3/22/2015

| |

தலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்-தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் மாணவர்கள் பருகும் நீரில் விஷம்
கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழன் 19/03/2015 அன்று விஷம் கலந்த
நீரை பருக நேர்ந்தஅப்பாடசாலையின் 27 மாணவர்கள் உரிய நேரத்தில் வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டமையினால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
பச்சிளம் பாலகர்களை கொலை செய்ய முனைந்த இந்த மிருகத்தனமான செயலை  நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.  சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் உள்ள தலித் மாணவர்களை குறிவைத்தே  இந்த சதிசெயல் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை  தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம் பகிரங்கமாக உறுதி செய்கின்றோம். 

இதுவரை காலமும் வெறும்  ஐந்தாம் தரம் மட்டுமே கல்வியை வழங்கி வந்த இப்பாடசாலையானது   2001ம் ஆண்டே  தரமுயர்த்தப்பட்டிருந்தது.அதன்காரணமாக  காலாகாலமாக கனிஷ்ட கல்வி  மறுக்கப்பட்டுவந்த  இப்பிரதேச தலித் மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக  தரம் 11 வரை கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றனர்.   தலித் மாணவர்களின் இந்த வளர்ச்சி போக்கு இப்பிரதேச ஆதிக்கசாதியினரிடத்தில் பெரும் பொறாமைதீயை   ஏற்படுத்தியிருந்தமையை  நாம் அறிந்திருக்கின்றோம். இந்த பாடசாலையின் வளர்ச்சி மரமேறுதல்,சிகையலங்காரம்,மீன்பிடித்தல் போன்ற குலத்தொழில்களை  மெதுமெதுவாக கைவிட்டு வேறு தொழில்களை நாட  இப்பிரதேச இளைஞர்களுக்கு கைகொடுத்து உதவியமை முக்கியமானதொன்றாகும்.  இந்த பின்னணிகளை விடுத்து தலித் மாணவர்கள் மீதான   இக்கொடூரத்தின் காரண காரியங்களை அடையாளம் காண முடியாது என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

