2/21/2016

நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா?

நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா?

கொழும்பில் கடந்த 16ம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கக் கோரியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்ட பேரணியும் கவனஈர்ப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விசேட கூட்டம் நடைபெற்றதுடன், அங்கிருந்து அரசடி சந்தி ஊடாக காந்திபூங்கா வரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

பின்னர், காந்திபூங்கா அருகில் விசேட கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அடிக்காதே அடிக்காதே பட்டதாரிகளை அடிக்காதே, வேலைகொடு வேலைகொடு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகொடு, ஏமாற்றாதே ஏமாற்றாதே வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றாதே, நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

கடந்த ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இந்த ஆண்டு பெப்ரவரிக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் அந்த உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லையெனவும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி ஜனநாயக ரீதியில் கொழும்பில் வேலையற்ற பட்டதாரி மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் இதுதான் நல்லாட்சியின் தன்மையா எனவும் இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இலங்கையில் திணைக்களங்களில் 32,000 வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவற்றிற்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான எதுவித நடவடிக்கையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக புதிய அரசாங்கத்திடம் பட்டதாரிகள் தொடர்பில் எதுவித தேசிய கொள்கையும் இல்லையென தெரிவித்த அவர்கள், தேசிய கொள்கையொன்றை வகுப்பதன் மூலம் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டங்களைப்பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தேசிய கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்து வெளியேறுவோருக்கு உடனடியாக தொழில் வாய்ப்புகளை வழங்கும் அரசாங்கம் மூன்று நான்கு வருடங்கள் கற்று பட்டங்களைப் பெற்றுச் செல்லும் தங்களை உதாசீனம் செய்து வருவதாகவும் ஆர்ப்பட்டக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 commentaires :

Post a Comment