3/15/2015

| |

கிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ்கரிக்க தீர்மானம் .

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வினை பகிஷ்கரிக்க 10 உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செயற்படவுள்ளோம் என அறிவித்த ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களே இந்த பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி கூடிய கிழக்கு மாகாண சபை அமர்வின் போது, எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி சபை மீண்டும் கூடும்
தவிசாளர் அறிவித்தார். எனினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தொடரும் நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி சபையை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதற்கமைய மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை (நாளை) கூட்டுமாறு பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.ஷெரீபிற்கு அறிவித்துள்ளார். சபையின் பதில் தவிசாளர் பதவியிலுள்ள போதிலும் ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவினை பதில் தவிசாளர் எம்.எஸ்.சுபையிர் ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காகவே இந்த விசேட அமர்வு நடைபெறவுள்ளதாக பேரவையின் செயலாளரால் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விஷேட அமர்வை ஆளும் தரப்பில் அதிருப்தியடைந்து எதிரணியாக செயல்பட தீர்மானித்துள்ள உறுப்பினர்கள் புறக்கணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவிசாளாரை தெரிவுசெய்வதற்கு விசேட அமர்வொன்று தேவையில்லை. அதனை ஏற்கனவே திட்டமிட்ட 24ஆம் திகதியே தெரிவுசெய்ய முடியும். இதனால் 10 உறுப்பினர்கள் குறித்த அமர்வினை பகிஷ்கரிக்கவுள்ளோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான சந்திரதாஸ கலப்பதியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.