9/10/2016

ஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-31 ஆண்டுகள்


ஏறாவூர் இற்கு மகுடமாய் மக்கள் மனங்களை எல்லாம் வெற்றிகொண்டு அல்லாஹ்வை மாத்திரம் நம்பி அவனது அதிகாரத்துக்கு மாத்திரம் தலைவணங்கி முஸ்லிம் அரசியலை பாகுபாடின்றி முன்மாதிரியாய் நடத்தி தனி ஒருவனாய் சாதித்து காட்டிய ஒரு தலைவனான பரிட் மீராலெவ்வை அவர்கள் தனது 45ஆவது வயதில் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி ஆங்கில நாட்காட்டியின் பிரகாரம் இதே போன்ற ஒரு நாளில் தான் இறையடி சேர்ந்தார்கள்.


1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி உயர்ந்த வன்னியனார் பரம்பரையின் மகனாக பிறந்த அகமட் பரீட் மீராலெப்பை அவர்கள் ஆன்மீகம், அரசியல் என அனைத்து துறைகளிலும் தனிச்சிறப்பு மிக்க ஒரு தூர நோக்கான சிந்தனை மிக்க ஒருவராக மிளிர்ந்தவர்.
1965 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏறாவூர் பட்டின சபைக்கான தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பில் தராசு சின்னத்தில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று பட்டின சபையின் தலைவராக மகத்தான பணிகளை ஆற்றினார்.
அதன் பின்னர் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழலால் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு 1967இல் தனது மருத்துவ கல்வியை தொடர இந்தியா பயணமானார்.
அதன் பின்னர் 1972இல் கல்கத்தா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துறை பட்டம் பெற்ற அவர் நாடுதிரும்பி இலவச மருத்துவ சேவைகள் ஊடாக மக்கள் அபிமானத்தை வென்றெடுத்தார். 1974 இல் காத்தான்குடியை சேர்ந்த முன்னாள் ட்டினசபை தலைவரான முகம்மது காசிம் அவர்களின் மகளான ஜெஸீமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறான சூழலில் மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை செலுத்திய அவர் 1977.07.21இல் இடம்பெற்ற எட்டாவது நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு அவருக்கு எதிராக போட்டியிட்ட மிகப் பலம்பொருந்திய அரசியல்வாதி பதியுதீன் மஹ்மூத் அவர்களை தோற்கடித்து அனைத்து மக்களின் ஆதரவுடன் 25345 வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார். அந்தக்கால தேர்தலானது மிகவும் திகில் நிறைந்த அனுபவங்களையும் சுவாரசியங்களையும் கொண்டதாக பலரும் பேசி இருக்கிறார்கள்.
1977இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் 1983 இல் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவி வகித்த அன்னார் 10.09.1985 அன்று சுகவீனம் காரணமாக இறை அடி சேரும் வரை தொகுதி வாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட இவரது அரசியல் செயற்பாடுகள் மிக முன்மாதிரியானதாகவும் நேர்மையானதாகவும் அமைந்திருந்ததாக சொல்லப்டுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இவரின் சேவையும் இழப்பும் என்றுமே ஈடு செய்ய முடியாத வகிபாகத்தை வகிக்கிறது.
பாராளுமன்ற வளாகத்தினுள் முதன்முதலாக அல்குர்ஆனை கொண்டு வாதாடி முஸ்லிம் பெண் அரசாங்க ஊழியர்கள் கணவனை இழக்கின்ற போது அனுஷ்டிக்கின்ற இத்தா கடமைக்கான விடுமுறையை பெற்றுக் கொடுத்த வரலாற்று தலைவன் அவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வினைத்திறன் மிக்கதும் தூர நோக்குடனும் பல்வேறு காத்திரமான பணிகளை செய்தார் அதில் குறிப்பாக வீடமைப்பு திட்டங்களை உருவாக்கி மக்களை குடியேற்றினார் அந்த வகையில்
1977 ஏறாவூர் சுரட்டயன்குடா
1979 அனைத்து வசதிகளுடனும் கூடிய மீராகேனி வீடமைப்பு திட்டம்
1980 மிச்நகர் வீடமைப்பு
1978 காத்தான்குடி பரிட் நகர் வீடமைப்பு
1980 காத்தானகுடி கர்பலா கிராமம்
1981 உறுகாமம் &மஙகள ஓயா திட்டங்கள்.
விஷேடமாக
1980 இல் இரும்பு மனிதன் ஈராக் அதிபர் சதாம் ஹுசையினை சந்தித்து ஏறாவூர் மக்களின் துயர நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி ஏறாவூர் சதாம் ஹுசையின் கிராமம் எனும் 100வீடுகளுக்கான அனுமதியை பெற்று மேலும் பள்ளிவாசல் , குர்ஆன் மத்ரஸா மைதானம் அடங்கிய ஒரு கிராமத்தை உருவாக்கினார்.
பல வீடமைப்பு திட்டங்களுக்கும் பொது தேவைகளுக்கும் அவரின் சொந்தக் காணிகளையே மக்களுக்கு பகிர்ந்தளித்த உண்மையான மக்கள் சேவகன் அவர்.
அவரின் இடம் ஏறாவூரில் இன்னும் ஈடு செய்யப்டாமலே தான் இருக்கிறது.
ஏறாவூரின் வரலாற்றில் இவரின் நாமம் இறுதி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

நன்றி மொஹமட் அஸ்மி -முகநூல்

0 commentaires :

Post a Comment