5/23/2015

| |

அதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு விழாவில் முத்தாரம்

முதல்வராக ஜெயலலிதா பதவேற்ற விழாவில் புன்னகை பூக்க தமிழக பா.ஜ., தலைவர்கள் கலந்துகொண்டது, பல்வேறு ஹேஸ்யங்களை ஏற்படுத்தி உள்ளது. 

அதிகாரிகள், தொழில் அதிபர்கள், நீதிபதிகள், நடிர்கள் என பல்வேறு தரப்பினரையும் விழாவுக்கு அழைத்த ஜெயலலிதா, மற்ற எந்தக் கட்சியையும் அழைக்கவில்லை, பாஜவைத் தவிர. 

இது தான் ஆச்சரியத்தின் உச்சம். இரு கட்சிகளும் கூட்டணியில் இல்லை. வேறு எந்தக் கட்சியையும் கண்டுகொள்ளாதவர் ஜெயலலிதா. யாரையும் நம்பி நான் இல்லை என வெளிப்படையாக காட்டிக்கொள்பவர். இப்படிப்பட்டவர் பாஜவை மட்டும் அழைத்தது ஏன்? இது பற்றி விசாரித்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாஜ நிர்வாகி, ""அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி ஏற்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன. வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுபட்டதால் அவருடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு இருந்த தயக்கம் போய்விட்டது. ஏற்கனவே நாங்கள் கூட்டணி வைத்த தேமுதிக, மதிமுக போன்ற கட்சி தலைவர்கள், கூட்டணிக்கு எதிராகவே பேசக் கூடியவர்கள். இவர்களை இனி நாங்கள் நம்ப மாட்டோம்'' என்றார். இன்னொரு அதிமுக நிர்வாகி கூறும்போது, ""பாஜவில் உள்ள சுஷ்மா, ஜெட்லி, வெங்கய்யா போன்றவர்கள் ஜெயலலிதாவிற்கு நண்பர்கள். இவர்கள் இந்த கூட்டணி ஏற்படத்தான் விரும்புவார்கள். அக்கட்சி தலைவர்களை விழாவுக்கு அழைத்தபோதே எங்கள் தலைவியின் மன ஓட்டம் தெரிந்துவிட்டது'' என்றார். 

ஜெ., அப்பீல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வந்தார்கள் தமிழக பாஜ தலைவர்கள். மத்திய அமைச்சர்கள் அனைவரும் 'கொத்து கொத்தாக' தமிழகம் வந்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து, கட்சியை வளர்க்கவும் திட்டமிட்டனர். தீர்ப்புக்குப் பிறகு நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. மத்திய அமைச்சர்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் திட்டம் "பணால்' ஆகிவிட்டது.

மதுரையை சேர்ந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறும்போது, ""ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு அமைந்திருந்தால், பாஜவின் அணுகுமுறையே வேறு மாதிரி இருந்திருக்கும். அதிமுகவுடன் கடுமையாக மோதி இருக்கும். ஆனால் ஜெ., விடுதலை ஆனதும், மோதல் போக்கை கைவிட்டு, கைகோர்க்க தயாராகிவிட்டது பாஜ. தீர்ப்பு வரும்வரை ஜெயலலிதாவை விமர்சித்த தமிழக பாஜ தலைவர்கள், 'பெட்டிப் பாம்பாய்' அடங்கிவிட்டார்கள்'' என்றார். 

ஆக, அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.