3/16/2015

| |

கிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் தலைவர் தேர்வு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பல உறுப்பினர்களின் புறக்கணிப்புக்கு இடையே அவைத் தலைவர் தேர்வு நடைபெற்றுள்ளது.
புதிய அவைத் தலைவராக சந்திரதாஸ் கலப்பதி தேர்வு
அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆளுநரின் உத்தரவுக்கு அமைய திங்கட்கிழமை அவைத் தலைவரைத் தேர்தெடுக்க சபை கூட்டப்பட்டது. எனினும் இக்கூட்டத்துக்கு தலைமையேற்க இருந்த அவையின் துணைத் தலைவர் உட்பட பலர் இக்கூட்டதில் பங்கேற்கவில்லை.
எனினும் கூடியிருந்த உறுப்பினர்கள் ஒருமனதான ஐக்கியத் தேசியக் கட்சியைச் சேர்ந்த சந்திரதாஸ கலப்பதி அவைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

மூன்றில் ஒரு பங்கினர் வரவில்லை

அம்மாகாண சபையில் உள்ள 37 உறுப்பினர்களில் இன்றைய சபை அமர்வுக்கு 13 உறுப்பினர்கள் வரவில்லை.
கடந்த மாதம் 10ம் திகதி கூடிய கிழக்கு மகாண சபை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது ஆனாலும் முன்னாள் அவைத் தலைவர் அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய அவைத் தலைவரைத் தேர்தெடுக்க அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
இன்றைய சபை அமர்வுக்கு தலைமை தாங்க வேண்டிய துனை அவைத் தலைவரான எம். எஸ் சுபைர் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் தற்காலிக அவைத் தலைவராக மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு சபை அமர்வு நடைபெற்றது.
ஆளும் தரப்பு அதிருப்தியாளர்கள் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேரும் ஏற்கனவே இன்றைய அமர்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
அந்த அணியை சேர்ந்த துனை அவைத் தலைவரான எம். எஸ். சுபைர் உடல்நலக் குறைவு காரணமாகவே இன்றை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்கின்றார்.
ஆனால் முன்னாள் மாகாண அமைச்சரான எம். எஸ் உதுமான்லெப்பையோ தாங்கள் ஏற்கனவே கூடி எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் இன்றைய சிறப்பு அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றார்.
இன்றைய சிறப்பு அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினர்கள் 12 பேரில் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் , மற்றும் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள். ஏனைய 10 பேரும் புறக்கணித்திருந்ததார்கள் .
புதிய அவைத் தலைவரான சந்திரதாஸ கலப்பதி சபையை பொறுப்பேற்ற பின்னர் அடுத்த அமர்வை எதிர்வரும் 31ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.