5/03/2016

நல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழலையே நினைவுட்டுகின்றன

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் கைது எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் அவர்களுடைய குடும்பங்களின் மனதிலும் பதற்றத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளது. அத்துடன் இது இவர்களிடத்திலே மிகப் பெரிய உளவியல் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய உளவியல் அழுத்தம் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார் நடைபெற்ற கைதுகள் தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது சமூகத்தில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் பொதுவாழ்வில் இணைந்து கொள்ள ஆரம்பிக்கும்போது, மீண்டும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்கள். இந்தக் கைதுகள் ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் அவர்களுடைய குடும்பங்களின் மனதிலும் பதற்றத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளன. அத்துடன் இது இவர்களிடத்திலே மிகப் பெரிய உளவியல் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய உளவியல் அழுத்தம் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும்.
எதற்காகத் தாம் கைது செய்யப்படுகிறோம் என்று தெரியாத நிலையில் நடைபெறும் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழலையே நினைவுட்டுகின்றன. ஆனால், யுத்தமற்ற அமைதிச் சூழலில் சட்டரீதியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே மக்களுக்குச் சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கையை அளிக்கும். ஆகவே இந்த விவகாரம் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். இதேவேளை இது மனிதாபிமான ரீதியில் அணுகப்படவேண்டிய பிரச்சினையுமாகும். அது மட்டுமல்ல இது ஒரு மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட விவகாரமாகவும் உள்ளது. முறைப்படி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களைத் அரசாங்கமே தொடர்ந்து கண்காணிப்பதும் சந்தேகிப்பதுமாக இருந்தால் மக்களும் அப்படியே இவர்களைச் சந்தேகிக்கும் நிலை உண்டாகும். இது நியாயமானதல்ல. அத்துடன் எதிர்விளைவுகளையே சமூகத்தில் உண்டாக்கும். இது நமது கடந்த கால அனுபவமாகும். ஆகவே இந்தத் தவறுக்கு மீண்டும் இடமளிக்கக்கூடாது.
புலிகள் மீள எழுச்சியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படும் பகிரங்க உண்மையாகும். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் கோரி வரும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்குரிய கள நிலை பொருந்தி வரும் சூழலில், புதிய ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் இந்தக் கைதுகள் மக்களின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனை அரசு போக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கைதுகளுக்கான காரணங்களும் நியாயங்களும் என்னவாக இருப்பினும் இவற்றைப் பொறுப்போடும் நிதானத்தோடும் அணுகவேண்டும். இந்த விடயத்தைக் கையாள்வதற்கு முறையான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு நியாயமான முறையில் இவர்கள் இயல்பு வாழ்வில் நம்பிக்கையோடு இணைந்து கொள்வதற்கு வழிவகுப்பது அவசியம். இதற்குரிய கடப்பாடு அரசாங்கத்துக்குண்டு. எனவே கைது செய்யப்பட்டவர்கள் நீதியான முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு இவர்களுக்கான முறையான பாதுகாப்பை வழங்கும் பொறுப்பையும் அரசாங்கம் செய்ய வேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment