9/17/2016

அதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத்திறனற்ற தன்மையுமே காரணம்
கிளிநொச்சி பொதுச்சந்தை தீப்பற்றி எரிந்தழிந்து விட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறிய வர்த்தகர்கள். கடனாளிகள். போரின் பாதிப்பிலிருந்தும் கடனிலிருந்தும் மீள முடியாத நிலையில் இருந்த இந்தச் சிறுவர்த்தகர்களை இப்போது தீ எரித்துள்ளது. கிளிநொச்சி சந்தை தீப்பிடித்து எரிந்தது-

இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பாளிகள் இந்தச் சந்தை கட்டப்படுவதற்கு தடையாக இருந்தவர்களே. கிளிநொச்சிப் பொதுச்சந்தை இரண்டு கட்டத்தில் நிர்மாணிக்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டது. முதலாவது கட்டத்தில் மீன் சந்தையும் மரக்கறிச்சந்தையும். இரண்டாவது கட்டத்...தில் நவீன சந்தை. இரண்டும் இணைந்த பொதுச்சந்தையென்பதே முழுமையான வடிவம். இதில் முதலாம் கட்டமாக மீன்சந்தையும் மரக்கறிச்சந்தையும் கட்டப்பட்டு, அவை இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்டமான நவீன சந்தை 210 மில்லியன் ரூபாவில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான ஆயத்த வேலைகளும் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தன. சந்தைக்கான மாதிரி உருவப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், பின்னர் ஏற்பட்ட அதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத்திறனற்ற தன்மையும் சந்தையின் நிர்மாணப்பணிகளை இல்லாமற் செய்து விட்டது. இதனால், சிறுவர்த்தகர்கள் தற்காலிகக் கொட்டகைகளிலேயே தங்கள் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்தத் தற்காலிகக் கடைகள் பாதுகாப்பற்றவை. இதை மாற்றியமைத்துத் தருமாறு அவர்கள் மாகாணசபையிடமும் பிரதேச சபையிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் ஆளுநரிடத்திலும் அரசாங்கத்திடத்திலும் கேட்டுக்கொண்டேயிருந்தனர்.
அதிகாரம் செலுத்துவதற்கும் அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கும் அவரவர் முண்டியடித்துக் கொண்டிருந்தனரே தவிர, தீர்வைக் காண்பதற்கு எவரும் முன்வரவில்லை.
இந்த நிலையிலேயே நேற்றிரவு சந்தை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், எரிகிற வீட்டில் எடுப்பது லாபம் என்றமாதிரி, இந்த அழிவின் மத்தியிலும் அவரவர் அரசியல் செய்த காட்சிகளே.
இந்தப் பேரழிவு நடைபெறாத வகையில் நிரந்தரக்கட்டிடத்தை அமைத்திருந்தால் பாதுகாப்புக் கிடைத்திருக்கும். நட்டமும் அவலமும் ஏற்பட்டிருக்காது.
இனியாவது விழித்துக்கொள்ளட்டும் சம்மந்தப்பட்டவர்கள்

நன்றி முகநூல் *கிளிநொச்சி கருணாகரன்

0 commentaires :

Post a Comment