3/13/2016

இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்-அசுரா

இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்-அசுரா

பிரித்தானிய காலனித்துவ பிடியிலிருந்து இலங்கையின் பூரண சுதந்திரத்தின் அவசியம் குறித்து சிந்தித்து செயலாற்றிய தமிழ் தலைவர்களாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களையும், அதன் வரலாற்றின் ஊடாகவுமே நாம் இதுவரை அறிந்திருக்கின்றோம். ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் அரசியில்-சமூக சிந்தனை கொண்ட ஒருவரையும் தற்போது அறியக்கூடியதாக உள்ளதுnallaiah[1]1944களில் இலங்கைக்கான பூரண சுதந்திரம் வழங்குவதற்குரிய சட்ட அமுலாக்க விவாதம் ஒன்று இலங்கை அரசசபையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது அச்சட்ட அமலாக்க மசோதாவை ஆதரித்து விவாதித்தவராக மேற்படி இலங்கைக்கான பூரண சுதந்திரத்தை விரும்பியவராக திரு.வி.நல்லையா அவர்கள் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அவ்விவாவத்தில் அவர்பேசிய பல்வேறு விடயங்களில் இதுவும் ஒன்று: ‘’…. சுதந்திரத்தை நேசிக்கிறவன் என்ற முறையில் அதனைக் கேட்கும்போது வேறு எந்தப் பாதுகாப்பினையும் கேட்கலாம் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் கேட்கின்ற மிகக்கூடிய பாதுகாப்பு 50க்கு 50 ஆகும். இது பிரித்தானியர் இங்கிருந்து அந்த ஒழுங்கினை பாதுகாப்பதில் தங்கியிருக்கின்றது. சிறுபான்மையோர் தங்களது பாதுகாப்பை பேணுவதற்கு பெறக்கூடிய ஆகப்பெரிய உத்தரவாதம் பிரித்தானிய அரசை இந்த நாட்டில் வைத்திருப்பதுதான். பிரித்தானிய அரசு இங்கு இருப்பது எனக்கு விருப்பமில்லை. நாங்கள் கேட்கின்ற பிரதிநிதித்துவ விகிதாசாரங்களிலோ, பிற பாதுகாப்பிலோ அதிக நம்பிக்கை வைக்கமுடியாது. எங்கள் பாதுகாப்பு எங்கள் கையில்தான் இருக்கின்றது. எமக்கு பாதுகாப்பு வேண்டுமாயின் அதை எமது சொந்த பலத்திலும் எம்மை சூழ இருக்கும் ஏனைய இனத்தவரின் நல்லெண்ணத்திலும் இருந்தே பெறவேண்டும். ‘’  என்பதோடு திரு வி.நல்லையா அவர்களது உரைகள் யாவும் ஒடுக்கப்படும் சமூகங்களின் பல்வேறு சமூக நலன்களின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் உரைகளாகவே அமைந்திருக்கின்றது.
1943இல் இலங்கையின் அரசாங்கசபையையும், பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர் அமரர் வி.நல்லையா. இவர் கல்குடா தொகுதியின்  பாராளுமன்ற அங்கத்தவராயிருந்தவர்.  கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அமரர் வி.நல்லையா அவர்கள்  பாராளுமன்ற விவாதங்களில் உரையாற்றிய காத்திரமான சமூக விவகாரங்களில் மலையக மக்கள் தொடர்பாக ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்:
 ‘’இந்திய தொழிலாளர்கள் இந்த நாட்டில் நடத்தப்படும் விதத்தை நோக்கும் எவருக்கும் பெருந்தோட்டக்காரரின் கொடும்படியிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் எந்த முயற்சியும் ஒரு போதும் எவராலும் செய்யப்படவில்லை என்பது தெளிவாகும். தொழிலாளர்களது, குறிப்பாக இந்திய தொழிலாளர்களது நலன்களையும் வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் பொறுப்பு இப் பெருந்தோட்ட முதலாளிகளிடமே முற்றாக விடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு கல்வி வசதி அளிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்கும் பொறுப்பும் உட்பட எல்லாமும் முதலாளிகளின் கையில்தான். அரசாங்கம் எதனையும் பொறுப்பெடுக்கவில்லை. எமது அரசாங்கத்திற்கு சமாந்திரமான இன்னுமொரு ஆட்சியின் கையில்- தோட்ட முதலாளிகளின் ஆட்சியின் கீழ்- இந்திய தொழிலாளர்கள் விடப்பட்டிருக்கின்றனர். முன்னைய அமைச்சும் அவரது குழுவும் இந்தக் கொள்கையை எந்த அளவிற்கேனும் மாற்றி இருக்கிறார்களா? இந்தியத் தொழிலாளர்கள் வாழும் முறையைச் சற்றே பார்ப்போம். இவர்கள் சிறைக்கைதிகளைவிட எந்தவகையிலாவது நன்றாக இருக்கிறார்களா? தோட்டத்தில் வேலை செய்யும் கூலியாட்களை யாரும் போய்ப் பார்ப்பதற்குதானும் உரிமை உண்டா? தங்களது உறவினர்களையோ நண்பர்களையோ தங்கள் வீட்டில் தற்காலிகமாகவேனும் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டா? ஐரோப்பிய தோட்ட முதலாளிகளிடமும் அவர்களுடைய தோட்ட அதிகாரிகளிடமும் முதலில் அனுமதி பெறாமல் இவர்களைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவார்களா? தோட்ட துரைமார்களின் பிடியில் இருந்து இந்தத் தொழிலாளர்களை விடுவிக்கும் பணியை இந்த அமைச்சின் குழு முதலில் மேற்கொண்டிருக்கவேண்டும்.

