6/17/2015

| |

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றை அமைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துக்கான புதிய பரிமாணத்தை உருவாக்க இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவுடன் இலங்கையை தரைவழியாக இணைப்பதற்காக இந்திய பெறுமதியில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இந்திய மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று செவ்வாய்க்கிழமை (16) கையெழுத்திட்டது. அப்போது இந்தியா - இலங்கையை தரைவழியாக இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவரித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்திய பெறுமதியிலான 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா - இலங்கையை இணைக்கும் திட்டம் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29 கிலோமீற்றர்) இணைப்பது என்பது ஒரு திட்டம். இந்த இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழே சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் இந்தியா திட்டமிடப்பட்டு வருகிறது' என நிதின் கட்காரி கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/148511#sthash.bbH4co43.dpuf