6/03/2016

கட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்?

காங்கிரஸ் கட்சி தலைவராக இன்னும் சில வாரங்களில் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, கட்சிக்குள் இளரத்தம் பாய்ச்சப்படும் என்றும் கூறப்படுகிறது.காங்., கட்சி தலைவர் பதவியைப் பிடித்துக்கொண்டு விட மாட்டேன் என்கிறார் சோனியா. சென்ற லோக்சபா தேர்தலில் இருந்தே அக்கட்சிக்கு தோல்வி முகம் தான். சமீபத்தில் நடந்து முடிந்த கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சிக்கு தோல்வி மேல் தோல்வியே கிடைத்தது.
நீண்ட நாள் கோரிக்கை: தற்போது கட்சியின் துணை தலைவராக இருக்கிறார் ராகுல். 45 வயதாகும் அவரை, கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே நீண்ட நாட்களாக இருக்கிறது. கமல்நாத், திக்விஜய்சிங் போன்றவர்கள் அவ்வப்போது இக்கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போது இக்கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. ''ராகுலை தன்னிச்சையாக இயங்க விட்டால் தான் கட்சி வளர்ச்சி பெறும்'' என வெளிப்படையாக பலர் பேசத் துவங்கினர்.
இதற்கு இப்போது தான் நேரம் வந்திருக்கும் போலிருக்கிறது. அனைத்து ஏற்பாடுகளும் கட்சியில் தயாராகி விட்டன. சில வாரங்களில் கட்சி தலைவராக அவர் 'முடிசூட்டப்படுவார்' என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுலை தலைவராக்க வேண்டும் என்று கேட்போர், தங்கள் கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக சில வாதங்களை முன் வைக்கிறார்கள்.
1.கட்சிகள் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் பழம் தலைவர்கள் மாற்றப்பட்டு, இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அது ராகுலால் தான் முடியும்.
2.மாநில அளவிலும் தலைவர்கள் மாற்றப்பட வேண்டும்.
3. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
4.சோனியா, ராகுல் என்ற இரட்டை அதிகார மையங்கள் உள்ளதால் ஏற்படும் குழப்பங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
5. ஒரு கை கட்டப்பட்ட நிலையில், போர்க்களத்தில் ராகுல் நிற்கிறார். இப்படி இருந்தால், எதிரியை அவரால் எப்படி சமாளிக்க முடியும்?
6. முழு அதிகாரம் தரப்படாத நிலையில், தோல்விக்கு மட்டும் ராகுலை பொறுப்பேற்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
7.சுதந்திரமாக அவரால் முடிவெடுக்க முடிவதில்லை. அது மாற்றப்பட வேண்டும்.
8. ''தாயின் முந்தானையில் மறைந்து கொள்ளும் தனயனாக''அவர் இருக்கக் கூடாது.
9. மூன்று ஆண்டுகளாக ராகுல், துணை தலைவராகவே இருக்கிறார். இன்னும் எத்தனை காலம் தான் அவர் துணை தலைவராகவே இருப்பது?
10. ராகுலால் மட்டுமே நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை வளர்க்க முடியும். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அவரை 'தலை'யாக்க வேண்டும். இவையே அக்கட்சியில் மாற்றத்தை விரும்புவோரின் கருத்தாக இருக்கின்றன.

0 commentaires :

Post a Comment