3/14/2016

சாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை:மனைவி கவலைக்கிடம்

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.  இதில் கணவர் பரிதாபமாக இறந்தார். பெண் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டுத்தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக  கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர். உடுமலை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மூவர்  திடீரென அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர். துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி படுகாயமடைந்து மயங்கினர்.  அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் தம்பதியினரை காப்பற்ற முயன்றனர்.  அவர்களையும் அந்த நபர்கள் வெட்ட முயன்றதால பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் வெட்டி வீழ்த்தியதையடுத்து மூவரும் பைக்கில் தப்பினர்.

படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன் போன்ற பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வரும் நிலையில்,சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

0 commentaires :

Post a Comment