டல்லவா. பொறுமை மௌனம் பலரது உயிரை காப்பற்றி இருக்கும் அல்லவா. அவர்களின் புதை குழிகளை தோண்டி சர்வதேசத்தை விசாரணைக்கு அழைக்கவா இரகசியம் பேணாது விட்டீர்கள் முதல்வரே .
இரகசிய முகாம்களில் இருக்கிறார்கள் என்று முதல்வர் கூற அப்படி ஒருவரும் இல்லை என்று மறுக்கிறார் பிரதமர்.இரகசிய முகாம்களில் அப்படி ஒருவரும் இல்லை காணாமல் போனவர் பட்டியலில் இல்லாதவர்கள் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடு போயிருக்கலாம் என்கிறார் பிரதமர்.
பிரதமர் சொல்லுறதை வைச்சு நான் நினைக்கிறான் பிரதமர் தன்ர உத்தியோக அரச உளவுப்படையை உசுப்பி விட அது விசாரிச்சு போட்டு அப்பிடி எதுவும் இல்லை உது மண்டை மண்டையர் மாத்தையவின்ர உள்குத்து வேலை சேர் எண்டு அறிக்கை குடுதிருக்கவேணும்.
ஏனெண்ட முதல்வர் சனத்திட்ட சொல்லமுதல் பாராளுமன்றத்தில் தனக்குள்ள பேச்சுரிமை காரணமாக எதையும் பேசலாம் என்று துணிந்து இதே இரகசிய முகாங்கள் பற்றி பேசியவர் கூட்டமைப்பின் பேச்சளார் ரகசிய பொலிஸ் 115 சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள். தன் தம்பிக்கு மந்திரி பதவி தராதவரை சிக்கலில மாட்டிவிட ரகசிய தகவலை கசியவிட்டு அதை மக்கள் முன்னால் முதல்வரை கூற வைச்சுப்போட்டார்.
தம் உறவுகள் எங்கோ இருக்கிறார்கள் என்ற மாகாண செய்தியும் எங்கும் இல்லை என்ற மத்திய செய்தியும் குளிர் நீரும் கொதி நீரும் மாறி மாறி தம் தலையில் ஊற்ரப்பட்ட நிலைதான் தம் உறவுகளை பறிகொடுத் தோருக்கு சீவன் போகும் நிலை
உறவுகளின்ர விபரங்களை கொண்டு வாங்கோ எல்லா தகவல்களையு உள்ளடக்கி மாகாண சபையில ஒரு தீர் மானம் கட்டாயம் கொண்டுவாரன். என்னை நம்புங்கோ நான் கொண்டுவர பிந்தினா எங்கட செங்கோலுக்கு சேதாரம் வந்தா அதை சிவஞானத்தார் அவற்ற காசில நெடுகலும் திருத்த முடியாது , ஆனா படியா தீர்மானத்தை நிறைவேற்றி போட்டு பத்திரிகையில முதல்வர் கொண்டுவந்தார் தீர்மானம் அது முழுமையாக நிறைவே றியதாக அறிவித்தார் தவிசாளர் சிவஞானம் வெகு விரைவில் விடுதலை ஆவார்கள் எம் உறவுகள் எண்டு தலையங்கம் போடச்செய்வன் இது என்ர மானசீக குரு பிரேமானந்தாஜீ மீது சத்தியம்.
இப்பதான் எனக்கு புரியிது எல்லாரையும் ஓடிப்போய் அள்ளி அள்ளி வோட்டுப் போட சொன்னது மாகாண சபையில தீர்மானங்கள் கொண்டுவரத்தான் போல. நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தானடி ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
காரியச்சித்தன்

நன்றி சலசலப்பு