இவர்களது இருப்பிடங்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை. தோட்டத்துரைமாரும் ஏன் அரசாங்கமும் கூட விரும்பியபோது அவர்களை தமது வதிவிடங்களில் இருந்து வெளியேற்ற முடியும். ‘கூலி லயின்கள்’ என்று சொல்லப்படுகின்ற ஆரோக்கியத்திற்கு முரணான மிருகங்களின் கொட்டில்கள் போன்ற இந்த லயின்களில் தொழிலாளர்களை இருக்கச் சொன்னதே பெரிய பிழையாகும். இந்த லயின்கள் குடும்பங்கள் வாழ்வதற்கு தகுதியானவையல்ல.
முன்னர் நான் இதைப்பற்றி பேசிய போது நான் கூறியது தவறென தோட்டத்துரைமார்களின் பிரதிநிதிகளும், தொழிலமைச்சரும் சொன்னார்கள். ஒரு அறையில் ஒரு குடும்பத்திற்கு மேல் இருப்பதில்லை என்று எனக்குச் சொன்னார்கள். இது உண்மையல்ல என்று நான் அறிகிறேன். ஒவ்வொரு அறையிலும் நான்கு குடும்பங்கள் இருப்பதாக நான் விசாரித்த உத்தியோகத்தரிடம் இருந்து அறிந்தேன். இது தான் தற்போதைய நிலை. இந்தியத் தொழிலாளர்கள் நலனில் இந்த அரசாங்கம் இன்னும் சிறிது கவனம் எடுத்திருந்தாலும் அவர்களுக்கென்று வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை.
சர்வதேச தொழில் மாநாடு தொழிலாளர்களிடையே நிறத்தின் பெயரிலோ, சாதியின் பெயரிலோ, தேசியத்தின் பெயரிலோ பாராபட்சம் காட்டக்கூடாதென்று விதந்துரைத்திருக்கின்றது. இந்த விதந்துரையை பிரித்தானியக் குடியேற்றத் துறைச்செயலாளர் எங்கள் தொழிலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இந்த சிபாரிசை நடைமுறைபடுத்துவதற்கு இந்த அமைச்சு முன்வரவில்லை. இந்த அமைச்சு பல சம்பள நிர்ணய சபைகளை அமைத்திருக்கின்றது. 8 மணித்தியாலம் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு 58 சதம் என நிர்ணயிக்கின்ற இந்த சபைகளினாலே என்ன பிரியோசனம்? எங்களுடைய பொறுப்பிற்கு நாங்கள் சரியாக முகம் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தங்களது முதலாளிமாருடன் பேச்சு வார்த்தை நடத்த உரிமை உண்டு என்று நாங்கள் சொல்லுகிறோம். இந்த உரிமைகளினால் கிடைத்தது என்ன? ஒரு வளர்ந்த ஆண் வேலையாளுக்கு 8 மணித்தியாலத்திற்கு 58 சதம் கொடுக்கப்படுகிறது. இது தான் நாங்கள் இன்று அடைந்துள்ள நிலை. முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தை செய் என்று சொல்லிவிட்டு ஆறுதல் அடையாமல் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் வற்புறுத்தி இருக்க வேண்டும்.
இந்தியத் தொழிலாளர்களை நாம் நடத்தி இருக்கும் விதம் மிகவும் துரதிஷ்டமானது. இந்த நாட்டில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாயின் அது இந்தியத் தொழிலாளியின் உழைப்பினாலேயே என்பதை இந்த நாட்டில் எவரும் மறுக்கமுடியாது. இந்த நாட்டின் பொருளாதார வளத்திற்கு இந்த வகையில் பங்களித்திருக்கின்ற தொழிலாளர்களின் நலனில் முக்கியமாகக் கவனம் செலுத்துவது எங்களுடைய பெரிய கடமையாகும். மலேசியாவிலும் இந்தியாவிலும் இருக்கின்ற தொழிலாளர்களைவிட இங்கேயுள்ள தொழிலாளர்களின் நிலை மேலானது என்று அமைச்சர் கூறுவதில் அர்த்தம் இல்லை. எங்களுடைய நன்மைக்காக எங்களுக்கு வேண்டிய நேரங்களில் மேற்கத்தைய நாடுகளுடன் நாங்கள் எங்களை ஒப்பிடுகின்றோம். ஆனால் தொழிலாளர்களின் நிலமைகளைப் பற்றி பேசும்போது எதற்காக இந்தியாவிலும் மலேசியாவிலும் உள்ள கேவலமான நிலைகளுடன் ஒப்பிடவேண்டும்? ‘’
பிரித்தானிய காலனித்துவ பிடியிலிருந்து இலங்கையின் பூரண சுதந்திரத்தின் அவசியம் குறித்து சிந்தித்து செயலாற்றிய தமிழ் தலைவர்களாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களையும், அதன் வரலாற்றின் ஊடாகவுமே நாம் இதுவரை அறிந்திருக்கின்றோம். ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் அரசியில்-சமூக சிந்தனை கொண்ட ஒருவரையும் தற்போது அறியக்கூடியதாக உள்ளது.
*நன்றி : நூல் “அமரர் நல்லையா வாழும் மனிதம்”
அசுரா

நன்றி - தூ

0 commentaires :

Post a Comment