3/15/2016

இலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்றம் வெளியிட்டுள்ள யாப்பு திருத்த யோசனைகள்


பேராசிரியர் நுஹ்மான்,பேராசிரியர் ஹஷ்புல்லா,பேராசிரியர் அனஸ்  போன்றோருடன் இணைந்து பதினோரு புத்திஜீவிகள் இக்கண்டி மன்றத்தின் சார்பில் மேற்படி யோசனைகளில் கையெழுத்திட்டுள்ளனர்.

இனரீதியாக எல்லைகளை வரையறுத்து அதிகார மையங்களை உருவாக்குவது இலங்கையின் பல்லின தன்மைக்கு பொருத்தமற்றது என குறிப்பிடும் யோசனைகளுடன் வடக்கு கிழக்கை இணைப்பதோ,கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு ஒன்றினை உருவாக்குவதோ உசிதமானதல்ல என தெரிவிக்கும் மேற்படி அறிக்கை மாகாண சபை முறைமையை பலப்படுத்துமாறு கோருகின்றது.

பிரதேச எல்லைகளுடைய மற்றும் பிரதேச எல்லைகள் அற்ற சிறுபான்மை  இனங்களுக்கான அரசியல் யாப்புத் தீர்வுகள்
தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மத சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பாக்கின்றோம்.
யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக்கோள்களை அர்த்தமுள்ள முறையில் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய யாப்பில் உள்ளடக்குவதற்காகப் பின்வரும் ஆலோசனைகளை நாம் முன்வைக்கின்றோம்.
1.பிரதேச நிலையில் அதிகாரப் பகிர்வு
அதிகாரப் பகிர்வு என்பது இனத்துவ அடிப்படையிலும் பிரதேச எல்லை என்ற அடிப்படையிலும் இன்று புரிந்துகொள்ளப்படுகின்றது. பிரதேச நிலையில் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கை இலங்கைத் தமிழ்த் தேசிய வாதிகளால் சுதந்திரத்துக்குப் பிந்திய ஆரம்ப காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. சிங்களப் பெரும்பான்மை மேலாதிக்கமும் இனத்துவப் பாராபட்சமும் இதற்குக் காரணமாக அமைந்தன. இந்த நாட்டில் தொடர்ச்சியான இன வன்செயல் களுக்கும், முப்பது ஆண்டுகால யுத்தத்துக்கும் பேரழிவுக்கும் இது இட்டுச் சென்றது.
இந்தியத் தலையீட்டின் மூலம் 1987ல் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமும், அரசியல் யாப்புக்கான 13 ஆவது திருத்தமும் இலங்கையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தின. வடக்கும் கிழக்கும் நிபந்தனையுடன் இணைக்கப்பட்டன. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தீர்மானம் பற்றி கிழக்குமாகாண மக்களின் கருத்துக் கேட்கப்படவில்லை. எனினும், 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வடக்குக் கிழக்கு இணைப்புச் செல்லுபடியாகாதென்று தீர்ப்பு வழங்கி வடக்கையும் கிழக்கையும் பிரித்தது. இப்போது, 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவற்றை விடக் குறைந்த அதிகாரங்களுடன் தனித்தனி மாகாண சபைகள் நடைமுறையில் உள்ளன.
பிரதேச சுயாட்சி பற்றிப் பேசுவதற்கும் சுயாதீனமான பிரதேச அல்லது மாகாண சபைகளை நிறுவுவதற்கும் ஒரு வாய்ப்பான சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு மட்டுமன்றி அதிகாரப் பகிர்வையும் அதிகாரப்  பரவலாக்கத்தையும் விரும்பும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கத் தக்கது.
ஆகவே, தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமை தொடர வேண்டும் என்றும், மாகாணக் கவர்னர்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் கண்டி மன்றம் முன்மொழிகின்றது.
2.கிழக்கு மாகாணம்
