5/10/2016

காட்டுமன்னார்கோயில் திருமாவுக்கு கைகொடுக்குமா?

கடலூர் மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய தொகுதி, காட்டுமன்னார்கோயில் தனித் தொகுதி.
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இத்தொகுதியில் போட்டியிடுவதால் பலரது கவனமும் இத்தொகுதியின் பக்கம் திரும்பியிருக்கிறது.
காவிரியாற்றின் கடைமடைப் பகுதியான இங்கு விவசாயம்தான் பிரதானமான தொழில்.
சுமார் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களும் 35 சதவீதம் பேர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் இந்தத் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
சோழர் காலத்து கோவில்களான வீர நாராயணப் பெருமாள் கோவில், அனந்தீஸ்வரர் கோவில் ஆகியவை இங்குள்ள முக்கியமான ஆன்மீகத் தலங்கள்.
இதுவரை பன்னிரெண்டு முறைத் தேர்தலைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில், தி.மு.க ஐந்து முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும் விடுதலைச் சிறுத்தைகள், அ.தி.மு.க. ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன.
2006ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டது. ரவிக்குமார் வெற்றிபெற்றதையடுத்து இந்தத் தொகுதியில் கணக்கைத் துவங்கியது விடுதலைச் சிறுத்தைகள்கட்சி.
ஆனால், 2011ல் மீண்டும் போட்டியிட்ட ரவிக்குமாரைத் தோற்கடித்து தொகுதியைக் கைப்பற்றினார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முருகுமாறன்.
இப்போது இந்தத் தொகுதியில் தங்களது கட்சித் தலைவரே போட்டியிடுவதால், ஒவ்வொரு கிராமமாகச் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

0 commentaires :

Post a Comment