வெறும் சாதிய அடையாளங்களையும் ஆதிக்க திமிர்களையும்    மட்டுமே  கட்டிக்காக்கின்ற   யாழ்ப்பாண கலாசாரத்தின் வரலாற்று தொடர்ச்சியில் தலித் மக்களை குறிவைத்து  நடத்தப்படுகின்ற இதுபோன்ற தண்ணீர் சார்ந்த அட்டுழியங்கள் ஒன்றும் புதிதல்ல.  தலித்துகளின் தீட்டுகளை துடைக்க கிணறுகளையே இடித்தொழித்த சம்பவங்களும், யுத்தகால இடப்பெயர்வுகளின் போது  தலித்துகள் பாவித்து விடக்கூடாதென்பதற்காக  கிணறுகளுக்குள் மண்ணெண்ணெய் ஊற்றியும், இறந்த நாய்களையும் பூனைகளையும் கூட கிணறுகளுக்குள் வீசிவிட்டும்  சென்றசாதிமான்களின்  சாதனைகளையும் இவ்விடத்தில் தமிழ் பேசும் நல்லுலகுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.  தலித்துகளுக்காக உருவாக்கப்பட்ட பாடசாலைகளையும் வாசிகசாலைகளையும் தீயிட்டு கொளுத்தி தற்பெருமைகொண்ட யாழ்ப்பாண மண்ணில் எப்படி  இந்த ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் வளர்ச்சி நிலைத்து நிற்க முடியும்?   இந்த சமூக யதார்த்தங்கள் அனைத்தையும் மறைத்து தலித்  மாணவர்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்துக்கு வெவ்வேறு காரணங்களை கற்பிக்க முனைகின்ற ஊடகங்கள் அனைத்தையும்  நாம் வன்மையாக கண்டனம் செய்கின்றோம்.அரசியல் போட்டியும் பழிவாங்கலுமே  இந்த நாசகார செயலுக்கு காரணம் என உண்மைகளை ஆழ நோக்காமால்  மேலெழுந்த வாரியாக இச்சம்பவத்தினை நாம் இலகுவாக கடந்து செல்ல முடியாது. இந்த நச்சூட்டல் வெறித்தனத்தில் இருக்கின்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை மறைத்து அதனை   பூசி மெழுகி திரிபுபடுத்தும்  முனைப்புகள்  ஆதிக்கசக்திகளை காப்பாற்றும்  குள்ளத்தனங்களின் வெளிப்பாடுகள் ஆகும். இந்த நஞ்சூட்டல் வெறியாட்டம் அரசியல் போட்டி காரணமானதாகவோ, மாணவர்களுக்கு நீர் வழங்கும் பிரதேச சபையை பழிவாங்கும் முயற்சி என்பதாகவோ இருக்கலாம். அதுவே   உண்மையானாலும் கூட குறித்த பிரதேச சபையின் கீழ்  இருபதுக்கும் மேற்பட்ட  பாடசாலைகள் இயங்குகின்ற வேளையில் ஏன் இந்த பாடசாலைதான்   அதற்கான தெரிவாக வேண்டு என்கின்ற கேள்வியை நாம் எழுப்ப முனைகிறோம்? எந்தவொரு  அரசியல்வாதி யாரொருவரையேனும்   பழிவாங்கும் நோக்கில் இந்த  செயலுக்கு உத்தரவிட்டிருந்தாலும் எந்த அடிப்படையில் தலித்  மாணவர்களின் இந்த பாடசாலை தெரிவு செய்யப்பட்டது? தமது அரசியல் பழிவாங்கலுக்கு  மிக இலகுவான இலக்காக  ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படை என்ன? என்கின்ற  கேள்விகளுக்கு யாரிடம் விடையுண்டு? 
அதுவே சாதியத்தின் கொடூரம். கேட்பார் பார்ப்பார் இன்றி  நாதியற்று கிடக்கும் தலித் சமுகம் மேட்டுக்குடிகளின் அரசியல் காய் நகர்த்தலுக்கு பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.யுத்தகால இன முரண்பாடுகளுக்கு மத்தியில்  இரண்டாம் பட்சமாக்கப்பட்டு கிடந்த ஆதிக்க சாதி வெறித்தனங்கள் இப்போது  மீண்டும் அரங்கேறி வருவதனை இச்சந்தர்ப்பத்தில் நாம் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றோம்.  யுத்தத்துக்கு பின்னரான காலத்தில் வடமாகாணமெங்கும் இடம்பெற்று வருகின்ற இளைஞர்,யுவதிகளின் தற்கொலைகளிலும்  புதுமண  தம்பதிகளின் வேகமான விவாக ரத்துகளிலும் கோஸ்டி சண்டைகளிலும்  அதிகளவில்   சாதிய கொடுமைகளே  கூடிய  தாக்கம் செலுத்தி வருவதை  நாம் புறம் தள்ளிவிட முடியாது. குறிப்பாக  வடமாகாண சபையின் சைவ வேளாள ஆட்சி உருவானதன் பின்னர்   மரபு,கலாசாரம், பண்பாடு போன்றவற்றின் பெயரில் நல்லூர் ஆறுமுகம்   வழிவந்த சாதிய கட்டுமானங்கள்     உத்வேகம் பெற்று வருவதன்  வெளிப்பாடுகளே     இதுவென நாம் அஞ்சுகின்றோம்.  


எனவே இந்த "தலித்  கூட்டுப் படுகொலை சதி"யை மிக வன்மையாக கண்டிப்பதோடு இந்த கொலை குற்றவாளிகள் கண்டு பிடிக்க படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும்  ஏதுவாக இலங்கையின் போலிஸ் மற்றும் நீதித்துறை பாரபட்சமற்ற விசாரணைகளை முடுக்கிவிட வேண்டுமென தலித் சமூக மேம்பாட்டு முன்னணி பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றது.


இலங்கை  தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ் 
 22/03/2015-