  அ) வடக்கையும் கிழக்கையும் மீள இணைப்பது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அது ஒரு நடைமுறை சாத்தியமான கோரிக்கை அல்ல. முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் மீள் இணைப்பை விரும்பவில்லை. மேலும், கிழக்கிலங்கையின் மொத்தச் சனத் தொகையில் தமிழர்கள் 39.79%  வீதத்தைக் கொண்ட சிறுபான்மையினரே என்ற உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
  ஆ) கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்ச்சியற்ற தனிமாகாணம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் அச்சமூகத்தின் தேவைகளுக்கு உகந்ததல்ல என்றும், இன்றுள்ள இனப்பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என்றும் நாங்கள் கருதுகின்றோம். ஆகவே, முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனிமாகாணத்தை உருவாக்கும் கோரிக்கையை நாங்கள் வன்மையாக நிராகரிக்கின்றோம்.
  இ) கிழக்கு மாகாணம் இலங்கையில் சமாதான சகவாழ்வுக்கு ஒரு முன்மாதிரி மாகாணமாக இருக்க முடியும். அது மட்டுமே இலங்கையில் கிட்டத்தட்ட இனத்துவச் சமநிலையுடைய ஒரே ஒரு மாகாணமாகும். இங்கு தமிழர்கள் 39.79% வீதமும், முஸ்லிம்கள் 36.72% வீதமும், சிங்களவர்கள் 23.15% வீதமும் வாழ்கின்றனர். இனப் பன்மைத்துவம், நல்லாட்சி, சமாதான சகவாழ்வு என்பவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டான மாகாணமாக அது பரிணமிப்பதற்கு இது ஒரு சிறந்த சூழ்நிலையாகும். மாகாணத்துக்கு உள்ளும், மாகாணங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு வேண்டிய யாப்புரீதியான விசேட உறுப்புரைகள் மூலம் இம்மாகாணத்தை மேலும் பலப்படுத்த முடியும்.
3.பிரதேச எல்லைகளற்ற சிறுபான்மையினர்
இலங்கையின் மையச் சிந்தனையோட்டம் வடகிழக்குத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி மட்டுமே அக்கறை காட்டியதால், அதேயளவு முக்கியத்துவமுடைய பிரதேச எல்லைகளற்ற மிகப் பெருந்தொகையான இலங்கையின் ஏனைய இனத்துவச் சிறுபான்மையினரின் பிரச்சினை பற்றி இந்த நாட்டின் அரசியல்வாதிகளோ, அறிஞர்களோ, சிவில் சமூகங்களோ இதுவரை அக்கறை காட்டவில்லை.
மாகாண நிலையில் உச்ச அளவு அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டால் கூட இந்த நாட்டில் இனத்துவச் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை அது முற்றாகத் தீர்த்துவிடாது. ஏனெனில், தமிழ்ப்பேசும் சிறுபான்மையினரில் மிகப் பெரும் பகுதியினர், 55% வீதத்துக்கும் அதிகமானவர்கள், பிரதேச எல்லைகளற்ற சிறுபான்மையினராக வட, கிழக்குக்கு வெளியே பிற எல்லா மாகாணங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் சிதறலாக வாழ்கின்றனர். இவர்களுள் இலங்கைத் தமிழர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினரும், மலையகத் தமிழர்களில் 99 % வீதத்தினரும் இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதிக்குச் சற்று அதிகமானவர்களும் அடங்குவர். இவர்களே கடந்த காலங்களில் தென்னிலங்கையில் அவ்வப்போது நடைபெற்ற இன வன்செயல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். அதிகரித்துவரும் சிங்களமயமாக்கப்பட்ட நிருவாகத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுபவர்களும் இவர்களே.
பிரதேச ரீதியிலான அதிகாரப் பரவலாக்கம் இந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான பிரதேச எல்லைகள் அற்ற இந்த இனத்துவச் சிறுபான்மையினரின் அரசியல் தேவைகளையும், சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பையும் எவ்வகையிலும் உறுதிப்படுத்தாது. பிரதேச  எல்லைகள் அற்ற இச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் அரசியல் யாப்பு ரிதியிலான சில திட்டவட்டமான பரிந்துரைகளும் நிறுவன ரீதியான கட்டமைப்பும் அவசியமாகும்.
