7/12/2016

வெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா?-சுகு- ஸ்ரீதரன்

(ஆயிரம் ஆயிரம் போராளிகளும் பொதுமக்களும் எந்த பிரதிபலனும் பார்காமல் மரணித்த பாரிய இழப்புக்களைச் சந்தித்த மண்ணில் அயோக்கியர்கள் திருடர்கள் பெருமளவிற்கு தலைவர்களாக மிச்சமாகியிருக்கிறார்கள்.)-சுகு- ஸ்ரீதரன்

பொருளாதார மையம் எங்கு அமையவேண்டும் என்பதே இன்று வடக்கில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களின் பிரதான பட்டி மன்றம்.
தீவிர குடுமிபிடிச்சண்டையில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் மக்கள் நலன் பற்றி துளியளவு அக்கறையும் இல்லாதவர்கள்.
ஜனநாயக உணர்வு இல்லாதவர்கள் வெகுஜனங்களின் மக்கள் அமைப்புக்களின் கருத்துக்களைச் செவிமடுப்பார்கள் என்றில்லை....
வடக்கில் சொல்லிக் கொள்ளும் படியாக பொருளாதார மையங்கள் எதுவும் இல்லை.
ஏற்கனவே அச்சுவேலியில் 3 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட உள்ளக கட்டமைப்பு வசதிகளை வினைத்திறனுடன் கையாள்வதற்கான ஆற்றலும் அரசியல் பொருளாதார மட்டங்களில் காணப்படவில்லை.
தற்போது இடத்தை தெரிவு செய்வதற்கு மண்டை உடைக்கிறார்கள்.
மக்களுக்கு எது பிரயோசனமானது தூர நோக்கல் எங்கிருந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கவேண்டும் என்பது பற்றிய பிரக்ஞை இந்த பிரதிநிதிதிகளுக்கு புரிவதும் இல்லை புரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை.
எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று கருதுபவர்களைத்தான் மக்களும் அனேக சந்தர்ப்பங்களில் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள்.
உண்மையில் இந்த பொருளாதார மையம் அமைக்கும் இடத்தை தெரிவு செய்யும் விடயம் மாகாண சபையிடம் விடுவிக்கபடவேண்டும்.
மத்திய அரசு இதில் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்கக் கூடாது.
மாகாண அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தபடவேண்டும்.
அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான விருப்பங்களை வெளிப்படுத்த வேண்டும்.
கரவுகளுடன் அணுகுவது சமூகங்களை நாடளாவிய அளவில் ஒன்றிணைக்க உதவாது.

மாகாண சபையினரும் மக்களின் நலன் கருதி ஒருமித்துச் செயற்பட்டிருக்க வேண்டும்.
எங்கு பின்தங்கல் தனிமை பாரிய அளவில இருக்கிறதோ அங்கிருந்து தொடங்கவேண்டும். மாங்குளம் மையமானதும் தொடர்புகளுக்கு வசதியானதுமாகும். விஸ்தரித்துச் செல்வதற்கும் ஏறபுடைது. வடக்கு மாகாண ஆட்சி கட்டமைப்பை குடா நாட்டிற்கு வெளியே மையப்படுத்தவும் உதவும்.
புதிய பேண்தகவு நகரங்களை உருவாக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மிகச் சாதாரணமான ஒரு காரியத்தை செய்வதில் இவ்வளவு பிசகுப்படுபவர்கள் வேறு எதைத்தான் செய்வார்கள்.
விதிவிலக்காக சிலர்தான் இருக்கறார்கள்.
மற்றப்படி எரிகிற விட்டில் பிடுங்குபவர்கள் என்பது நெருடலான உண்மை
ஒருசிறிய பொருளாதாரமையத்திற்கான இடத்தை தெரிவு செய்ய வக்கில்லாதவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் என்னும் போது வெட்க உணர்ச்சி பிடுங்கித் தின்னுகிறது.
ஆயிரம் ஆயிரம் போராளிகளும் பொதுமக்களும் எந்த பிரதிபலனும் பார்காமல் மரணித்த பாரிய இழப்புக்களைச் சந்தித்த மண்ணில் அயோக்கியர்கள் திருடர்கள் பெருமளவிற்கு தலைவர்களாக மிச்சமாகியிருக்கிறார்கள்.
மக்களும் அறிந்தோ அறியாமலே இவர்களைத் தான் தெரிவு செய்கிறார்கள் .
நாடளவிய அளவிலும் பிராந்திய மட்டத்திலும் பரந்து பட்ட சமூக பொருளாதார சுற்றாடல் பற்றிய பிரக்ஞை அக்கறை -அறிவு கொண்டவர்களின் பங்களிப்பு அவசியம்

நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment