4/07/2015

| |

செம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற, -ஆந்திர காவல்துறை


திருப்பதியில் துப்பாக்கிச்சூடு 20 தொழிலாளிகள் சுட்டுக்கொலைசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற, -ஆந்திர காவல்துறையின் செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையினரின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாக கூறினார். மேலும் கருத்து கூறியுள்ள அவர் மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் எதிலும் சிக்காமல் தப்பித்து கொள்வதாகவும், சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதே முறை எனவும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். காக்கை, குருவிகளை போல சுட்டுக் கொல்வது காட்டுமிராண்டித்தனம் என வன்மையாக கண்டித்துள்ளார். இதற்காக ஆந்திர அரசிடம் மத்திய மற்றும் தமிழக அரசுகள் கடும் கண்டனத்தை தெரிவிக்க வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, யார் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் ஏற்க முடியாது என்றார். மேலும் பேசிய அவர் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். 

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளார். மேலும் கருத்து கூறியுள்ள அவர் துப்பாக்கிச்சூடு நடத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என்றார். வனத்துறையின் தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாக கூறியுள்ளார். மேலும் ஆந்திர மாநில வனத்துறையின் செயல் குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.