ஆகவே, புதிய அரசியல் யாப்பு பின்வரும் விடையங்களை உறுதிப்படுத்த வேண்டும் என நாங்கள் முன்மொழிகின்றோம்.
  •பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி அமைப்பு களிலும் அவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களால் தேர்ந்தெடுக் கப்படும் அங்கத்தவர்கள் இல்லாதவிடத்து நியமன அங்கத்தவர்களால் அது நிரப்பப்பட வேண்டும்.
  •தங்களுடைய மொழி உரிமையை முழுமையாகப் பயன்படுத்தவும், எவ்வித அச்சுறுத்தலும், பயமும், தடைகளும் இன்றித் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் அனுஷ்டிக்கவும் அவர்களுக்கு உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  •தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கும், பொருளாதார மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கும், எந்தவிதமான பாராபட்சமும் இல்லாமல் அரச, தனியார் நிறுவனங்களில் தொழில் பெறுவதற்கும் உரிய வாய்ப்பு  உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  •சிறுபான்மையினரின் நலன்களைக் கவனிக்கவும் இனத்துவ, மத, பண்பாட்டு, மொழிரீதியிலான எல்லாவிதமான பாராபட்சங்களையும் தடுப்பதற்கும்,  தீர்வுகாண்பதற்கும் சமூக சமத்துவத்துக்கான ஒரு சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் என்றும் நாங்கள் முன்மொழிகிறோம்.
  4.பறங்கியர், மலாயர் போன்ற இன்னும் பல பிரதேச எல்லைகளற்ற சிறுபான்மையினர் உள்ளனர். இலங்கைப் பிரஜைகள் என்றவகையில் அவர்களுடைய தனிமனித மற்றும் குழு உரிமைகள்  அரசியல் யாப்பினால் பாதுகாக்கப்பட வேண்டும்.
  5.இலங்கையின் பல்லின, பல்மத, பல்மொழித் தன்மையைப் புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்க வேண்டும். அத்துடன், இனத்துவம், சாதி, பால், மதம், மொழி என்ற பேதம் இன்றி எல்லாப் பிரஜைகளின் சம உரிமையையும் அது உறுதிப்படுத்த வேண்டும்.
  6.நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும். இந்த முறைமையின்கீழ் இதே ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு பாசிச ஆட்சி மேற்கிளம்ப முடியும் என்பதையும், நாட்டில் ஜனநாயகச் செயற்பாட்டைத் செயலிழக்கச்செய்ய முடியும் என்பதையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த 35 வருடகால நமது அனுபவம் நமக்குச் சொல்கிறது.
  7.அரசியல் யாப்பே நாட்டின் அதி உயர் சட்டம் என்ற வகையில், பொதுவாக மக்களின் அடிப்படை உரிமைகளையும், குறிப்பாகச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் மோசமாகப் பாதிக்கக் கூடிய வகையில் பாராளுமன்றம் எந்த ஒரு சட்டத்தையும் இயற்றுவதையும் அமுல்படுத்துவதையும்  தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் அரசியல் யாப்பினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

  கண்டி மன்றத்தின் சார்பில்
  ஒப்பம் இட்டவர்கள்
  பேராசிரியர் எம். ஏ. நுஃமான், ஜனாப் ஜே. எம். நிவாஸ்,
  பேராசிரியர் எஸ் எச். ஹஸ்புல்லா, பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக்,
  ஜனாப் எம். எம். நியாஸ், பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ்,
  கலாநிதி ஏ. எல். எம். மஹ்றூப். கலாநிதி ஏ. எஸ். எம். நௌபல்,
  கலாநிதி எம். இசற். எம். நபீல், ஜனாப் ஏ. ஜே. எம். முபாறக், ஜனாப் யு. எம் பாசில்

0 commentaires :

Post a Comment